Sunday 22 October 2017

புனித யாத்திரை புறப்படுவோம்!

மனிதனைப் புதுப்பிக்கக் கூடிய மிகப் பெரிய சக்தி பயணங்களுக்கு உண்டு. அந்தப் பயணத்தை பக்தி சிரத்தையாக புண்ணிய தலங்களை நோக்கி ஒருவன் மேற்கொள்ளும் போது அதுயாத்திரையாகிறது.  
 
ஒவ்வொரு மதமும் தன் மதத்தவர்கள் சென்று வருவதற்கென புனித இடங்களைக் கொண்டுள்ளன. அங்கு  தன் வாழ்நாளில் ஒரு முறையேனும் சென்று வர வேண்டும் என ஒவ்வொருவரும் நினைத்தாலும் அக்காலங்களில் அது அத்தனை சாத்தியமாய் இருக்கவில்லை. இன்றோ அத்தகைய நிலைமை இல்லை. அக்காலங்களில் செய்ய வேண்டிய பிரயாத்தனங்கள் இப்போது தேவையில்லை. நவீன வசதிகள் பயணங்களைப் போல யாத்திரைகளையும் எளிமையாக்கி விட்டன. வாகன வசதிகளால் வழித்தடங்களும், பயண நேரங்களும் சுருங்கின. இதனால் எல்லோராலும் நினைத்த நேரத்தில் யாத்திரைகளை மேற்கொள்ள முடிகிறது

யாத்திரையை ஆகமங்கள் தீர்த்த யாத்திரை, தல யாத்திரை என இரண்டாக வகைப்படுத்துகின்றன. தீர்த்த யாத்திரை என்பது புனிதமான நீர்நிலையை ஒட்டி அமைந்திருக்கும் இடங்களுக்குச் சென்று வருவதைக் குறிக்கும். தல யாத்திரை என்பது நீர்நிலையை ஒட்டியதாக இல்லாத திருத்தலங்களுக்குச் சென்று வருவதைக் குறிக்கும். தெய்வங்கள் அனைத்தும் நீரில் உறைவதாக வேதங்கள் குறிப்பிடுகின்றன. அதனாலயே ஆலய வழிபாடுகளிலும், தெய்வ காரியங்களிலும் இறைவனை நீரில் ஆவாகனம் செய்கின்றனர். அப்படி இறைவன் உறைந்திருக்கும் புண்ணிய நதிகளை நோக்கிய யாத்திரைகளினால் மனிதர்களாகிய நம்மைப் பிடித்திருக்கும் நோய்கள் மட்டுமல்ல பாவங்களும் நீக்கப்படுகின்றன. அதன் காரணமாகவே அக்காலங்களில் மன்னர்களும் சாதாரண குடியானவன்களைப் போலவே தீர்த்த யாத்திரைகளை மேற்கொண்டனர். யாத்திரைப் பயணங்களைச் செய்து மீண்டும் தங்கள் இருப்பிடம் திரும்புபவர்கள் புண்ணியம் செய்தவர்களாக போற்றப்பட்டனர்.

