எப்பொழுதும் தனக்கே உரித்தான ஒரு வித ஒலியை எழுப்பிக் கொண்டே இருப்பவைகள் புறாக்கள். அவைகள் மசூதிகளில், தேவாலயங்களில், ஆலயங்களில் தனக்குக் கிடைத்த இடங்களில் அமரும் போது அமைதி காக்கின்றன. எங்கெல்லாம் அமைதி காக்கப்பட வேண்டுமென அவைகளுக்கு எவரும் போதித்திருக்கவில்லை. நமக்கோ ஆண்டாண்டு காலமாய் எவரோ ஒருவர் போதித்துக் கொண்டே இருக்கிறார். நாம் காது கொடுப்பதில்லை, அமைதியை மீட்க வேண்டிய இடத்தில் முட்டிக் கொள்கிறோம். முழங்கி நிற்கிறோம். முரண்டு பிடிக்கிறோம். புறாக்கள் முரல் நீங்கி இரை எடுக்கும் மதமற்ற இறைமையை நாம் முரல் கொண்டு இறைமையை இரையாக்கிக் கொண்டிருக்கிறோம். இந்தத் தலைப்புக் கவிதைக்குச் சென்றடையும் வழிகள் எங்கும் நிரவி இருக்கும் ஏனைய கவிதைகள் நாம் வாழும் எளிய வாழ்வின் ஊடாக நம்மில் ஆழ்ந்திருக்கும் காதலையும், காமத்தின் உச்சத்தை நெறிப்படுத்தலையும், எதார்த்தத்தையும் முன் நிறுத்தி ”முரல் நீங்கிய புறா”வாய் உரையாடுகின்றன. பகடி செய்கின்றன. மீண்டும் ஒரு திறனாய்வுக்கு உட்படுத்துகின்றன. புது எழுத்து வெளியீடாக வந்திருக்கும் இத்தொகுப்பு சம்பத்ஜியின் இரண்டாவது தொகுப்பு.
வாசம் தரும் ரோஜாக்களை வாங்க அதன் வாசம் நுகர்ந்த படியே பருவ வித்தியாசமின்றி பேரம் பேசிக் கொண்டிருக்கிறோம். அதேநேரம் வாசத்திற்குப் பதில் நாற்றத்தின் நாற்றங்கால்களாய் இருக்கக்கூடிய கட்டணக்கழிவறைக்கு மூக்கைப் பிடித்த படி பேரம் பேசாமல் போய் வருகிறோம். வாழ்தலில் இருக்கும் முரணை நம் எதார்த்த நிகழ்விலிருந்து ஆரம்பித்து வைக்கிறார்.
தவழ்ந்து வரும் போது கையில் எடுத்துக் கொஞ்சிய குழந்தை நாம் வெளி சென்று திரும்பும் கணத்தில் நம்மை நோக்கி ஓடி வரும். அந்த மாற்றம் நிகழும் சனநேரம் எவருக்கும் அகப்படுவதில்லை. அப்படி அகப்படாத இன்னொரு நிகழ்வு பெண் குழந்தைகள் பூப்பெய்தல்! அறிந்திடாத காலத்தின் நிமிட நொடிகளுக்குள் நிகழ்ந்துவிடும் அந்நிகழ்வை ”புதுயுவதி” கவிதையில் சிறுமியாய் கிளையைப் பற்றியவள்/ யுவதியாய் பூமிக்கிறங்கினாள்/ செங்குடுவை உடைய / என்கிறார்.
தன் வீட்டில் திருமண வயதில் ஒரு பெண் இருப்பதைச் சொல்வதன் அடையாளம் மார்கழி மாதக்கோலத்தில் வைக்கப்படும் பூசணிப்பூ! அதைத் தன் வீட்டு வாசலில் வருடந்தோறும் வைத்து ஏங்கி நிற்பவள் தலையில் ஈரம் சொட்ட உட்கார்ந்து கோலமிடுகிறாள். தலைமுடியின் நுனியில் இருந்து வடியும் நீர் அவளின் பிருஷ்ட பாகங்களை நனைப்பதை தளர்கூந்தல் அழுகையில் / நனைந்து சிரித்தது / வெட்டித் திரண்ட பின் பிளவின் செழிப்பு / என காட்சிப்படுத்துகிறார். நவீனக் கவிஞனுக்குள் ஒளிந்து கிடக்கும் இந்தக் காட்சி பிம்பத்திற்குள் மட்டுமே மயங்கி நித்தமும் பூசணிப்பூவாய் முகிழ்தலை உய்யத் தருகிறது “கனவேடு”.
