Friday 6 November 2015

பெங்களூரு - வாசிகளுக்குத் தெரியுமா?

சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை சார்பாக சிங்கப்பூர் மலேசிய படைப்புகளுக்கு வருடந்தோறும் வழங்கப்படும்  கரிகாற்சோழன் விருது இம்முறை ஷாநவாஸ் அவர்களின்அயல்பசிநூலுக்குக் கிடைத்திருக்கிறது. இணையப் பக்கங்களில் இவருடைய கட்டுரைகளை வாசித்திருந்த போதும் நேரடித் தொடர்பில்லாமலே இருந்தேன். இவரோடு நட்பில் இருங்கள் என்ற குறிப்போடு  ஷாநவாஸின் வலைப்பக்க முகவரியை நண்பர் இராமேஸ்வரம் ரஃபி அனுப்பி வைத்திருந்தார். அதன் பின் ஷாநவாஸை ஒரு இலக்கிய நிகழ்வில் சந்தித்து அறிமுகம் செய்து கொண்டாலும் அவருடன் தொடர் உரையாடலுக்கு வாய்ப்பில்லாமல் போனது. சில மாதங்கள் சென்றிருந்த நிலையில் வேலையிடத்தில் இருந்த போது வந்த அலைபேசி அழைப்பில், "நான் ஷாநவாஸ் பேசுகிறேன். நீங்க புத்தகம் எல்லாம் எழுதி இருக்குறீர்களா? தெரியாமல் போச்சே. இப்பதான் கேள்விப்பட்டேன்" எனச் சொன்ன போது "அடடா நம்ம எழுத்தும் பாய ஆரம்பிச்சிருக்கே"  என நினைத்துக் கொண்டேன். அதன் பின் முகநூலில் இருக்கும் போதும், பேச நேரும் சமயங்களின் போதும் வாசகர் வட்டத்திற்கும், தன் உணவகத்திற்கும் வருமாறு அழைப்பு விடுத்த படியே இருந்தார். செல்வதற்கு நேரம் வாய்க்கவில்லை என்றெல்லாம் பொய் சொல்லத் தேவையில்லை.

காலங்கடந்து வாசகர் வட்டத்தில் அறிமுகமானாலும் தொடர்ந்து அங்குக் களமாடியதில் என் பெயரை நினைவில் கொண்டு அழைக்கும் நண்பர்கள் பலர் கிடைத்தார்கள். அதற்கு முன் ஷாநவாஸின் தொகுப்புகள் எதையும் வாசித்திராத நிலையில் அவரின் நனவு தேசம்நூலை வாசித்த போது பிரமித்துப் போனேன். சிங்கப்பூர் பற்றிப் பலரும் அறியாத, அறிய வேண்டிய செய்திகளைக் கட்டுரைகளாகத் தாங்கிய ஆவணமாகவே அந்தத் தொகுப்பு இருந்தது. அகோரப்பசியின் தேடலின் வழி முகிழ்த்திருந்த அந்த நூல் குறித்த என் கருத்துகளை சொல்வனம் இணைய இதழ் வழி பகிர்ந்து கொண்டேன் அவருடைய மற்ற நூல்களையும் பெற விரும்பி அவரைச் சந்திக்கச் சென்ற போது  அவருடைய வாசிப்பு அனுபவம், உள்ளூர் படைப்பாளிகள் மீதான அவரின் நிலைப்பாடுகள் குறித்து அறிந்து கொள்ள முடிந்தது, அவரின் பரந்த வாசிப்பு அனுபவத்திற்கு முன் என் வாசிப்பெல்லாம் குண்டுச்சட்டி அளவில் தான் இருந்தது.  அந்தச் சமயத்தில் சிங்கப்பூர் இலக்கிய விருது அவரின் கதைத் தொகுப்பானமூன்றாவது கைக்குக் கிடைத்திருந்தது. அதற்கு வாழ்த்துச் சொன்ன கையோடு உயிரோசையில் அவர் எழுதி எஸ். இராமகிருஷ்ணனால் சிறந்த பண்பாட்டுக் கட்டுரையாகத் தேர்வு செய்யப்பட்டிருந்தஅயல்பசிதொகுப்பு சரியாகக் கவனம் பெறவில்லையோ? என்ற என் ஆதங்கத்தையும் அவரிடம் சொன்னேன், அவருக்குள்ளும் அப்படியான எண்ணம் இருந்தது

