Friday, 16 June 2017

பகிர்ந்து செய்யுங்கள்


இலக்கு, திட்டமிடல் ஆகியவைகளில் நம்மில் பலருக்கும் இருக்கும் தெளிவு அது சார்ந்த செயல்களைச் செய்யும் போது இருப்பதில்லை. ஒரு வேலையை எப்படிச் செய்ய வேண்டும் என்பதே இன்று பலருக்கும் தெரிவதில்லை. வேலையை முடிக்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் இருந்தால் போதாது. அதை எப்படிச் செய்தால் முடிக்க முடியும் என்பதும் தெரிந்திருக்க வேண்டும். இந்தத் தெளிதலும், தெரிதலும் இருந்தால் போதும் வெற்றியை உங்கள் பக்கம் சாய்த்து விட முடியும், அதற்கு உங்களுடைய வேலைகளைப் பகிர்ந்து செய்ய வேண்டியது அவசியம்.  

எல்லா வேலைகளையும் நீங்களே செய்ய ஆரம்பிக்கும் போது உங்களுடைய வேலையைச் சிறப்பாகச் செய்ய முடியாது. உதாரணமாக குழுவாகச் செயல்படும் ஒரு பணியில் நீங்கள் அதன் தலைமைப் பொறுப்பை (TEAM LEADER) ஏற்றிருக்கிறீர்கள்  என வைத்துக் கொள்வோம். அங்கே உங்களின் பணி என்பது உங்களோடு   செயல்படுபவர்களில் தகுதியாவனர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குரிய வேலைகளைப் பகிர்ந்து கொடுப்பதும், அவர்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்துக் குறித்த காலத்தில் அந்த வேலையை முடிப்பதும் மட்டுமேஆனால் அக்குழுவின் தலைவர் என்பதற்காக எல்லா வேலைகளிலும் நீங்களே முன் நிற்பதோ, அவைகளைச் செய்ய முனைவதோ குறித்த காலத்தில் அந்த வேலையை நிறைவு பெற வைக்காது என்பதோடு கருத்து வேறுபாடுகளையும் உருவாக்கி விடும். இந்தச் செயல்பாட்டு நடைமுறையை மிகச் சரியாகப் பின்பற்றிச் செயல்படும் குழுபெஸ்ட் டீம்” (BEST TEAM) என்ற அடையாளத்தைப் பெறுகிறது

தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கான பயிற்சி வகுப்புகளில் ஒரு போதும் உங்களின் உதவியாளர் செய்ய வேண்டிய வேலையை நீங்கள் செய்ய முனையாதீர்கள் என்ற ஆலோசனை கட்டாயம் இருக்கும். நேர மேலாண்மைக்கு இது மிகவும் முக்கியம்வெற்றிக்கான முனைப்பில் இருப்பவர்கள் தங்களுக்குக் கிடைக்கிற ஒவ்வொரு மணித்துளியையும் இலக்கு நோக்கிச் செலுத்த வேண்டுமேயொழிய அதிலிருந்து விலகி நிற்கும் விசயங்களுக்குச் செலவழிக்க முனையக் கூடாது.

மனைவிக்கு ஒழுங்காகப் பொருட்கள் வாங்கத் தெரியாது என நேரத்தைச் செலவிட்டு காய்கறிக்கடைக்குச் சென்று வருவது, மகனுக்குப் பணம் செலுத்தத் தெரியாது என தவணைத் தொகைகளைக் கட்ட வங்கிக்குச் சென்று வரிசையில் காத்திருப்பது, மகளுக்கு உதவுகிறேன் எனச் சொல்லிக் கொண்டு அவர்களின் வேலைகளில் தங்களின் நேரத்தைச் செலவு செய்வது என அவசியமற்றவைகளுக்காக மதிப்பில்லா நேரங்களை விரயமாக்கிக் கொண்டிருக்காதீர்கள். அவர்களுக்குத் தெரியவில்லை என்றால் ஒருநாள் முழுக்கச் செலவிட்டேனும் அதைக் கற்றுக் கொடுத்து விடுங்கள். அதன்பின் உங்களின் பல மணி நேரம் மிச்சமாகும். எனக்கே எல்லாம் தெரியும் என்ற மனநிலையாலும்நானே செய்தால் தான் எனக்குத் திருப்தியாய் இருக்கும் என்ற பிடிவாதத்தாலும் சிறிய வேலைகளில் உங்களின் நேரத்தை கரைத்துக் கொள்ளாதீர்கள்.