யாத்திரைகளை பயணங்களைப் போல சட்டென செய்து விட முடியாது. அதற்கென பல நியதிகளை, வழிமுறைகளை சாஸ்திரங்கள் வகுத்திருக்கின்றன. அத்தகைய நியதிகளின் படி மேற்கொண்டால் மட்டுமே அந்த யாத்திரையின் பலனை முழுமையாகப் பெற முடியும். இஸ்லாமியர் மெக்காவுக்கும், கிறிஸ்தவர் ஜெருசலத்துக்கும், பெளத்தர் கயாவுக்கும் சென்று வருவதை தன் வாழ்நாள் கடமையாக அத்தகைய மதங்கள் விதித்திருப்பதைப் போல ஒவ்வொரு இந்துவுக்கும் தன் வாழ்நாளில் ஒரு முறையேனும் காசிஇராமேஸ்வரம் சென்று வருவது கடமையாக விதிக்கப்பட்டிருக்கிறது. காசிஇராமேஸ்வரம் இரண்டும் தனித்தனி அல்ல. ஒன்றுக் கொன்று தொடர்புடையது. ஒன்றில் இருந்தே இன்னொன்று தொடங்குகிறது. இவ்விரு தலங்களில் ஏதாவது ஒரு தலத்துக்கு மட்டும் யாத்திரை சென்று வந்தால் அதனால் பலனில்லை. அந்த யாத்திரை முழுமை பெறாது. அதனால் தானோ என்னவோ காசி, இராமேஸ்வரம் இரண்டையும் தனித்தனியாக குறிப்பிடாமல் இரண்டையும் சேர்த்தே குறிப்பிடும் வழக்கம் இப்போதும் வழக்கில் உள்ளது. இந்து மதத்தவர் மட்டுமல்ல மற்ற மதத்தவராலும் கூட காசியோடு இராமேஸ்வரத்தை இணைத்தே பார்க்க முடிகிறது. யாத்திரை போரேன் என யாரிடமாவது சொல்லிப் பாருங்கள். பதிலுக்கு அவர் காசியா? இராமேஸ்வரமா? என்று தனித்தனியாகக் கேட்பதில்லை. மாறாக காசி, இராமேஸ்வரமா? என்று சேர்த்தே கேட்பார்கள். இப்படி மறைந்த காஞ்சி பெரியவருக்கு வண்டி ஓட்டிச் சென்ற ஒரு இஸ்லாமியச் சிறுவன் கேட்டதாலயே இராமேஸ்வர அக்னிதீர்த்தக் கடலில்சங்கர மடம்உருவானது

காசி யாத்திரை என்பது நியதிப்படி இராமேஸ்வரத்தில் தொடங்கி இராமேஸ்வரத்தில் முடிவடைகிறது.. அத்தகைய நியதிகளோடு காசியாத்திரையை அக்கால கட்டத்தில் ஒருவர் செய்து முடித்து திரும்புவதற்கு வருடங்கள் தேவைப்பட்டன. சென்றவர்கள் திரும்பாமலேயவும் போயிருக்கிறார்கள். அத்தனை கஷ்டத்தில் நிகழக்கூடிய இத்தகைய தீர்த்த யாத்திரையை தருமங்களிலேயே தலையாயது என வேதங்கள் சுட்டுகின்றன.  

வாகன வசதிகள் பெரிய அளவில் இல்லாத நிலையில் கூட்டம், கூட்டமாக தீர்த்த யாத்திரைகளை மக்கள் மேற்கொண்டனர். மன்னர்கள் அவர்களுக்கென பல வசதிகளைச் செய்து கொடுத்தனர். கால் நடையாய் வருபவர்கள் உண்டு, உறங்கவும், காலாற இருந்து செல்லவும் மன்னர்களோடு வசதிபடைத்தவர்களும் நடைபாதை தோறும் சத்திரங்களைக் கட்டி வைத்தனர். அப்படி சேதுயாத்திரைக்கு (இராமேஸ்வர யாத்திரை) வரும் பக்தர்களுக்கு அப்பகுதியை ஆட்சி செய்து வந்த சேதுபதிகள் பலவித வசதிகளை செய்து கொடுத்தனர். யாத்திரிகர்கள் தங்கிச் செல்ல வசதியாக வழி எங்கும் சத்திரங்களைக் கட்டினர். இந்த சத்திரங்களின் சிதைவுகள் இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் சில கிலோ மீட்டர் இடைவெளிகளில் வரிசையாக அமைந்திருப்பதை இன்றும் காணலாம். சத்திரங்கள் மட்டுமல்ல அந்தச் சத்திரங்களின் பிண்ணனியில் ஒரு சரித்திர சம்பவமும் உண்டு.

