Thursday 22 January 2015

கடவுளின் நிலைக்கு உயர முடியுமா?

தன் அண்ணன் வாலியிடமிருந்து அமைச்சர்கள் சகிதம் தப்பிய சுக்ரீவன் எங்கு சென்று பதுங்கினாலும் தன்னை வாலி துப்புறுத்தாமல் விடமாட்டான் எனக் கவலைப்பட்டான். அதனால் அவனிடமிருந்து தப்ப தனக்கு ஒரு பாதுகாப்பான இடம் அவசியம் என்பதை உணர்ந்தவன் வாலி நுழைவதற்கு 144 தடையுத்தரவு நடப்பில் இருந்த ரிஷ்யமுக பர்வத மலைக்கு வந்து சேர்ந்தான். ஒருநாள் மலையின் உச்சிக்கு வந்த சுக்ரீவன் அங்கிருந்த பம்பா நதிக்கரையில் ஆயுதங்களுடன் ஆட்களின் நடமாட்டத்தைக் கண்டதும் பதறிப் போய் விட்டான். அவர்கள் யாரெனத் தெரியாத போதும் எதையோ தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் தெரிந்தது. ஆனாலும் அவனுக்கு திருப்தி வரவில்லை. மரவுரி ஆடைகள் தரித்திருந்த அவர்களின் தோற்றமும், உடற்கட்டும் சுக்ரீவனை சந்தேகப்பார்வை கொள்ள வைத்தது. அண்ணன் வாலியின் உளவாளிகளாய் இருப்பார்களோ? என யோசித்தவன் தன்னிடம் அமைச்சராக இருக்கும் அனுமனை அழைத்து உடனடியாக மாறு வேடமிட்டுச் சென்று வந்திருப்பவர்கள் யார்? என அறிந்து வா என உத்தரவிட்டான்.

வந்திருப்பவர்கள் ஆயுதம் தாங்கிகளாக இருப்பதால் ஏதாவது ஒரு வேடத்தை நாம பாட்டுக்கப் போட்டுட்டுப் போய் அவனுக பாட்டுக்க நம்மளைப் போட்டுத்தள்ளிட்டு போயிட்டானுகன்னா என்ன செய்றது? என யோசித்த அனுமன் எவ்வளவு பெரிய வல்லனும் எளிதில் தாக்க யோசிக்கும் அந்தணர் வேடமிட்டு அவர்கள் முன் வந்து நின்றார். ஏம்பா………..உங்களைப் பார்த்தால் எதையோ தேடிக் கொண்டிருப்பவர்கள் போல் தெரிகிறதே. நதிக்கரையில் வந்து என்ன தேடுகிறீர்கள்? யாரைத் தேடுகிறீர்கள்? நீங்க அணிந்திருக்கிற ஆடைக்கும், உங்களுக்கும் சம்பந்தமில்லாதது மாதிரி இருக்கே? நீங்கள் யார்? எனக் கேட்டார்.

நாங்கள் அயோத்தியில் இருந்து வருகிறோம். என் தந்தை கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காக நானும், என் மனைவியும் வனவாசம் கிளம்பி வர எங்களுக்குத் துணையாக என் தம்பியும் வந்தான். அப்படி வந்த இடத்தில் என் மனைவி சீதாதேவியை மாரீசனின் வித்தையால் இராவணன் ஆட்டையப் போட்டுட்டு போய்விட்டான். அவளைத் தேடித் தான் இப்பகுதிக்கு வந்திருக்கிறோம்  என இராமர் சொன்னதும் அனுமன் தன் அந்தணர் வேடத்தைக் கலைந்து சுயரூபத்தில் நின்று அவர்களை வணங்கினார்.