உங்களுக்கான நேரத்தை ஆக்கப்பூர்வமான வகையில் செலவழியுங்கள்முறையான திட்டமிடலின் மூலம் அதைச் செய்ய முடியும் என்பதை எனக்கு மேலாளராக இருந்தவரிடமிருந்து நான் கற்றுக் கொண்டேன். அதை உங்களுக்கும் சொல்கிறேன். வருட ஆரம்பத்தில் டேபிள் காலண்டர் வந்ததும் அவர் செய்யும் முதல் வேலை அதில் கட்டாயமாக ஒவ்வொரு மாதமும் செய்ய வேண்டிய வேலைகள், வாரியங்களுக்குக் கட்டணங்கள் செலுத்த வேண்டிய தேதிகளை அடையாளப்படுத்திக் கொள்வார். இப்போது அந்த வருடத்தில் கட்டாயமாகச் செய்ய வேண்டிய வேலைகள் தெரிந்து விடும். அந்தக் காலண்டரைத் தன் எதிரில் படும் படி வைத்திருப்பார்

தினமும் காலையில் அலுவலகம் வந்ததும் காலண்டரில் அன்றைய தேதியில் இருக்கும் வேலைகளையும், அன்று செய்ய வேண்டிய வேலைகளையும் வரிசைப்படுத்தி ஒரு குறிப்பேட்டில் எழுதிக் கொள்வார். முதலில் எந்த வேலையைச் செய்வது உள்பட எல்லாவற்றையும் திட்டமிட்ட பின்னரே வேலைகளைத் தொடங்குவார். ஒரு நேரத்தில் ஒரு வேலை என்பதில் உறுதியாக இருப்பதால் அந்த வேலை முடியும் வரை அதில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டே இருப்பார் அந்த வேலை முடியாது போனால் அதற்கான காரணத்தைக் குறிப்பேட்டில் குறித்து வைத்து விட்டு அடுத்த வேலையை ஆரம்பிப்பார். அதே நேரம் ஒத்தி வைத்த வேலையை முடிப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துக் கொண்டே இருப்பார்.

ஒவ்வொரு நாளும் வேலை நேரம் முடிவதற்கு முன் நடைபெறும் ஊழியர் கூட்டத்திற்கு அந்தக் குறிப்பேட்டோடு ஆஜராகி விடுவார். அதில் அவர் குறித்திருக்கும் வேலைகள் பெரும்பாலும் முடிந்து விட்டதற்கு அடையாளமாக சிவப்பு மையால் கோடிடப் பட்டிருக்கும். அவரின் சொந்த வேலைகளைக் கூட அவ்வாறு பட்டியலிட்டு வைத்திருப்பதைப் பல நேரங்களில் பார்த்திருக்கிறேன். இது எப்படி எல்லா நேரமும் சாத்தியம்? என ஒருமுறை அவரிடம் கேட்டேன்

இந்தக் குறிப்பேட்டில் வேலைக்கான இன்றைய இலக்கும், அதை அடைவதற்கான திட்டமிடலும் மட்டும் தான் இருக்கிறது. ஆனால் இதில் இருக்கும் எல்லா வேலைகளையும் நானே செய்வதில்லை, நான் மட்டுமே செய்ய வேண்டியவைகளைத் தவிர்த்து  மற்றவைகளை அதற்குரியவர்களிடம் கொடுத்து அது சரியாக நடைபெறுகிறதா? என்று மட்டும் கண்காணிக்கிறேன். வேலை செய்வதில் அவர்களும், கண்காணிப்பதில் நானும் முழு கவனம் செலுத்துவதால் குறிப்பிட்ட நேரத்திற்குள் அன்றைய வேலைகளை முடித்து விட முடிகிறது. பத்தாண்டுகாலமாக இதைத் தான் நான் கடைப் பிடித்து வருகிறேன் என்றார். இப்பொழுது எனக்குப் போலவே உங்களுக்கும் புரிந்திருக்குமே வெற்றியாளர்கள் கடைப்பிடிக்கும் சூத்திரம்!

எந்த வேலையை நானே செய்ய வேண்டும்? எதைப் பிறரிடம் கொடுக்க வேண்டும்? பகிர்ந்து செய்ய வேண்டிய வேலைகள் எவை? என்ற பட்டியலைத் தயார் செய்து கொள்ளுங்கள். அதன் படி உங்களுடைய செயல்பாடுகளை அமைத்துக் கொள்ளுங்கள். அப்படிச் செய்யும் போது செயலின் மீது ஒருமித்த கவனத்தை உங்களால் செலுத்தமுடிவதோடு பல மணி நேரங்களைச் சேமிக்கவும் முடியும்,

ஒருமித்த கவனத்தோடும், போதிய அளவு நேரக் கையிருப்போடும் செய்யும் வேலைகளில் தொய்வு ஏற்படாது. அயர்ச்சி வராது. உற்சாகம் தானாகவே பற்றிக் கொள்ளும். உற்சாகத்தோடு உங்களுடைய வேலையைச் செய்வதை விடவும் வேறென்ன சந்தோசம் வேண்டும் உங்களுக்கு?

நன்றி : அச்சாரம் மாத இதழ்

2 comments:

  1. அருமையான அவசியமான பதிவு
    சொல்லிச் சென்றவிதம் மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  2. கடந்த 10 நாள்களுக்கும் மேலாக சொந்த மற்றும் ஆய்வுப்பணியாக வெளியூர் சென்றிருந்தேன். தற்போதுதான் வலைப்பக்கம் வரமுடிந்தது. தொடர்ந்து பதிவுகள் மூலமாகச் சந்திப்போம். /// நீங்கள் சொல்வதில் சிலவற்றை என் பணியில் கடைபிடித்துள்ளேன். பயனுள்ள பதிவு. பாராட்டுகள்.

    ReplyDelete