Monday, 17 August 2015

மெளன அழுகை – 5

2013 - ம் ஆண்டு  சிங்கப்பூரின்  “கோல்டன் பாயிண்ட்”  விருதைத் தனது  கவிதைக்காகப்  பெற்ற  சிங்கப்பூரில் வசிக்கும் கவிஞர் பிரேமா மகாலிங்கம் அவர்கள் என் “மெளன அழுகை” கவிதைத் தொகுப்பிற்குத் தந்திருக்கும் விமர்சனம்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மௌன அழுகைஎன்ற கவிதை நூலை வாசித்த பிறகு நூலாசிரியரைப் பற்றிய எனது பார்வையில் சிறிது மாற்றம் ஏற்பட்டது நிதர்சனம். கட்டுரையாளர், நூல் விமர்சகர், எளிமையான மனிதரானாலும் எதையுமே ஆழமாக, அறிவுப்பூர்வமாக அணுகும் அவரின் இலக்கியப் பார்வையைச் சக வாசகர் வட்ட எழுத்தாளராக சற்றே அறிவேன்.
உங்கள் கவிதைகளில் குழந்தைகளுக்கும் இடம் தாருங்கள்என்று குழந்தைகளுக்காக குரல் கொடுத்த கவிஞர், அவரின் ஆத்மார்த்தமான புலம்பல்களைமௌன அழுகைஎன்ற கவிதை நூலின் வழி நம்மோடு பகிர்ந்திருக்கிறார். அனைத்து சமூக சாலைகளையும் பேனா முனை பிடித்து தனது கவிதைகளின் வழி நீரோடும் நெருப்போடும் கடந்து வந்திருக்கிறார் நூலாசிரியர்  கோபி சரபோஜி.

நகர்புற வருகையால் மறையும் கிராம புறங்களை 'மறுதலித்தலின் கோபம்' என்ற கவிதை வரிகளின் வழி நினைவில் நிறுத்துகிறார்.
முளைக்க வைக்கும் கல் மரத்தால்
 தன் இனத்தின் உறைவிடமும்
 இயற்கையின் வனப்பும்
 மழையின் வருகையும்
 மண்ணின் வாசமும்
மறுதலிக்கப்படுவதை
மன்னிக்க முடியாத பெருங்கோபத்தில்” - ஓலமிடுகிறது சாக்குருவி. ஓலமிடுவது சாக்குருவி மட்டுமல்ல, ஒவ்வொரு ஏழை விவசாயியின் ஒட்டிய வயிறுகளும்தான்.
தடம்என்ற கவிதையில் இப்படியாக தனது வருத்தத்தைப் பதிவிட்டிருக்கிறார்...
"உழுது விதைத்து
உயிர் வளர்க்க
உணவு தந்தவனின்
வறுமை தடவிய
வியர்வை ரேகைகள்"
எதிர்கால கனவுகளுக்குப் பணயம் வைப்பது நிகழ்காலத்தை என்ற கசப்பான உண்மையைத் தவறிப்போன இளமைஎன்ற கவிதையில் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்.
திரைகடல் ஓடியதில்
மிச்சமாய் இவை நிற்க,
எச்சம் தேடி அலைகிறது
தவறிப்போன இளமை"
மேலும், "இத்தனையும் கடந்து நகர்ந்து போகின்றேன், அக்கரை தேசத்திற்கு பரதேசியாய்" என்று குடும்பத்தை தாய்நாட்டில் விட்டு அயல்நாட்டில் அனாதைகளைப் போல வாழும் ஒட்டுமொத்த ஆண்களின் குரலாய் ஒலிக்கிறார்பரதேசிஎன்ற கவிதையில்.
நிம்மதி தேடிகோவிலுக்குப் போனாலும், அங்கேயும் இறைவனுக்கும், மனிதனுக்கும் இடையில் நந்தியாக கோவில் அர்ச்சகர் என்றும், தன்னைப் பின் நிறுத்திய வார்த்தைகளுக்காகவும் யுகங்கள் தோறும் காத்திருக்கின்றனர் கவிஞனும் கடவுளும்என்ற கவிதையிலும்கடவுள் மட்டும்தான் சோதிப்பானா? சமயங்களில் மனிதனும் சோதிப்பான் கடவுளை" என்றுகடவுளுக்கு வந்த சோதனைகவிதையிலும் இறை தத்துவங்களை, நகைச்சுவை இழையோட சொல்லியிருக்கும் விதம் நன்று.
இவரின் பார்வையில் பெண்களுக்கும் இடமுண்டு, குழந்தைகளுக்கென ஓர் உலகமுண்டு, தாத்தாவுக்கும் முக்கியத்துவமுண்டு. சமூகத்தால் நிராகரிக்கப்பட்டு இருட்டுக்குள் மட்டுமே விலைபோகும் பெண்களுக்கும் இவர் பேனா முனை பேசும் என்பதை "மலடியாகவே" என்ற கவிதையில் நிரூபித்திருக்கிறார்.
"கடை விரித்துக் காத்திருப்பவளிடம்
புதைந்துக் கிடக்கிறது
பல புணர்தலுக்குப் பின்னும்
மலடியாகவே மலரும் தந்திரம்" சூசகமாய் சொல்கிறார்.
தலைவனின் தந்திரமும், தொண்டனின் தரித்திரமும் தன்னைத் தீண்டிடாத தனித்துவத்தோடு தன் போக்கில் நகரும் நதிபோல அவரது பார்வையும் நீள்கிறது. கிளி ஜோசியம் பார்ப்பது கிளிகளுக்காகத்தான் என்ற மனிதநேயமும்
பறவைகளும் இறைவனின் படைப்பில் விவசாயிகள் என்ற எதார்த்த பார்வையும் - நகர வாழ்க்கையில் ஒன்றிடாத கிராமத்து விதை, மௌன அழுகையாக வெடித்துக் கவிதையாக முளைத்திருக்கிறது நூலாசிரியரின் கைவண்ணத்தில்.
இவரது மௌன புலம்பல்கள் பொய்த்துப் போகட்டும். மண்ணும், நீரும், உரமும், எவரும் இடாமலே கொழுகொம்பின்றி உயிர் பிடித்து பாறையிடுக்கில் எழுந்து நிற்கும் அந்தச் சின்னச் செடி போன்று இவரது சிந்தனைகளும் வேர் பிடித்து, கிளை பிரிந்து பல்வேறு சிகரங்களைத் தொடும் என்ற நம்பிக்கையோடு வாழ்த்துகிறேன். இவரது இலக்கியப் பயணம்நேர்கோட்டில் ஊர்ந்து செல்லும் எறும்புகளைப்போல சிதறாமல் பயணிக்கஇறைவன் அருள் புரியட்டும். வாழ்க வளமுடன்.