வலைப்பதிவர் நா.முத்துநிலவன் அவர்கள் தன்னுடைய வலைப்பக்கத்தில் ஆரம்பித்து வைத்த அகல்விளக்கின் கனல் இன்று பல வலைப்பதிவர்களின் பக்கங்கள் வழியாக ஒரு தீபமாய் சுடர் விட்டுக் கொண்டிருக்கிறது. அறிந்த பதிவர்களை மீள் நினைவு கொணரவும், புதிய பதிவர்களை ஒருவருக்கொருவர் அறிந்து கொள்ளவும் அந்தத் தீப ஒளி பயன்பட்டு வந்தது – வருகிறது. அந்த வகையில் வலைப்பக்க எழுத்திற்குக் கத்துக்குட்டி என்ற வகையில் நான் வாசிக்கும் நண்பர்களின் வலைப்பக்கங்கள் குறித்து எழுதியதன் தொடர்ச்சியாய் முகவரிகளின் முகவரியின் இரண்டாம் பகுதி –
புதியவன் பக்கம் : ஷாஜஹான் அவர்களின் வலைப்பக்கம். முகநூலில் தான் அறிமுகம். முகநூலிலேயே பெரும்பாலும் வலைப்பக்கத் தகவல்களை வாசித்து விடுவேன். பின்னர் நேரம் வாய்க்கும் போது மட்டும் வலைப்பக்கத்தின் வாசல் பக்கம் செல்வதுண்டு. சென்னை வெள்ள சமயத்தில் இவர் அரசாங்கத்திற்கு வைத்த கோரிக்கைகளும், அதை அரசு ஏற்று செயல்படுத்திய விதமும் ஒரு தனிமனிதன் முறையான எதிர்பார்ப்பற்ற கோரிக்கையை முன் வைக்கும் போது அதை எப்படிப்பட்ட அரசும் மறுக்க முடியாது என்பதை உணர வைத்தது. போகுமிடமெல்லாம் அன்பை விதைப்போம் என்ற வாசகத்தை தனதாக்கி அதற்குள் எல்லோரையும் இழுத்து வருபவர். கல்வி உதவிகள் சார்ந்து இவரின் முயற்சிகளுக்கு நீளும் கரங்கள் இவரின் செயல்பாட்டுத்தன்மையைச் சொல்லி விடும். ஒரு கட்டுரையை எழுதும் போது அதற்கான தரவுகளை முழுமையாக முன்னிறுத்தி எழுதுவார். சமீபத்திய இவரின் பதிவுகளில் கன்னையா குமாரின் தமிழ் மொழியாக்கக் கட்டுரை, விதர்பா விவசாயிகள் தற்கொலை சார்ந்த கட்டுரை மிக முக்கியமானவை. அச்சில் வந்திருக்கும் இவரின் எழுத்துக்களை வாசித்து விட வேண்டும் என்பது பெரு விருப்பம்.
நோக்குமிடமெல்லாம் : இரா. எட்வின் அவர்களின் வலைப்பக்கம், தெய்வங்களுக்குச் சொல்லித் தந்தவன் என்ற ஒரு கட்டுரையின் வழியாக இந்த வலைப்பக்கத்தைக் கண்டடைந்தேன். வாசித்துக் கடக்கும் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு தகவலை, புத்துணர்வை, நாம் மீட்டுருவாக்கும் செய்து கொள்ள வேண்டிய விசயங்களைப் பெற முடியும். அன்பு, அக்கறை அதே நேரம் அவசியமான இடங்களில் கண்டிப்பு என பல சமூக, கல்வி, அரசியல் சார்ந்து வலைப்பக்கத்தில் எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகள் பொக்கிஷங்கள், சமீபத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் படும் கஷ்டங்கள் குறித்து உங்களின் நடையில் ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்ற என் கோரிக்கைக்குச் செவிசாய்த்ததோடு மட்டுமல்லாமல் அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த உரையாடல்கள் என்னுள் இன்னும் ஈரம் உலராமல் இருக்கின்றன.
தேன்மதுரத் தமிழ் : வி.கிரேஸ் பிரதிபாவின் வலைப்பக்கம். புதுக்கோட்டை வலைப்பதிவர் விழா சமயத்தில் இவரின் வலைப்பக்கம் பற்றி அறிந்தேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் உள் நுழைந்ததும் கவிதைகளைத் தான் வாசிப்பேன். சிறிய அடிகளில் – சீரிய கருத்துகளில் எழுதும் இவரின் கவிதைகளும், தகவல்கள் பகிர்வுக் கட்டுரைகளும் எப்பொழுதும் வாசிக்க சுகனுபானவை. தினமணி கவிதைமணியில் படைப்புகள், கவிப்பேராசான் மீரா விருது ஆகியவைகள் இவரின் கவித்திறனுக்குச் சான்று. இவரின் நூலை இன்னும் வாசிக்கவில்லை, வாய்ப்பிருப்பின் வாசித்துப் பார்க்க வேண்டும். இவரின் பக்கத்தில் இப்பொழுது தான் பயணம் செய்ய ஆரம்பித்திருக்கிறேன், என்னோடு நீங்களும் தாராளமாய் வரலாம்.