நவீனங்களை திறந்து விட்ட புதுமைகளில் நாம் வாழ்வில் தொலைத்தவைகளில் அம்மியும் ஒன்று. அம்மி மிக்சியாக மாறியதில் அம்மியோடு அதைக் கொத்துபவர்களும் தொலைந்து போனார்கள். தொலைத்து விட்டோம். இனி ஒரு முயற்சியிலும் அப்படித் தொலைத்தவைகளை மீட்டெடுத்தல் என்பது இயலாத காரியம். காரணம் அது தூரமாய் போகவில்லை. துண்டாடப்பட்டு விட்டது என்பதை ”செந்நாக்கு” கவிதை பேசுகிறது. அப்படியான நவீனங்களை நம் தலைமுறைகளுக்கு கைவரக் கொடுத்து விட்டு அவர்களுக்கு நாம் தரும் கற்பிதங்கள் கானமும், மாயமும் மட்டுமே என கவனப்படுத்துகிறது “பூத்தலின் நெருக்கம்”. கொண்டாட்டங்களால் உடலெங்கும் புழுதியாய், மனதெல்லாம் வெள்ளையாய் கிராமத்தில் தன் பால்யம் கழித்த தாத்தா தங்கநாற்கரச் சாலை புழங்கும் நகர வாழ்க்கைக்கு வருகிறார். பள்ளி செல்லும் தன் பேரனுக்கு கையசைக்கிறார். அப்பொழுது அவர் பால்யம் பேரனுக்கானதாய் இருக்கும் போது உடையும் நரையும் வெள்ளையாய் / மனசெல்லாம் புழுதியாய் மாறிப்போன மாற்றத்தை மேவுகிறது ”அகவையுள் படிந்த புழுதி”. பால்யம், ஆதி குறித்த கவிதைகள் தொகுப்பு முழுக்க நிஜங்களாய் விரிந்து கிடக்கின்றன. தலை தட்டி நீரால் நிரம்பி நின்ற ஆறுகள் தரை தட்டி மணலாகிக் கிடக்கும் அவலத்தை “யுகப்புதைவின் சாயல்” நகலெடுத்துத் தருகிறது. ”மாயக் கனலோ” லாந்தர் கால இரகசியங்களை நினைவூட்டிப் போகிறது.
காமம் தன் கட்டவிழ்பிற்காக உடலை எந்த எல்லைக்கும் எடுத்துச் செல்லும். அதை அதன் போக்கில் விடும் போது ஆபத்தாகி விடுகிறது. மாறாக, கட்டுப்படுத்தி நேர் செலுத்தும் போது அது ஆலாபனையாகிறது. ஆபத்தும், ஆலாபனையும் காமத்தின் அடர்த்தியை இறுத்தி வைத்திருக்கும் ஒரு துளி சொட்டில் இருக்கிறது. அது அடர்மழையாய் விழுவதில்லை. பெரும் நிசப்தமாய் இறங்குகிறது. அப்படி இறங்குவதாலயே அயர்ச்சியோடு மலர்ச்சியையும் தருகிறது. அந்த மலர்ச்சிக்கு மண்டியிடும் மனம் ”துளியின் களியாட்டம்” பெற ஏங்காமலா இருக்கும்? அப்படியான களியாட்டத்திற்காக தவித்துத் திரியும் காமம் நெடுநேரம் உறங்குவதில்லை, பாம்பு சட்டையைக் கழட்டுவதைப் போல உரித்தெறிந்து விட்டு உருவி ஓட முயலும். அந்த முயற்சிகள் எப்படியெல்லாம் நிகழ்கிறது. அதற்காக எத்தகைய முன்னெடுப்புகளைச் செய்கிறது. அந்த முன் நகர்வில் காமம் என்கின்ற முயல், பூனையாகி, சிலந்தியாகி, சிலந்தி வலைக்குள் சிக்கி காண்டாமிருகமாகி நிற்கிறது. முற்றிய பின்னிரவொன்றில் / அன்பின் நீவலோடு / பலியிட / அது சொட்டு சொட்டாய் மாய்ந்து போவதை அனுபவித்தவரால் மட்டுமே உணர முடியும். அந்த அனுபவம் எத்தனை பேருக்கு வாய்க்கிறது? சர்ப்பமாய் காமம் ஊறத் தொடங்கும் போதே ஊழிக்காற்றாய் கற்பனைத் தேர் ஏறி விரவி விரியும் அந்தக் காமத்தின் வழி பச்சையமும், நீலமும் ஊடாடிய கடலைக் கண்டு கொண்டவர்கள் பாக்கியவான்கள். அவர்களால் காமக் காண்டாமிருக்கத்தை சொட்டு சொட்டாய் மாய்த்து விட முடியும். அது இயலாது போகும் போது காமம் தன்னின்பத்தின் சாயல் தரித்துக் கொள்கிறது. அதை “சுழற்காமம்” குறைந்த சொற்கட்டில் விரியும் காட்சிப் பேழையாக்குகிறது.