அடடா…...வந்த இடத்தில் உங்களுக்கு வந்தப் பிரச்சனை மாதிரியே தான் வாழ்ந்த இடத்தில் எங்களின் அரசன் சுக்ரீவனுக்கும் ஒரு பிரச்சனை. அவனுடைய நாட்டையும், மனைவியையும் அவன் சகோதரன் வாலி அபகரித்துக் கொண்டு விரட்டியடித்து விட்டான். அவனுக்குப் பயந்து தான் இங்குள்ள மலையில் எங்கள் அரசன் தங்கி இருக்கிறான் எனச் சொல்லி சுக்ரீவனிடம் அவர்களை அழைத்துச் சென்றான்.

இராமர் சுக்ரீவனிடம் உங்களின் உதவி தேவை எனக் கோரிக்கை வைக்க சுக்ரீவனும் பதிலுக்கு ஒரு கோரிக்கையை வைத்தான். அதன்படி வாலியைக் கொன்று சுக்ரீவனை மீண்டும் அரசனாக்க இராமரும், அதற்குப் பதிலுதவியாக இராமரின் மனைவியைக் கண்டு பிடித்துத் தர சுக்ரீவனும் உதவுவது என ஒப்பந்தம் முடிவானது.

பதிலுக்குப் பதில்என்ற ஒப்பந்த சரத்துப்படி வாலியைப் போட்டுத்தள்ள இராமர் முடிவு செய்தார். ஆனால் அதை அவரால் எளிதாகச் செய்ய முடியவில்லை. காரணம் வாலி பெற்றிருந்த ஒரு வரம். போரில் தன் எதிரில் வந்து நிற்பவனின் பலத்தில் பாதி தனக்குக் கிடைக்கும் படியான வரத்தை வாலி பெற்றிருந்ததால் அவனை நேருக்கு நேர் சந்தித்துக் கொல்லுவது சாத்தியமில்லை என்ற நிலையில் வேறு என்ன செய்யலாம்? என இராமர் யோசித்தார். ”மந்திரம் பலிக்காத இடத்தில் தந்திரம் பலிக்கும்என்ற நியதிப்படி வாலியை வீழ்த்த முடிவு செய்த இராமர் சுக்ரீவனும், வாலியும் போர் செய்யும் சமயத்தில் ஒரு மரத்திற்கு பின் மறைந்திருந்து தந்திரமாய் அம்பெய்து வாலியைப் போட்டுத் தள்ளினார். போடனும்னு முடிவு செஞ்சதுக்கு அப்புறம் நெத்தியில போட்டா என்ன? நெஞ்சுல போட்டா என்ன? கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் விதமாக வாலியின் கதையை இராமர் முடித்தார்

களத்தில் நேருக்கு நேர் எதிர் கொள்வது தான் ஒரு வீரனுக்கு அழகு என்ற நிலையில் தன்னுடைய இந்தச் செயல் தனக்கும், தன் புகழுக்கும் தீராத கலங்கத்தைத் தரும் என இராமருக்குத் தெரியாமலா இருந்திருக்கும்? வாக்குறுதியா? போர் நியதியா? என யோசித்தவர் எல்லாவற்றையும் விட கொடுத்த வாக்கு முக்கியம் என நினைத்தார். வாலியை வீழ்த்தினார். வாலி இன்னொருத்தனின் மனைவியை அபகரித்த பாவி என்பதால் அவன் அழிக்கப்பட வேண்டியவன். அவனைக் கொன்றதைக் கொண்டாட வேண்டுமேயொழிய கொன்ற முறை சரியா? தவறா? என்றெல்லாம் வியாக்கானம் பண்ணக்கூடாது என்பது சிலரின் வாதம். ”கருத்துச் சொன்னா கேட்டுக்கனும். ஆராயக்கூடாதுஎன்பது ஆரோக்கியமானதா? இல்லையா? என்பதையெல்லாம் பட்டிமன்ற நடுவர்களின் முடிவுக்கே விட்டு விட்டு நம்ம விசயத்துக்கு வருவோம்.