உணவின் வழி நாடுகளின் கலாச்சாரம், பண்பாடு பற்றிப் பேசும் அந்நூலில் இருக்கும் தகவல்கள், விவரணைகள் எல்லாம் அசாத்தியமானவை. தன்னுடையக் கட்டுரைகளுக்காக ஷாநவாஸ் தேடிக் கண்டடையும் மெனக்கெடல்கள் தீவிரமானவை. அயல்பசி எனக்குள் தந்த வாசிப்பனுபவத்தை மலைகள் இணைய இதழில் பகிர்ந்து கொண்டேன் அந்த நூலுக்கு இந்த வருடம் கரிகாற்சோழன் விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி, அவரின் தொடர் இயக்கத்திற்கு இந்த விருது உந்து சக்தியாக இருக்கும், பல்லின சமூக மக்கள் வாழும் சிங்கப்பூரில் அரசாங்கம் இலக்கியங்களுக்கான விருதுகளை வருடந்தோறும் வழங்கி வரும் நிலையில் தனிப்பட்ட அமைப்பான முஸ்தபா தமிழ் அறக்கட்டளையும் ஆண்டுதோறும் விருது வழங்கி ஊக்கப்படுத்தி வருவது பாராட்டத்தக்கது.

பொதுவாக விருது அறிவிப்புகள் வெளியானதுமே அதையொட்டி விடியல் தேடும் விட்டில் பூச்சிகளாய் கிளம்பும் வியாக்கானங்களுக்கும் குறைவிருக்காது, இந்திய இலக்கிய வட்டங்கள் போல லாபி செய்தெல்லாம் விருதுகளைச் சாத்தியமாக்குவது சிங்கப்பூர் இலக்கியச் சூழலில் சாத்தியமில்லை என்ற போதும் சருகின் சப்தங்கள் எழாமல் இல்லை எனச் சொல்ல முடியாது, விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பு தகுதியானதா? என அதை வாசித்துப் பார்த்த பின்னர் அது சார்ந்த விமர்சனங்களை முன் வைக்கும் ஆக்கப்பூர்வமான அனுகுமுறைகள் இல்லாத வரைக்கும் இவைகளைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டியதில்லை, விட்டுத் தள்ளலாம்

சில தினங்களுக்கு முன் பதினைந்தாம் தேதி நடைபெற இருக்கும் விருது விழாவுக்கு மலேசியா வருகிறீர்களா? என ஷாநவாஸ் கேட்டிருந்தார். இப்பொழுது நான் வேலை செய்து கொண்டிருக்கும் நிறுவனத்தில் தயாராகிக் கொண்டிருக்கும் ஆட்குறைப்புப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்குள் என் பெயரும் இடம் பெறும் பாக்கியத்தைப் பெற்றிருப்பதால் பயணங்களைத் தவிர்க்க வேண்டிய கட்டாயமாகி விட்டது, அவரின் அடுத்த நூலானருசி பேதம்விரைவில் வர இருக்கிறது. அதுபற்றிப் பேசிக் கொண்டிருந்த போது இந்தியாவின் சிலிக்கான் சிட்டி என வருணிக்கப்படும் பெங்களூரின் பெயர் காரணத்தைச் சொன்னார்.

பதினோராம் நூற்றாண்டில் ஒருநாள் அடர் காட்டிற்குள் வேட்டைக்கு வந்த ஹொய்சால நாட்டு மன்னனான முதலாம் வீரபல்லாலா வந்த வழியை மறந்து விட்டான். வழிதேடி பல மணிநேரங்கள் சுற்றி அலைந்து பசி தாகத்தோடு களைத்துப் போனவனுக்கு அந்தக் காட்டில் குடிசை அமைத்துத் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு வயதான பெண்மணி அவித்த அவரை விதைகளைச் சாப்பிடக் கொடுத்தாள், அதைச் சாப்பிட்டு தன் பசியைப் போக்கிக் கொண்ட மன்னன் அந்த நிகழ்வின் நினைவாக அவ்விடத்திற்குபெல்லே பெண்ட கலு ஊருஎன்று பெயரிட்டான், அதற்கு அர்த்தம்அவித்த அவரை விதை தந்த ஊர்”! அது தான்பெங்களூர்என்றாகி இப்போதுபெங்களூருஎன மாறி விட்டது என்றார். நம்மை விடுங்கள். பெங்களூரு வாசிகள் எத்தனை பேருக்கு இது தெரியும்!