Tuesday, 13 June 2017

பயணத்தை எளிமைப்படுத்துங்கள்பூங்கா ஒன்றில் நடந்து கொண்டிருந்த டால்ஸ்டாய் எதிரில் வந்தவரைப் பார்த்து ஹலோ, எப்படி இருக்கிறீர்கள்? என்று விசாரித்தார். அவரோ நான் உங்களை இதுவரை சந்தித்ததே இல்லை. அப்படியிருக்க என்னிடம் என்ன விசாரிப்பு வேண்டிக் கிடக்கு? என்று சொல்லி விட்டுப் போய் விட்டார். மறுநாளும் அந்தப் பூங்காவிற்கு வந்த டால்ஸ்டாய் அதே நபரைச் சந்தித்ததும் “நேற்று நாம் இருவரும் சந்தித்துக் கொண்டோம். அதனால் இன்று என்னைத் தெரியாது எனச் சொல்லி விடாதீர்கள். நலமா?” என்று கேட்டாராம். டால்ஸ்டாயாது அவருக்கு முன், பின் அறிமுகமில்லாத நபரைச் சந்தித்தார். ஆனால் நாம் நம்மை நன்கு அறிந்தவர்களிடமும், நம்மோடு இருக்கும் சக ஊழியர்கள், குடும்ப உறுப்பினர்களிடமும் கூட இப்படியான மனநிலையில் தான் பழகுகிறோம். புறக்கணிப்புகளின் வழி முன்னேறிச் செல்ல நினைக்கிறோம். ”எல்லா நோய்களுக்கும் மருந்து உண்டு. ஆனால் புறக்கணிப்பு என்ற நோய்க்கு மட்டும் மருந்தே கிடையாது. எனவே யாரையும் அலட்சியப்படுத்தாதீர்கள்” என்கிறார் இங்கர்சால். 

குடும்பத்தில், அலுவலகத்தில், நிறுவனங்களில் அதிகார நிலையில் செய்யப்படும் அலட்சியமும், புறக்கணிப்பும் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து  ஒத்துழைப்பை உருவாக்கித் தருவதற்குப் பதிலாக எதிர் வினையாற்றுவதற்கான வழிகளையே உருவாக்கும். வெறும் தூண்டில்களால் மீன்களை உங்களுக்குப் பெற்றுத் தர முடியாது. அதில் ஒரு சிறு புழுவை மாட்டில் மட்டுமே அது தன்னைப் போல பல மடங்கு விலையுடைய மீனை உங்களுக்குக் கடலில் இருந்து எடுத்துக் கொண்டு வரும். அதுமாதிரி சில சின்னச் சின்ன விசயங்களில் கவனம் கொள்வதன் மூலம் உங்களைச் சார்ந்திருப்பவர்கள், குடும்பத்தினர், உடன் பணியாற்றுபவர்கள் ஆகியோரிடமிருந்து ஒத்துழைப்பைப் பெற்று விட முடியும். இதை இன்னும் எளிமையாகச் சின்ன வரிகளில், “சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடி” என்றனர் நம் முன்னோர்கள்.

உங்களை விட ஒரு படி முன்னே இருப்பவர்களிடம் தொடர்புகளை வளர்த்துக் கொள்ளும் அதே நேரம் கீழ் இருப்பவர்களிடமும் கனிவோடு இருங்கள். அவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேளுங்கள். கண்ணாடியாலான மின் தூக்கி, தக்காளி சாஸ் கலந்த ஊறுகாய், நறுமணப் பொருட்கள் கலந்த தேங்காய் எண்ணெய் போன்றவைகள் அப்படிக் காது கொடுத்துக் கேட்டதால் உருவானவைகள் தான்! இவைகளை உற்பத்தி செய்த நிறுவனங்கள் அதற்கான யோசனைகளைத் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் கடை நிலை ஊழியர்களிடமிருந்தே பெற்றன. எனவே வெற்றிக்கான வழிகள் உங்களுக்குள்ளே உருவாகும் என்றோ, முயன்று உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றோ நினைக்காதீர்கள். அது எங்கிருந்து வேண்டுமானாலும் கிடைக்கலாம். அதைக் கவனித்துக் கைப்பற்றுவதில் தான் வெற்றிக்கான சூட்சுமம் இருக்கிறது. ஆனால், அதை நம்மில் பலரும் கவனிக்காமல் கடந்து போய் விடுகிறோம். வெற்றியாளர்களோ அத்தகைய கவனிப்பின் வழி தங்களைக் கவனப்படுத்திக் கொள்கிறார்கள். காது கொடுத்துக் கேட்பதைப் போலவே உங்களுக்குத் தேவையானதை வாய் திறந்து கேட்பதும் முக்கியம். ஏனென்றால் மற்றவர்களுக்கு என்ன தேவை என்பதை எப்படி உங்களால் தீர்மானிக்க முடியாதோ அவ்வாறே உங்களுக்கு என்ன தேவை என்பதையும் மற்றவர்களால் தீர்மானிக்க முடியாது. அழுத பிள்ளைக்குத் தான் பால் கிடைக்கும்!