சுக்ரீவனும் இராமருக்கு கொடுத்த வாக்குறுதிப் படி உதவினான். அவனால் இராமருக்கு உதவியாக அனுப்பப்பட்ட ஒருவன் பின்னாளில் அவரின் பரம பக்தனாக, சேவகனாக மாறிப்போனான். அந்தச் சேவக பக்தன் அனுமன்! கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் முயற்சியில் சுயம் சார்ந்த விசயங்களைப் பார்க்கக்கூடாது என நினைத்து சுக்ரீவன் என்ற குரங்கரசனுக்கு உதவிய  இராமர் உயிரற்ற கல் குன்று ஒன்றிற்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காக எடுத்த இன்னொரு அவதாரம் தான்கிருஷ்ணவதாரம்”! இராமர் கிருஷ்ணராய் மறுபிறவி எடுத்துவரக் காரணமான அந்தக்குன்றின் பெயர்கோவர்த்தனகிரி மலை”!

இராமருக்கும், இந்த மலைக்கும் தீர்க்கப்படாத பழைய பாக்கி ஒன்று இருந்தது. ”விட்ட குறை தொட்ட குறைஎன்பார்களே அதுபோல இராம அவதாரத்தில் விட்ட குறை தான் கிருஷ்ணவதாரத்தில் நிறைவடைந்தது! இந்திரன் மதுரா நகர் மக்கள் மீது கொண்ட கோபத்தால் அடைமழையை பெய்விக்க அதிலிருந்து அந்நகர மக்களைக் காப்பதற்காகக் கிருஷ்ணர் கோவர்த்தனகிரி மலையை தூக்கிப் பிடித்து அதன் கீழ் மக்களையும், ஆடு, மாடுகளையும் நிற்க வைத்து காப்பாற்றினார் என கிருஷ்ணவதாரத்தில் ஒரு கதை உண்டு. கடவுள் மக்களைக் காப்பது கடமையில்லையா? இதுல என்ன விசேசம் என்கிறீர்களா? விசேசம் கடவுள் காப்பாற்றியது அல்ல. கடவுளுக்கும், அந்த மலைக்குமான முந்தைய உறவு!

கிருஷ்ணர் தன் ஒற்றை விரலில் தூக்கி நிறுத்திய கோவர்த்தனகிரி மலைக்கு ஒரு நெடிய கதை உண்டு. சேதுபாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. அதற்காக மிகப் பெரிய கற்கள், குன்றுகள், பாறைகள், வேரோடு பிடுங்கப்பட்ட மரங்கள் என எல்லாப் பக்கங்களிலிருந்தும் வானரங்களால் கொண்டுவந்து சேர்க்கப்பட்டன. பெருங்கற்கள் எல்லாம் இமயமலையிலிருந்து பெயர்த்து எடுத்து கொண்டுவரப்பட்டன. அப்படி அனுமனால் தூக்கி வரப்பட்ட ஒரு குன்றுதான் கோவர்த்தன கிரிமலை!

இமயமலையில் சிறுகுன்றாய் இருந்த கோவர்த்தன கிரிமலையை அனுமன் தன் பலம் கொண்ட மட்டும் தூக்க முயன்றும் முடியவில்லை. உடனே அவர் இராமகாரியத்திற்கான பணியில் ஈடுபட்டிருக்கும் என்னோடு நீ வருவதால் இராமரின் தரிசனம் பெறும் பலனை அடைய முடியும். அவரின் அருள் கிடைக்க வேண்டுமானால் உன் பலத்தைக் குறைத்துக் கொண்டு என்னோடு வா என்றழைத்தார். உடனே கோவர்த்தனகிரி மலையும் தன் பலத்தைக் குறைத்துக் கொண்டு அனுமனுடன் கிளம்பியது. மலையோடு அனுமன் வரும் வழியில் மற்ற வானரங்கள் செய்ய வேண்டிய வேலைக்கான உத்தரவை பிறப்பித்துக் கொண்டிருந்த ஜாம்பவான் பாலம் கட்டும் பணி முடிவடைந்து விட்டதால் இனி கட்டுமானப் பொருட்களை கொண்டுவர வேண்டாம் என இராமபிரான் கூறிவிட்டார் என  அனுமனிடம் சொன்னார்.

