Saturday 24 June 2017

மனநிலையை மாற்றுங்கள்

எல்லோரும், எப்பொழுதும் நம்மை ஏற்றுக் கொள்ள வேண்டும். நம் செயல்களை அங்கிகாரம் செய்ய வேண்டும் என நினைப்பது மனித இயல்பு. உண்மையில் அப்படி எதுவும் நிகழ்வதில்லை. உறவுகளுக்கிடையேயான பெரும்பாலான விரிசல்கள் இப்படியான நிராகரிப்புகளாலயே உருவாகின்றன. சாதாரண விசயங்களுக்கே இப்படியான நிலை என்கின்ற போது வெற்றி சார்ந்த முயற்சிகளுக்கு கேட்கவே வேண்டாம். ஆனால் இப்படியான மறுப்புகளைக் கடந்து வெற்றியை வசப்படுத்துவதில் தான் உங்களுடைய அடையாளம், தனித்தன்மை அடங்கி இருக்கிறது.

ஒருவர் தன்னுடைய அனுமானம், அபிமானம் அல்லது அவருக்கு அது சார்ந்து முன்னர் கிடைத்த அனுபவம் மூலமாக மட்டுமே உங்களையும்உங்கள் செயல்களைப் புறக்கணிக்கிறார். அவருக்குள் இருக்கும் சில முன் முடிபுகள் அப்படியான புறக்கணிப்புகள் உருவாகக் காரணமாக அமைகின்றன. இந்த எதார்த்த நிலையை உணராமல் உங்களின் செயல் அங்கீகரிக்கப்படவில்லை என்று சொல்லிக் கொண்டு அதைக் கைவிட்டு விட்டால் ஒருநாளும் உங்களால் வெற்றி பெற முடியாது. மற்றவர்களின் விருப்பத்திற்குத் தன்னை வளையக் கொடுப்பவர்களால் ஒருநாளும் சாதிக்க முடியாது.

கலிலியோ உலகம் உருண்டை எனச் சொன்ன போது அவரை எவரும் அங்கீகரிக்கவில்லை. அந்த நிஜத்தை அதைப் புறக்கணித்தவர்கள் புரிந்து கொள்ள சில வருடங்கள் தேவையாக இருந்தது. அதுபோல உங்களுடைய வெற்றிக்கான ஆரம்பச் செயல்களை, முன்னெடுப்புகளை மறறவர்கள் ஆரம்பத்தில் புறக்கணிக்கலாம், நிராகரித்துப் பேசலாம். அவைகளை எல்லாம் புறக்கணித்து நீங்கள் வெற்றி பெறும் போது அவர்கள் உங்களைத் தானாகவே அங்கீகரிக்க ஆரம்பித்து விடுவார்கள்

ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறக்கும்என்பதில் இருக்கும் நம்பிக்கையை இன்னும் கொஞ்சம் நீட்டி இன்னொரு கதவும் திறக்காவிட்டால் புதிய கதவைத் திறக்க வைக்க என்ன செய்யலாம்? என யோசியுங்கள். இலக்குகளை தீர்மானித்து அதற்கெனத் திட்டங்களை உருவாக்கும் போதே இப்படியான யோசனைகளையும் அதில் இணைத்துக் கொள்ளுங்கள்.

வெற்றியை அடைவதற்கான போராட்டத்தில் எப்பொழுதும் ஒர் தொடர் முயற்சியாளனாக இருக்க வேண்டியது முக்கியம். தொடர்ந்து……..தொடர்ந்து…..…தொடர்ந்து என நீங்கள் செய்யும் முயற்சிகளை ஒரு கட்டத்தில் வெற்றி என்ற புள்ளியில் வந்து முடிக்க வேண்டுமானால் ஒரு விற்பனை பிரதிநிதியின் மனநிலைக்கு உங்களை உள்ளாக்கிக் கொள்ள வேண்டும். இன்று இத்தனை நபரிடம் தன்னுடைய நிறுவனத்தின் பொருட்களை விற்க வேண்டும் என முடிவு செய்து கொண்டு செல்லும் விற்பனைப் பிரதிநிதி எடுத்த எடுப்பிலேயோ அல்லது ஆரம்பித்த சில மணி நேரங்களிலோ தன்னுடைய முதல் விற்பனையை முடித்து விடுவதில்லை

ஒரு வாடிக்கையாளர் தன்னையும், தன் பொருளையும் புறக்கணித்து விடுகிறார் என்பதற்காகச் சுருங்கிப் போவதில்லை. ஒருவர் மறுத்து நிராகரிக்கும் போது அடுத்த ஒருவரைச் சந்திக்கிறார். இப்படியே அவருடைய சந்திப்பு அன்றைய தன் இலக்கை எட்டும் வரைக்கும் நீண்டு கெண்டே போகிறது. ஒரு கட்டத்தில் தனக்கும், தான் விற்பனை செய்யும் பொருளுக்குமான சரியான வாடிக்கையாளரைக் கண்டடைந்து முதல் விற்பனையை முடிக்கிறார். ஒரு விற்பனையை நிகழ்த்திக் காட்டவே இத்தனை போராட்டம் தேவையாக இருக்கும் போது அன்றைய இலக்கை அடைய அவர் எத்தனை புறக்கணிப்புகளை புறந்தள்ளி இருக்க வேண்டும்; நிராகரிப்புகளை நிராகரித்திருக்க வேண்டும்

