Monday 16 November 2015

மழை நாள் நினைவலை!

தனித்திருக்கும் நம் அறையின் சாளரத்தைச் சாத்து. அகல விரித்து இறங்கும் மழை வெட்கத்தால் திரும்பி விடப் போகிறது!

ஒரு சூடான தேநீர்......மென் அணைப்பு.....உடல் உருள தீண்டும் முத்தம்.....உள்ளங்கை சூடு....... இந்த மழையின் இதத்தைக் கடந்து செல்ல என்ன வேண்டும்? என்கிறாய்.

எதிர்பார்ப்பின்றி என் கைபற்றி மழையோடு இறங்கி வா. அது நாம் நினைக்காத எதையேனும் தரக்கூடும்.

மழையின் ஊடாக ஒரு மழைநாளில்......எனத் தொடங்கும் உன் புராதண நினைவுகளை அகழ்ந்தெடுக்காதே. இந்த மழைநாளில் ....என்று பின்னொரு நாளில் சொல்வதற்கு சில நினைவுகளைச் சேகரிப்போம். வா.

பூமியை முத்தமிட்டுச் செல்லும் மழைக்கு இத்தனை அகங்காரம் கூடாது என்கிறாய். ஆம். உண்னைப் போல சப்தமின்றி உதடு பிரித்து முத்தமிடும் சாமர்த்தியம் அதற்குப் போதவில்லை.

எதார்த்தமாய் தொடங்கிய 
எல்லாமே
ஏமாற்றத்தில் தான் முடிகிறது.
மழை நனைத்த சிரசை
ஒத்தியெடுக்க மறுக்கும்
உன் முந்தானையைப் போல!

உன் கூந்தலில் கட்டிய துண்டை உதறியதில் தெறித்து விழுந்த திவலையின் கடைசிச் சொட்டாய் விழுந்து கொண்டிருக்கிறது என் மீதான மழை!

உன் உதடு பிதுக்கல் மறுப்பின் அடையாளம் என நீ நினைத்துக் கொள்கிறாய்எனக்கோ முன்னொரு சீண்டலின் போது நீ காட்டிய வெட்கத்தையல்லவா நினைவு படுத்துகிறது.

மழைக்குப் பின் நீ மடித்து வைத்திருக்கும் மெளனத்தை உதறி விடு என மன்றாடிக் கேட்டும் மறுத்து நிற்கிறாள் இன்னும் சிறிது இறங்கி விட்டுப் போயேன் எனக் கேட்டும் மறுத்து விட்ட மழையைப் போல!