சின்னவள் : ராகசூர்யாவின் வலைப்பக்கம். கவிஞரும், என் தோழியுமான சுவாதியின் மகள் (இப்படியான அடையாளம் தேவையில்லை!) என்பதை நிருபிக்கும் எழுத்து நடை. நேருக்கு நேர் இருந்து பேசுவது போன்ற வசீகர எழுத்தில் அனாசியமாக பதிவுகளை எழுதி இருக்கிறார். ஓவியம், கவிதை, கட்டுரை என அவர் அடுக்கி இருக்கும் பக்கங்களில் பயணித்து முடிக்கும் போது நம் வீட்டுக்குழந்தைகளோடு பேசிய உணர்வை நிச்சயம் உணரலாம். இப்போது நேரம் ஒதுக்க முடியா விட்டாலும் வருங்காலத்தில் தொடர்ந்து எழுதுங்கள் சூர்யா.
மின்னற்பொழுதே தூரம் : ஆர். அபிலாஷ் அவர்களின் வலைப்பக்கம். நீரிழிவு நோய் குறித்து பேசிக் கொண்டிருந்த போது சிங்கப்பூரின் பன்முகப் படைப்பாளி ஷாநவாஸின் மூலம் இவரின் வலைப்பக்க அறிமுகம் கிடைத்தது. விமர்சனங்கள், விளையாட்டு, சமூகம், இலக்கியம் சார்ந்து விரிந்து இருக்கும் இவரின் வலைப்பக்கக் கட்டுரைகள் அனைத்துமே தீவிர தேடலின் தகவல்களால் கட்டமைக்கப்பட்டிருப்பது சிறப்பு, நுனிப்புல் தகவல்களால் இட்டு நிரப்பாமல் எழுதப்பட்டிருக்கும் இவரின் ஒவ்வொரு கட்டுரைகளும் நமக்குப் புதிய வாசிப்பனுபவத்தையும், திறப்பையும் தரக்கூடியவைகள்.
கரந்தை ஜெயக்குமார் : கரந்தை ஜெயக்குமார் அவர்களின் வலைப்பக்கம். மின்னூல் சார்ந்த முயற்சிகளுக்காக இணையத்தில் உலாவிக் கொண்டிருந்த சமயத்தில் இவரின் இராமானுஜர் மின்னூல் வழியாக இந்த வலைப்பக்கத்தை வாசிக்க ஆரம்பித்தேன். வாசிக்க வருபவனை அதிலிருந்து விலகாமல் வைத்திருப்பதில் தான் ஒரு எழுத்தாளனின் திறமை அடங்கி இருக்கிறது என்பார்கள், அதை இவரின் ஒவ்வொரு பதிவிலும் உணர முடியும். பயணங்கள் சார்ந்து எழுதும் கட்டுரைகளில் அந்த இடங்கள் சார்ந்து, இவர் சொல்லும் பிற தகவல்களுக்காகவே வாசிப்பதுண்டு. ஒரு கலவையான வாசிப்பை விரும்புகிறவர்கள் இவரின் வலைப்பக்கங்களுக்குள் உலாவித் திரியலாம்.
பல நேரங்களில் ஓசிக் கணினியில் வலைப்பக்கங்களை வாசிப்பதாலும், மொபைலில் வாசிப்பதாலும் பின்னூட்டங்களை இட முடிவதில்லை. இதை அவ்வப்போது தன் கணினியை இரவல் தரும் ஒரு நண்பரிடம் சொன்ன போது சற்றே எரிச்சலுடன், ” எழுதுறவங்க நீ பின்னூட்டம் எழுதலைன்னு ஒன்னும் கவலைப்பட மாட்டாங்க” என்றார். ஓசியிலயே ஒப்பேத்திடலாம்னு நினைச்சா இப்படியான அவஸ்தைகளையும் அனுபவிக்கத் தான் வேண்டி இருக்கும். என்ன செய்ய? என்ன பாடுபட்டாவது இந்த வருடத்திற்குள் சொந்தமா ஒரு கணினி வாங்கி விட வேண்டும் என நினைத்துக் கொண்டேன். என் சோகம் என்னோடு போகட்டும். விட்டுத் தள்ளுங்கள்.
இவைகள் தவிர இன்னும் சில வலைப்பக்கங்களில் இப்பொழுது தான் மெல்ல நுழைய ஆரம்பித்திருக்கிறேன். நேரம் வாய்க்குமானால் அவைகள் குறித்து பின்னர் எழுதுகிறேன், நீங்களும் அவ்வப்போது இப்படியான பதிவுகளின் வழி வலைப்பக்கங்களை அறிமுகப்படுத்துங்கள்.