பத்மலால் பாவரியா தானிய வாணிபம் செய்பவன். ஒழுக்கக் கேடுகள் நிறைந்தவன். காங்கிரஸ் பெரும் புள்ளி ஒருவரின் கைப்பாவையாகச் செயல்படும் ரவுடி. கல்லூரி செல்லும் நேரம் போக கம்யூனிஸ்ட் கட்சியின் இயக்க நடவடிக்கைகளில் ஈடுபடுவது, கட்சியின் புத்தகங்கள், பத்திரிக்கைகள் விற்பது என செயல்படுபவள் கீதா. எதிர்பாராத சந்திப்புகளால் இருவருக்குமிடையே பழக்கம் ஏற்படுகிறது. பாவரியா ஒழுக்கங்கெட்டவனாக இருந்த போதும் கீதாவிடம் கண்ணியமாகவே நடந்து கொள்கிறான். இயக்கத்தைப் பற்றிக் கூறி ஏதாவது நல்ல விசயத்திற்கு இவனை திருப்பி விடலாம் என கீதா நினைக்கிறாள். அதில் வெற்றி பெற்றாளா? என்பதே நாவல்.
பாவரியாவை நல்வழிக்கு திசை திருப்பும் நோக்கில் கீதா செய்யும் முயற்சிகள் பற்றி அவளின் கட்சித் தோழர்கள் எழுப்பும் கேள்விகள், கட்சிக்காக அவனிடமிருந்து அவள் பெற்றுக் கொடுத்த நிதி குறித்து தோழர்களிடையே நிகழும் கடும் விவாதங்கள், பாவரியாவுடனான நட்பு குறித்து கட்சியின் மாநிலக்குழு கீதாவிடம் செய்யும் விசாரணைகள் வழியாக கம்யூனிஸ்ட்டின் இயக்கச் செயல்பாடுகள், நிதி வசூலிப்பதில் வைத்திருக்கும் கொள்கைகள், கட்சியின் அடிப்படை உறுப்பினருக்கு இருக்க வேண்டிய ஒழுக்க நெறிகள் ஆகியவைகள் குறித்து யஷ்பால் நமக்குத் தெளிவுபடுத்தி விடுகிறார். தனித்து தெரியாத வகையில் இவைகள் நாவலின் இழையாகவே பிணைந்து செல்கிறது.
இந்திய சுதந்திரத்தின் ஆதர்ச முகம் என சொல்லிக் கொள்ளும் காங்கிரசுக்கு இருந்த செல்வாக்கு, அதன் பின் புலம், அவர்களோடு இயக்கம் கண்டிருந்த கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் மீது அவர்கள் காட்டிய காழ்ப்புணர்ச்சி, அதற்காக அவர்கள் பயன்படுத்திய ரவுடியிசம், இந்திய பிரிவிணையில் இருந்த முரண்கள் ஆகியவைகளும் நாவலுக்குள் சரடுகளாய் இருக்கின்றன.
இந்திய சுதந்திரம் என்றால் அது காங்கிரசின் இலட்சினையாக மட்டுமே இருக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி தலைவர்கள் நினைத்தனர். அதைச் செயலாக்க, சுதந்திர களத்தில் இரத்தம் சிந்தி போராடிய பலரின் முகங்களை மறைக்க அவர்களுக்கு ”அஹிம்சை” உதவியது அல்லது அதைப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதே வரலாறு பதிவு செய்திருக்கும் உண்மை. தவிர, பணபலம் மிக்கவர்கள் மனநிலையில் இருந்தே தொழிலாளர்கள் போராட்டங்களை காங்கிரஸ் அணுகியது என்பதையும் யஷ்பால் பதிவு செய்கிறார். இதை பாவரியா, ”சுயராஜ்ஜியத்தை பற்றி வாய் கிழியப் பேசுவார்கள். துப்பாக்கியையும், பீரங்கியையும் பார்த்ததும் பூச்சு வெளிபட்டு விட்டது” என்று காறி உமிழ்கிறான்.
கம்யூனிஸ்ட்டுகள் குறித்து காங்கிரஸ் செய்யும் விசம பிரச்சாரம், அவர்களுக்கு நிதி வரும் வழிகள் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் பேசும் உரைகள் பாவரியாவுக்குள் எழுப்பும் கேள்விகள் நமக்குள்ளும் எழுகின்றன. ஏனெனில், இவ்விரு விசயங்களிலும் கம்யூனிஸ்ட்டின் அடையாளம் இப்பொழுதும் மாறாமலே இருக்கிறது
இது உங்களுக்கு அழகா? நீங்கள் இப்படிப்பட்டவர் என நான் நினைக்கவில்லை என கீதா சொல்லும் வார்த்தைகள் பாவரியாவின் இயல்பை மாற்றுகிறது. அகங்காரம் காட்டாத இந்த வார்த்தைகளே அவனை கீதாவை நோக்கி ஈர்த்து வருகிறது. அதன் பிண்ணனியில் தன் கட்சி சார்ந்த நடவடிக்கை குறித்து கீதாவும், காங்கிரசின் நிலைப்பாடுகள் குறித்து பாவாஜி கூறுகின்ற விசயங்களும், அதன் தலைவர்கள் விடுத்த அறிக்கைகளும் பாவரியாவை தீர்க்கமான முடிவை எடுக்க வைக்கின்றன. அந்த முடிவும், கீதாவின் நினைப்பும் சந்திக்கும் புள்ளியில் நாவலும் நிறைவடைகிறது.
நன்றி – தமிழ்புக்ஸ்.காம்
No comments:
Post a Comment