ஒரு கீழறுப்பின் குறியீடாய், இடைப்பட்ட எண்னின் அடையாளமாய் வாசித்தும், கேட்டும் பழகிய மூன்றாம் பாலினத்தை “தன் முற்றிய கைகொட்டலை எழுப்பி” என்று அறிமுகம் செய்கிறார் சம்பத்ஜி. அதை வாசித்த நொடியில் நம் காதுகளுக்குள் வந்து விழுகிறது அந்த ”ஒலி”. “பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடக்காமல் பருகிக் கடக்கும்” அவர்களின் வாழ்வு இன்றளவும் முற்றிய கைகொட்டலாகவே இருக்கிறது. மாற்றங்களுக்கு மன்றாடும் அந்த ஒலியானது ”பிச்சாண்டியான உருத்ரன்” கவிதையில் வார்த்தைகளில் மலர்கிறது. அந்தரத்தில் ஆடும் சிறுமி, சவுக்கைச் சுழற்றும் ருத்ரன் இருவரின் தாண்டவம் தணியும் போது அவன் அலுமினியத் தட்டில் விழுவது / அந்தரச் சிறுமியின் பிள்ளைக் கறி / என்கிறார். எங்கிருந்தோ வந்து விழும் ருத்ரன்களின் சொடுக்கலில் பிள்ளைக்கறியின் வாசம் நுகர்வதை தவிர்க்க இயலவில்லை.
வெள்ளை அரசு வெளியேறி ஆண்டுகள் ஆனபோதும் அதன் பழுப்புநிற முகங்கள் நீட்சிபெற்று அரசு கட்டிடங்களை ஆக்கிரமித்து நிற்பதை காக்கைக்கும், அணிலுக்குமாய் ஆகுறுதி செய்கிறது “டாட்டன் ஹாமின் நிவல்”. இன்னமும் காக்கையும் / அணிலும் நெருங்கிப் பகிர / ஏலவில்லை / என்பதில் தான் எத்தனை எதார்த்தம். அதே எதார்த்தம் “முத்த துணை”யிலும் பிரதிபலிக்கிறது. தேவையற்ற ஒன்று, தேவையற்ற நிலையில் நிரம்பக் கிடைத்தால் அதை என்ன செய்ய முடியும்? அப்படி இணையோடு இயைந்தவர்களின் முத்தங்களை காட்சிப் பிழம்பாய் ஒரு துப்புரவுத் தொழிலாளி தனக்குள் சேகரம் செய்கிறாள். தனக்கொரு துணை (துணையா? இணையா?) இல்லாததால் அதை அழிக்க நினைக்கும் முயற்சியில் தோற்கிறாள். இறுதியாகத் தன் தனித்திருக்கும் பசலைக்கு ஒப்புக் கொடுத்து அதில் பரவசமடைந்து கரைத்தொழிக்கிறாள். தனித்திருக்கும் பசலையில் முத்தங்கள் மட்டுமல்ல எதுவும் கரைதல் இயல்பு தானே.
அன்பை செலுத்துவது எத்தனை கடினமோ அதை விடப் பன்மடங்கு கடினம் அதை போதிப்பது. போதனையின் உச்சத்தை தனக்கான அடையாளமாக்கியவன் புத்தன். காலத்தின் சுழற்சியில் அவன் பிய்த்து எறியப்படும் போதெல்லாம் அது குறித்து கவலை கொள்ளாது தன் நிலையிலேயே இருக்கிறான். எத்துணை காலச்சிதைவுகளையும் உதறி / ஆகப்பெரும் சிதிலங்களூடேயும் / சாந்தம் ததும்பும் அன்பை கடத்தி விடுகிறாய் / உன் நிலைத்த ஆகிருதியினூடே / என்ற வரியின் முடிவில் சொல்லத் தேன்றுகிறது. அதனாலயே அவன் “சாக்கியமுனி” என்று.
கோரிக்கைகள், தேவைகள் கடைத்தெறியப்படும் போதெல்லாம் நம்மை ஆள்பவர்கள் மீது ஒரு வன்மம் எழுந்து அடங்கும். எழும்போதெல்லாம் நாம் கொள்ளும் உணர்ச்சி வேகம் அதற்கான சமயம் வாய்க்கும் போது சரிந்து விடும். நம் கோபத்தைக் காட்டும் வாய்ப்புக்காக ஐந்தாண்டுகள் காத்திருக்கிறோம். வாய்ப்பும் வருகிறது. கிடைத்த வாய்ப்பில் எழுந்தாட வேண்டிய கோபத்தை இலவசம் என்ற ஒற்றைப் போர்வைக்கு ஒப்புக் கொடுத்து விட்டு மீண்டும் காத்திருக்கிறோம். காவு வாங்கக் காத்திருக்கும் மனதை தன் சூட்சுமங்களால் வீழ்த்தி காவு வாங்க நினைத்தவர்களையே மீண்டும், மீண்டும் காக்க வைக்கும் தந்திரத்தை நிகழ்த்திக் காட்டும் நம் அரசியல் வாதிகளின் அற்புதத்தை “புது லாகிரி” கடை விரிக்கிறது.
நம்மைக் கடந்து போகின்றவைகளில் கவனியாது விட்டவைகளையும், இரகசியங்களோ? மாயங்களோ? எனத் தடுமாறிய நிலைகளையும், கடந்து வரும் தந்திரத்தை தன்னுள்ளே வைத்துக் கொண்டு அதைத் தேடித்திரியும் போது அடையாளம் காட்டுபவனாகவும் கவிஞன் இருக்கின்றான். அவனுக்கு இட்ட பணியாகவும் அது இருக்கிறது. அதை அவன் செயல்படுத்துவதற்கான ஆயுதமாக கவிதை திகழ்கிறது. இந்த நிலையிலிருந்து சம்பத்ஜியும், அவரது கவிதைகளும் பின்வாங்கவில்லை. திரையிடப்பட்டுக் கிடக்கும் அறைக்குள் அகப்பட்டுக் கிடப்பவனுக்கு வெளிச்சக் கீற்றைத் தரும் சாளரத் திறப்பாய் இத்தொகுப்பின் கவிதைகள் இருக்கின்றன. வாசகனுக்கான பரப்பை தந்து நிற்கும் இத்தொகுப்பில், “உடைந்து வழிந்த எருக்கந்தண்டென/ வெள்ளைத் தாரையொழுக”, ”ஓதமேறிய குள்ளமான மண்சுவர்”, ”தூளியுள் உறங்கும் மலர்”, “முதல் மழையை முத்தமிட்டுக் கோண்டே நுழைந்தது”, “ஒரு துளி நீரின் குரலை அறிய வாய்த்தது அதன் சொட்டலில்”, “மழித்த புத்தனின் சிரமென கூலாங்கல்” போன்ற கவிதைக்குள் கவிதையாய் ஊடேறிக் கிடக்கும் வழமையற்ற வார்த்தைகளும், ”ஓசையற்று நிகழ்வதே கனிதல்” போன்ற ஒற்றை வரிகளும் இரசித்து நகர வைக்கின்றன. எதன் நிழலும் படிந்திடாது காமத்தின் மீது ஒரு காலும், காதலின் மீது இன்னொரு காலும், எதார்தத்தின் மீது மறுகாலுமாய் உய்ந்து கிடக்கும் இக்கவிதைகளை இரசித்தும், உணர்ந்தும் உண்டு செரிக்க முடிந்தால் முரல் நீங்கிய புறாவின் கூரிய ஓசையை உங்களாலும் கேட்க முடியும்.
நன்றி - சொல்வனம். காம்
No comments:
Post a Comment