அன்று அவரால் ஒரு விற்பனையைக் கூட முடிக்க முடியாமல் போனாலும் அதற்காக அவர் கவலைப்படுவதில்லை. மறுநாளும் அதைத் தொடர்கிறார். இந்தத் தொடர் ஓட்டத்தில் சளைக்காமல் ஓடுகிறவர்கள் சாதிக்கிறார்கள். சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் முதன்மை விற்பனையாளராக முடிசூட்டப்பட்டு உயர் பதவிகளுக்குச் செல்கிறார்கள்

என் சொந்த வாழ்க்கையில் இருந்து ஒரு சம்பவம் சொல்கிறேன்சங்கே முழங்குநல்லாசிரியர்களுக்கான டிப்ஸ்என்ற நூலை எழுதி முடித்ததும் அதை ஒரு பதிப்பாளரிடம் பதிப்பிக்கக் கேட்டிருந்தேன். அதை வாசித்து முடித்திருந்த பதிப்பாளர்பொதுவாகவே ஆசிரியர்களுக்கு யோசனைகள் சொல்ல மட்டுமே பிடிக்கும். கேட்கப் பிடிக்காது. அதனால் இதைப் பதிப்பித்தாலும் விற்பனை என்பது எதிர்பார்த்த அளவில் இருக்காதுஎன்ற குறிப்போடு அதைத் திருப்பி அனுப்பினார். இந்தப் பதிப்பகம் மூலம் இந்த நூல் வந்தால் மிகச் சரியான கவனிப்பைப் பெறும் என நான் நினைத்திருந்த பதிப்பகம் நிராகரித்து விட்டது என்பதற்காகச் சும்மா இருந்து விடவில்லை. இன்னொரு பதிப்பாளருக்கு அனுப்பினேன். அவரும் அதே பொருள் படும்படியான குறிப்போடு திருப்பி அனுப்பினார். ஆனால் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் தகவல்கள் மற்றும் என் எழுத்தின் மீது இருந்த நம்பிக்கை மட்டும் எனக்குக் குறையவில்லை

அதன்பின் கல்வித்துறையில் இருக்கும் சிலரிடம் கையெழுத்துப் பிரதியை வாசிக்கக் கொடுத்துவிட்டு புதிய பதிப்பாளரை தேடும் வேலையையும் செய்து கொண்டே இருந்தேன். ஒரு கட்டத்தில் வாசிக்கக் கொடுத்தவர்களிடமிருந்து  நூலில் இடம் பெற்றிருக்கும் தகவல்கள், விசயங்கள் குறித்துச் சாதகமான ஊக்குவிப்புகள் வர அதேநேரம் பதிப்பாளரும் கிடைத்தார். மூன்று பதிப்பகங்கள் புறக்கணித்திருந்த நிலையில் அருணா பப்ளிகேஷன் பதிப்பாளரிடம் தொகுப்பை பதிப்பிற்காக கொடுத்த போது முந்தைய பதிப்பாளர்கள் சொல்லி இருந்தவைகளையும் சொன்னேன். அவரோ நாம ஏன் அப்படி நினைக்கனும்? எங்கள் பதிப்பகம் மூலம் கொண்டு வருகிறேன் என்றார். இன்று என்னை அடையாளப்படுத்தும் நூல்களில் அதுவும் ஒன்றாக இருக்கிறது. எனவே நான் உங்களுக்குச் சொல்வதெல்லாம் புறக்கணிப்புகளைப் புறந்தள்ளுங்கள். நிராகரிப்புகளை நிராகரியுங்கள். அவமானங்களை அலட்சியப்படுத்துங்கள். இலக்கை அடையும் வரை விடாது முயலுங்கள். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பதை எப்பொழுதும் நினைவில் வையுங்கள். முயன்றால் முடியாததில்லை என்பது பழமொழி மட்டுமல்ல உங்களை வெற்றியாளராக்கும் மொழியும் கூட என்பதை மறந்து விடாதீர்கள்.

நன்றி : அச்சாரம் மாத இதழ்

2 comments:

  1. ஒவ்வொரு வரியும் வெற்றியின் படிக்கட்டுகள்...

    ReplyDelete
  2. அற்புதமான வார்த்தைகள். அவமதிப்புகளையும் புறக்கணிப்புகளையும் புறந்தள்ளி, சுய நம்பிக்கையோடு, அதே சமயம் மற்றவர்களின் நல்ல ஆலோசனைகளை கவனத்தில்
    கொண்டு செயல்படுபவனுக்கு என்றோ ஒருநாள் வெற்றி வந்தே தீரும். உங்கள நூல்கள் உண்மையிலேயே தரமானவை. நிச்சயம் அவை தமக்குரிய மதிப்பை பெற்றே தீரும். யாரும் தடுக்கமுடியாது. - இராய செல்லப்பா சென்னையில் இருந்து.

    ReplyDelete