தலைவனின் உத்தரவை சிரமேற்கொண்டு செயல்படுத்தும் அனுமன் அந்தத் தகவலைக் கேட்ட அடுத்த நொடி தான் தூக்கி வந்த மலையை அந்த இடத்திலேயே இறக்கி வைத்தார். நதிக்கரையோரம் தன்னை இறக்கிவிட்டு கிளம்பப் போன அனுமனிடம் என்னை இராமதரிசனத்திற்காக அழைத்துச் செல்வதாய் சொன்னதால் தான் இமயமலையிலிருந்து வந்தேன். நீயோ இப்படி இடையிலேயே விட்டு விட்டுப் போனால் என்ன அர்த்தம்? எனக் கேட்டது.

சங்கடமான சூழலாகிவிட்டதை உணர்ந்த அனுமன் தலைவரின் உத்தரவுக்கு கீழ் படிய வேண்டியது என் கடமை. அதிலிருந்து என்னால் விலகவே முடியாது. அதனால் உன்னை இங்கு விட்டுப் போவதைத்தவிர எனக்கு வேறு வழியில்லை, ஆனால், இந்த விசயத்தைத் தலைவரின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறேன் என அனுமன் கூறினார். சொன்னபடியே தலைவர் இராமரைச் சந்தித்து நிகழ்ந்தவைகளைக் கூறினார். தொண்டனுக்கு ஒரு நெருக்கடி என்றால் அதைப் பார்த்துக் கொண்டிருப்பது நல்ல தலைவனுக்கு அழகில்லை என நினைத்த இராமர் உன் வாக்குறுதியை நான் நிறைவேற்றுவேன். கவலைப்படாதே எனக் கூறினார்.

பாலம் கட்டும் பணி தான் முடிவடைந்து விட்டதே! அப்புறம் எப்படி? என்றார் அனுமன்.

அடுத்த யுகத்தில் நான் பிறவி எடுப்பேன். நீ தூக்கி வந்த மலையை எங்கு இறக்கி வைத்தாயோ அதே இடத்தில் தான் வளர்வேன். அப்பொழுது என்னை நம்பி வந்த மலைக்கு நீ கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்றார். இந்தத் தகவல் உடனடியாக அனுமன் மூலம் கோவர்த்தனகிரி மலைக்குச் சொல்லப்பட்டது. தன்னை நம்பி தன் பக்தன் கொடுத்த வாக்குறுதிக்காக சொன்ன சொல் தவறாமல் அடுத்த யுகத்தில் கிருஷ்ணராய் அவதரித்த இராமர்  தன் விரலால் தூக்கி நிறுத்தி மலையை ஆசிர்வதித்தார். இன்னைக்கு அனுமன் மாதிரி பக்தர்களுக்கு பஞ்சமில்லை. ஆனால் இராமர் மாதிரி தலைவர்களுக்குத் தான் பஞ்சம் நிலவுகிறது!!.

கொடுத்த வாக்குறுதியை மீறாமலும், அவசியம் ஏற்பட்டால் யுகம் கடந்து வந்தேனும் கொடுத்த வாக்குறுதியை நிறைவு செய்கிறான் கடவுள். மனிதர்களாக நாமோ கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுகிறோமா? காப்பாற்றாவிட்டாலும் பொய்யான வாக்குறுதிகளையாது கொடுக்காமல் இருக்கலாமே! அப்படி இருந்தாலே போதும். இந்த நாளை மட்டுமல்ல எல்லா நாளையும் இனிய நாளாக்கிக் கொள்ளவும், அந்தக் கடவுளின் நிலைக்கு நம் வாழ்க்கையை நகர்த்திக் கொள்ளவும் முடியும். அதெப்படிங்க மனிதன் தெய்வநிலைக்கு வர முடியும் என்கிறீர்களா? கடவுள் மனித நிலைக்கு இறங்கும் போது மனிதன் மட்டும் கடவுள் நிலைக்கு உயர முடியாதா என்ன?!

நன்றி : வல்லமை.காம்