Friday 21 August 2015

சிறியன செய்கிலாதார்

திருக்குறும்பலாயீசன் பல்கலைக்கழகத் தமிழ்துறைத் தலைவராக இருக்கும் பேராசிரியர் பூரணலிங்கனுக்குடாக்டர். பூரணலிங்கனார்என்று போட்டுக்கொள்ள ஆசை வருகிறது. அதற்காக அவர் மேற்கொண்ட ஆய்வு மற்றும் அதன் தொடர்ச்சியான நிகழ்வுகளின் மூலமாக அவர் டாக்டர் பட்டம் வாங்கியதை எதார்த்த நையாண்டிகளின் வழியே சொல்லும் கதைசிறியன செய்கிலாதார்”. இக்கதையின் ஆசிரியர் நாஞ்சில் நாடன்.

டாக்டர் பட்ட ஆய்வு மேற்கொள்ளப் போகும் பலருக்கும் இருக்கக் கூடிய எதிர்பார்ப்பு மனநிலையைத் தன் நகைச்சுவை நடையில் சுவராசியமாக்கும் ஆசிரியர்சம்பந்தப்பட்டவர் பழக்கூடை, பட்டுப்புடவை, ஃபேன், மிக்ஸி, பிரஷ்ஷர் குக்கர் என்ற ரீதியில் மரியாதை செய்து விட்டுப் போவார். போகும் போது பூரணலிங்கனாரின் நாற்பத்தேழு நூல்கள் அடங்கிய ஒரு செட் வாங்கிப் போவார். ஆய்வு தேறிவிடும்என்ற வரிகளில் பல்கலைக்கழகத்திற்கு வரும் ஆய்வேடுகள் தேறும் அவலத்தையும், அதற்காகப் பேராசிரியர்கள் பெறுகின்ற வெகுமதிகளையும் அழகாகத் தோலுரித்துக் காட்டுகிறார்.

தன் ஆய்வேட்டை பல்கலைக்கழகம் அங்கிகரிக்காத நிலையில் மூல பவுத்திரத்துக்கு மருந்து வாங்க வந்த இடத்தில் அந்த மருத்துவரோடு ஆலோசித்து எர்ர குண்டலா நாட்டு வைத்தியக் கழகத்தில் இருந்து ஓராண்டு படிப்பில் டாக்டர் பட்டம் பெற்று டாக்டர் பூரணலிங்கனார் என்றாகித் தன் ஆசையைத் தீர்த்துக் கொள்கிறார். டாக்டர் என்ற அடைமொழியோடு அச்சடிக்கப்பட்ட தன் லெட்டர் ஹெட்டில் காரணமின்றி நல விசாரிப்புக் கடிதங்கள் எழுதி தான் டாக்டர் பட்டம் பெற்றிருப்பதை பலரும் அறியும் படிச் செய்கிறார். அதன் பொருட்டு வந்த வாழ்த்துகளைப் பார்த்துப் பொறுக்க மாட்டாமல் அவரை அழைத்து விபரம் கேட்ட துணைவேந்தர்டாக்டர்என அவர் அடைமொழி இட்டுக் கொள்வதை தன்னால் மட்டுமல்ல இனி எநத சக்தியாலும் தடுக்க முடியாது என நினைத்து அவருடைய ஆய்வேட்டிற்குப் பல்கலைக்கழக அங்கீகாரத்தை அளிக்க முடிவு செய்கிறார்.

துணைவேந்தரின் இந்த முடிவுக்கு மூல பவுத்திர சிகிச்சைக்காக பூரணலிங்கன் பெற்றிருந்த டாக்டர் பட்டம் தான் காரணம் என்று நினைக்கும் போதே தன் ஆய்வேட்டை பல்கலைக்கழகம் அங்கீகரிக்க வேண்டும் என்பதற்காக அவர் மேற்கொண்ட ராகஜதந்திரமாக இருக்குமோ? என்ற ஐயமும் கூடவே எழுகிறது.

மகள் பேறுக்கு வந்திருக்கும் சமயத்தில் தாய் கர்ப்பம் என்பது போல”, ”முலைக்குப் பதில் வேண்டுமானால் ஒரு விதையைத் திருகி எறியலாம். ஒரு விதை குறைந்த பூரணலிங்கன் என்ற அடைமொழி கிடைக்குமேயொழிய தீப்பற்றாதுபோன்ற நாஞ்சில் நாடனுக்கே உரியடச்சோடு  நகரும் கதை தன் பெயருக்கு முன் போட்டுக் கொள்ளும் பட்டங்களைப் பெறுவதற்காக நிகழும் பிரயாத்தனங்களை நம் முன் நகைச்சுவையாய் விரித்துப் போகிறது,

ஆசிரியர்  : நாஞ்சில் நாடன்

    கதை   :  சிறியன செய்கிலாதார்

வெளியீடுவிஜயா பதிப்பகம்