இராமநாதபுரத்தை விஜயரகுநாத சேதுபதி ஆட்சி செய்த போது இராமேஸ்வரம் செல்ல படகில் வந்திறங்கும் பக்தர்களுக்காக பாம்பனில் நிறைய சத்திரங்களைக் கட்டி அதன் ஆளுனராக தண்டத்தேவர் என்பவரை நியமித்திருந்தார். அவருக்கு தன் இருமகள்களையும் திருமணம் செய்து கொடுத்திருந்தார். அந்தகால கட்டத்தில் பாம்பனுக்கும், இராமேஸ்வரத்திற்கும் இடையே சரியான சாலைவசதிகள் இல்லாததால் புதிய சாலைகளை உருவாக்க நினைத்த தண்டத்தேவர் யாத்திரைக்கு வரும் பக்தர்களிடம் சிறுதொகையை வரியாக வசூல் செய்தார். இதைக் கேள்விப்பட்ட சேதுபதி தண்டத்தேவர் தன்னைக் கேட்காமல் வரிவசூல் செய்ததோடு சிவத்துரோகமும் செய்து விட்டார் எனக் கூறி அவருக்கு மரண தண்டனை விதித்தார்இதையறிந்த சேதுபதியின் மகள்கள் இருவரும் தன் கணவனின் சிதையில் விழுந்து உடன்கட்டை ஏறி உயிரை விட்டனர். அவர்கள் உடன்கட்டை ஏறிய இடம்தீப்பாஞ்சகாணி” (காணிஇடம்; தீப்பாஞ்சகாணிதீயில் பாய்ந்த இடம்) என்ற பெயரில் தண்டத்தேவரின் அரண்மனை இருந்த இடத்தின் (இப்போதைய தங்கச்சிமடம்) எதிரே அமைந்துள்ளது.

தீயில் விழுந்து உயிர் விட்ட அக்காள், தங்கை இருவரின் நினைவாக இருமடங்கள் உருவாக்கப்பட்டன. அக்காள் மடத்தை சிவக்குமார முத்து விஜயரகுநாத தேவரும், தங்கச்சி மடத்தை கட்டையத் தேவரும் கட்டினர். அம்மடங்களைச் சுற்றி எழுந்த ஊர்கள் பின்னர் அம்மடங்களின் பெயர்களாலயே அழைக்கப்பட்டது.

வேறு சில நூல்களில் தண்டத்தேவர் பக்தர்களின் உணவிற்காக பணமும், வரியும் வசூலித்து வந்ததையறிந்த சேதுபதி மருமகனைத் தண்டித்தால் மகள்கள் கவலைப்படுவார்களே என நினைத்தார். எனவே, மகள்களை அழைத்து குற்றவாளி யாரென்று கூறாமல் இதற்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? எனக் கேட்க, அவர்களோ பணம் வாங்கியவரின் கையை வெட்டி விடும்படி கூறினர்அதன்பின் குற்றவாளி யாரென தெரிந்தும் தங்களின் முடிவை அவர்கள் மாற்றிக் கொள்ளவில்லை. இந்த நிகழ்ச்சியின் நினைவாக உருவாக்கப்பட்டவைகளே அக்காள் மடமும், தங்கச்சி மடமும் என குறிப்புகள் உள்ளது.

சுற்றுலாவிற்கும், யாத்திரைக்குமான வித்தியாசத்தை உணர்ந்தால் மட்டுமே அதை அதற்குரிய நியதிப்படி மேற்கொண்ட்டு முழுப் பலன்களைப் பெற முடியும். அதனாலயே சுற்றுலாவை சந்தோசங்களுக்காக வைத்தவர்கள் யாத்திரையை ஆன்மிகத்தோடு இணைத்து வைத்தார்கள். ஒழுங்கும், அவசரமின்மையும், அடுத்த முறை வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்ற அலட்சியப் போக்கும் யாத்திரைக்கான பலனை முழுமையாக பெற்றுத் தராது. எனவே யாத்திரைக்கான நியதிகளின் படி நாமும் பயணத்தைத் தொடங்குவோம். வாருங்கள்

நன்றி : ஆன்மிகம் மாதமிருமுறை இதழ்




No comments:

Post a Comment