இதைப் போய் எப்படிக் கேட்பது? கேட்டால் எதுவும் நினைப்பாரோ? தப்பாக நினைத்துக் கொண்டால் என்ன செய்வது? ஒருவேளை அவர் மறுத்து விட்டால்……இப்படியான தயக்கங்களை நமக்கு நாமே முன் நிறுத்திக் கொண்டு கேட்கத் தயங்கி நிற்கிறோம்.  சிலநேரங்களில் இப்படியான தயக்கங்களோடு கேட்கப்படும் உதவிகள், ஆலோசனைகள் நாம் நினைத்தது போல் இல்லாமல் எளிதாகக் கிடைத்து விடும். சமீபத்தில் என்னுடைய நூலுக்காக அட்டைப்படம் வரைய ஒருவரை அணுக நினைத்தேன். ஆனாலும் அவரிடம் கேட்கத் தயக்கமாக இருந்தது. போதாக்குறைக்கு அவர் இப்போது பயங்கர பிசி. உனக்குச் செய்வாரா? எனத் தெரியவில்லை என நண்பர்கள் சொல்ல நானும் அவரிடம் கேட்பதைத் தவிர்த்து விட்டு வேறு சில முயற்சிகளில் இறங்கினேன். எதுவும் சரியாக வராததால் அவரிடமே கேட்டுப் பார்க்கலாமே என்ற நினைப்பில் ஒரு மின்னஞ்சலை அனுப்பி வைத்தேன். அடுத்த சில நாட்களில் நான் நினைத்ததை விடவும் அழகாக அட்டைப்படத்தை வடிவமைப்புச் செய்து அனுப்பியதோடு, “எதற்கு இந்தத் தயக்கம்? அப்பவே அனுப்பி இருக்கலாமே” என்ற குறிப்பையும் இணைத்திருந்தார். எதிர்பார்ப்பில்லாத வகையில் உங்களுக்குத் தேவையானதை சம்பந்தப்பட்டவர்களிடம் கேளுங்கள். கிடைத்தால் மகிழ்ச்சி. கிடைக்காவிட்டால் அடுத்த முயற்சி என நகருங்கள், ”கேளுங்கள் தரப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும்” என்ற வேதவாக்கியத்தை வெற்றி வாக்கியமாக்கி முன்னேறுங்கள். 

இவனுக்கு இதை நான் செய்தால் எனக்கு என்ன கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு மனநிலையே பெரும்பாலான நேரங்களில் இத்தகைய புறக்கணிப்புகளுக்கும், அலட்சியப்படுத்தலுக்கும் காரணமாகின்றன. உங்களின் எதிர்பார்ப்புகளை மட்டுமே கவனத்தில் கொண்டு எதையும் செய்யாதீர்கள். அப்படிச் செய்யும் சமயங்களில் அதில் ஏமாற்றம் நிகழும் போது உடனே எரிச்சலும், கோபமும் முன்னே வந்து நிற்க ஆரம்பித்துவிடும். அது உருவாக்கும் எதிர் விளைவுகள் உங்களின் இலக்குகளை அடைவதற்கான வழிகளை அடைத்து விடும். எனவே உங்களின் இலக்கு நோக்கிய பயணத்தில் எவரையும் உதாசீனப்படுத்தாமல், புறக்கணிக்காமல், அலட்சியப்படுத்தாமல், அவர்களைப் பாராட்டுவதன் வழி உங்களுக்கான உத்வேகத்தைப் பெறுவதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு வெற்றியாளன் பயணிக்க வேண்டிய பாதைகள் எப்போதும் சிக்கலின்றி இருக்க வேண்டும். அதிக சக்தி கொண்ட வாகனம் உங்களிடம் இருக்கலாம், ஆனால் அது பயணிக்கும் பாதை கரடு முரடானதாக இருந்தால் சுலபமாகப் பயணிக்க முடியுமா? என்பதை மற்றவர்களிடம் அனுசரித்துச் செல்ல இயலாத, முரண்பட்டு நிற்க இயலாத சூழல்களை எதிர்கொள்ளும் ஒவ்வொரு முறையும் நினைத்துக் கொள்ளுங்கள். 

நன்றி : அச்சாரம் மாத இதழ் 

1 comment:

  1. பயனுள்ள அருமையானப் பதிவு
    சொல்லிச் சென்ற விதம் மிக மிக அருமை
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete