Thursday, 16 February 2017

விமர்சனங்களை உங்களுக்கானதாக்குங்கள்!ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன் அதனைச் செய்வதற்கான வழிமுறைகளுக்காகத் தரப்படுபவைகள் ஆலோசனைகளும், அறிவுரைகளும். அந்தச் செயலைச் செய்து முடித்த பின் தரப்படுபவைகள் விமர்சனங்கள். இவைகளைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் ஒன்றையொன்று குழப்பிக் கொள்கிறோம்.

விமர்சனங்களுக்கு உள்ளாகி விடுவோமோ? என்ற பயத்தில் நம்மை நோக்கி வரும் நல்ல வாய்ப்புகளைக் கூட விட்டு விடுகிறோம். வசதியானவர்களுக்கும், சாதனையாளர்களுக்கும், வெற்றியாளர்களுக்கும் மட்டுமே வாய்ப்புகள் அமைவதாகப் புலம்பிக் கொண்டிருக்கிறோம். உண்மை அதுவல்ல! வாய்ப்புகள் எல்லோருடைய வாழ்க்கையிலும் பலமுறை வந்து செல்கின்றன. வாசல் கதவைத் தட்டிப் போகின்றன. ஆனால், அதன் பொருட்டு வரும், வரப்போகும் விமர்சனங்களுக்குப் பயந்து அவைகளை ஏற்காமல் நின்று விடுகிறோம். இதனால் தான் ”வாழ்க்கையே ஒரு வாய்ப்பு” என்றார் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி.

தனி நபருக்கு மட்டுமல்லாது அமைப்பிற்கு, துறைகளுக்கு என எல்லா நிலைகளுக்குமே விமர்சனங்கள் வருகின்றன. அதற்கென்றே அந்தந்த துறை சார்ந்த வல்லுநர்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களின் விமர்சனங்கள் கூட சில நேரங்களில் விவாதங்களுக்கு உள்ளாகி விடுகின்றன. “அதைச் சொன்னவர் யார்? இதைச் சொன்னவர் யார்? என்று எண்ணாதீர்கள். சொல்லியதை மட்டும் பாருங்கள்” என்கிறார் ஆகிகம்பீஸ்.

இன்று வியக்கத்தக்க வகையில் இருக்கும் வெற்றிகளும், சாதனைகளும்  விமர்சனங்கள் என்ற கடலைத் தாண்டியே வந்திருக்கின்றன. அறிவுரைகளும், ஆலோசனைகளும் எவ்வளவு அவசியமோ விமர்சனங்களும் அவ்வளவு அவசியம்! ஏனெனில், நாம் செய்த செயல் வெற்றியடையும் போது இழந்தவைகளையும், தோல்வியடையும் போது இருப்பவைகளையும் மறந்து விடுகிறோம். அப்படி மறந்து விடுபவைகளைக் கண்டறிந்து அதனைச் சீராக்கி இன்னொரு முறை அத்தகைய இழப்புகள் ஏற்படாமல் செய்வதற்கு விமர்சனங்கள் தேவையாக இருக்கின்றது. அந்தத் தேவைக்கான எல்லை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு கிரேக்கக் கதை சொல்லப்படுவதுண்டு.  

ஒரு சிற்பி சிலை செதுக்கி வைத்திருந்தான். அந்த வழியே வந்த ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளி அந்த சிற்பியிடம் நீ செதுக்கியிருக்கும் சிலையின் செருப்பில் ஒரு குறை உள்ளது” என்று சொன்னான். அவன் சொன்னதைக் கேட்டு அதன்படி சிலையில் மாற்றம் செய்தான். அதனைப் பார்த்த தொழிலாளி அடுத்த படியாக அந்த சிலையில் இருந்த அணிகலனில் என்று ஆரம்பித்தான். இதைக் கேட்ட சிற்பி அந்தத் தொழிலாளியிடம் “உன் எல்லை செருப்போடு முடிந்து விட்டது. ஏனெனில் நீ அந்தத் துறையில் இருப்பதால் அதன் நிறை, குறைகளை அறிந்தவன். ஆனால் மற்றவைகளைப் பற்றிச் சொல்ல உனக்கு எந்த தகுதியுமில்லை” என்றான். 

இந்தக் கதையில் வரும் சிற்பியைப் போல உங்களையும், உங்கள் செயல்களையும் சார்ந்து வரும் விமர்சனங்களுக்கான எல்லைகளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். முடிந்தவரை சரியான விமர்சனங்களை உள்வாங்கி உருவாகுங்கள். அப்படி இல்லை என உணரும் பட்சத்தில் அதைப் புறந்தள்ளி விட்டு உங்கள் இலக்கினை நோக்கித் தொடர்ந்து முன்னேறுங்கள். 

நன்றி : ஹெர்குலிஸ் மாத இதழ்

4 comments:

 1. நன்றி தோழர்...

  நேரம் கிடைப்பின் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/09/Success-is-our-choice.html

  ReplyDelete
 2. இலக்கினைத் நோக்கி தொடர்ந்து முன்னேறுவோம்
  நன்றி

  ReplyDelete
 3. எண்ணித் துணிக கருமம் - என்றான் வள்ளுவன். அதிலேயே எல்லாம் அடங்கிவிடுகிறது. அல்லவா?

  -இராய செல்லப்பா நியூஜெர்சி.

  ReplyDelete
 4. அருமையான தன்னம்பிக்கைப் பதிவு.

  ReplyDelete