Wednesday 11 November 2015

சிறு பொறியாய் ஒரு கேள்வி

 

திருமால் தரிசனம மற்றும் தசாவதாரம்புத்தகத்தை வாசித்திருந்த நண்பர், ”படிக்கிறவன் நம்புற மாதிரி எழுதி இருக்கே.” என்றார். இந்தத் தொகுப்பு அப்படி அமைந்ததற்குக் காரணம் என் மகள் கேட்ட சிறு கேள்வி! இந்தத் தொகுப்பிற்கான குறிப்புகளைச் சேகரித்துக் கொண்டிருந்த காலத்தில் தான் மகளும் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்திருந்தாள், அவளிடம் அலைபேசியில் பேசும் போது ஸ்கூலில் நடந்த நிகழ்வுகளைக் கேட்பேன். ஒருநாள்,”எனக்குக் கதை சொல்லுங்கஎன்றாள். கதை கேட்கத் தெரிந்த அளவுக்குக் கதை சொல்லும் சாமர்த்தியம் இல்லாததால் வாசித்திருந்த புராணக்கதையை சிறு, சிறு வார்த்தைகளில் சொல்ல ஆரம்பித்தேன்

ஆறு கை, நான்கு கால் என்றவுடனையே நமக்கெல்லாம் அப்படி இல்ல. சாமிக்கும், அசுரனுக்கும் மட்டும் தான் அப்படி இருக்குமா? என்றாள். அதெல்லாம் ஒரு குறியீடு. உருவகப்படுத்திக் காட்டுவதற்காக அப்படிச் சொல்வாங்க என புத்திசாலித்தனமாய் பதில் சொன்னால் அவளுக்கு அதன் பொருளைப் புரிந்து கொள்ளும் வயதில்லை. அப்படி, இப்படி என உழற்றி அவளுடனான அன்றைய உரையாடலை முடித்து விட்டாலும் அவளின் கேள்வி பதிலின்றி என்னுள் தொக்கி நின்றது. இப்படியே போனால்புராணக்கதை என்றாலே புளுகு மூட்டைஎன குழந்தைகள் நினைக்க ஆரம்பித்து விடுவார்களோ? என்ற எண்ணம் தோன்ற இந்தத் தொகுப்பிற்கான அவதாரக்கதைகளை மிக இயல்பாக குழந்தைகள் வாசித்தாலும் ஏற்றுக் கொள்ளும் வகையில் சாமி நன்மை செய்பவர், அரக்கன் தீமை செய்பவன் என மனிதர்களைப் போல அடையாளப்படுத்தி அவதாரக் கதைகளை நேரடி வர்ணனை போல எழுதினேன். அந்த நடை வாசிப்பவர்களுக்குப் பிடித்துப் போக அடுத்தடுத்த ஆன்மிகக் கட்டுரைகளை நேரடி வர்ணனை நடையிலேயே எழுத ஆரம்பித்ததில் அதுவும் தொகுப்பானது. இன்னும் கொஞ்சம் புரியும் வயதை எட்டியதும் அவளுக்கு இந்த நூலை வாசிக்கத் தர வேண்டும். சிறு பொறியாய் அந்தக் கேள்வியை என்னிடம் அன்று மகள் கேட்டிருக்காவிட்டால் ஒருவேளை இந்தத் தொகுப்பும் பத்தோடு பதினொன்றாய், புளுகு மூட்டை புராணக்கதையாகத் தான் இருந்திருக்கும்.