பல வீடுகளில் மாமியாருக்கும், மருமகளுக்கும் ஒத்துப் போகாது. இருவருக்குமான உரசலில் அம்மா பக்கமா? மனைவி பக்கமா? என முடிவெடுக்கத் தெரியாமல் ஆண் விழி பிதுங்கிப் போவான். சில வீடுகளில் இந்த நிலை அப்படியே தழைகீழாக இருக்கும். மாமனாருக்கும், மருமகனுக்கும் ஒத்துப் போகாது. அப்பாவா? கணவனா? என முடிவெடுக்க முடியாமல் பெண் பரிதவித்துப் போவாள். மனித குலத்துக்கு மட்டுமே வாய்த்த இப்படியான சிக்கல்களில் சில சமயம் இறைவனும் சிக்கிக் கொள்வதுண்டு.
சிவபெருமானுக்கும், அவருடைய மாமனார் தட்சனுக்கும் எப்பொழுதும் ஒத்துப் போகாது. ஒரு கட்டத்தில் மருமகனை மட்டம் தட்ட முடிவு செய்த தட்சன் மாபெரும் யாகத்திற்கு ஏற்பாடு செய்தான். தேவர்கள், முனிவர்கள், அரசர்கள், சித்தர்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுத்தவன் மருமகனை மட்டும் அழைக்கவில்லை. சிவபெருமான் தட்சனுக்கு மருமகனாய் இருக்கலாம். ஆனால் தங்களுக்குத் தலைவனில்லையா? ஈசனுக்கே அழைப்பில்லாத போது நாம் மட்டும் சென்றால் நன்றாக இருக்காதே எனத் தயங்கி நின்றனர். ஆனால், தட்சனின் செல்வாக்கும், முன் கோபமும் அவர்களின் தயக்கத்தை உடைத்தெறிந்தது. தட்சனின் அழைப்பை ஏற்று யாகத்திற்கு செல்ல முடிவு செய்தனர். பிரம்மா, சூரியன் உள்ளிட்ட பெருந்தலைகள் சூழ்ந்திருக்க தட்சன் யாகத்தை நடத்தினான்.
தன் கணவனைப் புறக்கணித்து தந்தை நடத்தும் யாகசாலைக்குள் நுழைந்த பார்வதி தேவியை மகள் என்றும் பாராமல் தட்சன் அலட்சியப் படுத்தினான். அவமானத்தோடு பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்குத் திரும்பிய மனைவிக்கு ஆதராவாக சிவபெருமான் வந்தார். கோபத்தின் உச்சத்தில் யாகத்தை கலைத்து எறிந்தவர் கண்ணில் பட்டவர்களை எல்லாம் கோபத்தால் துளைத்தெடுத்தார். சூரியன் தனக்குக் கிடைத்த பாவத்திற்கு பரிகாரம் வேண்டி வன்னி மந்தார மரங்கள் சூழ்ந்த வனமாக இருந்த இடத்தில் தவமிருந்தான். அந்த இடம் உப்பூர்!
வடமொழியில் இவ்வூர் “லவணபுரம்” என்றழைக்கப்படுகிறது. ”லவணம்” என்ற வடமொழி சொல்லுக்கு ”உப்பு” என்று பொருள். அதனால் இத்தலம் ”உப்பூர்” என்று அழைக்கப்படுவதாகவும், உப்புத்தொழில் அதிகமாக நடைபெறும் ஊர் என்பதால் ”உப்பூர்” என பெயர் பெற்றதாகவும் ஊருக்கான பெயர் காரணங்கள் கூறப்படுகின்றன. சூரியன் தவமிருந்து பாவ விமோசனம் பெற்ற தலம் என்பதால் ”சூரியபுரி”, ”தவசித்தி புரி”, ”பாவ விமோசனபுரி” என்றும், வன்னி, மந்தார மரங்கள் நிறைந்த காடாக ஆரம்பத்தில் இருந்ததால் ”வன்னி மந்தார வனம்” என்றும் இத்தலத்திற்கு வேறு பெயர்களும் உண்டு.வாகன வசதிகள் இல்லாத காலத்தில் வழிப்போக்கர்கள், பக்தர்கள் தங்கிச் செல்ல ஆங்காங்கே சத்திரங்கள் கட்டப்பட்டிருக்கும். அப்படி இவ்வூரில் அமைந்திருந்த சத்திரத்தில் வந்து தங்கிச் செல்பவர்களின் மீது விழும் வெயிலை தானும் பிரியப்பட்டு வாங்கிக்கொள்ள விநாயகர் விரும்பினார். அதற்காகவே பக்தர்கள் தங்கிச் செல்லும் சத்திரம் அருகிலேயே மரத்தடியில் எழுந்தருளினார். அதனால் “வெயில் உகந்த விநாயகர்” எனப் பெயர் பெற்றார்.
சூரியனின் தவத்தால் மகிழ்ந்த விநாயகர் அவன் பாவத்தை போக்கி அவனுக்கு அருள் புரிந்தார். அப்போது சூரியன் தன் முழுகதிர்களும் விழுந்து வணங்குமாறு தனக்கு அருள் புரிய வேண்டும் என கேட்டுக்கொள்ள விநாயகரும் அதற்கு சம்மதித்து ஆசி வழங்கினார். அவன் விருப்பபடியே தட்சிணாயன காலத்தில் தெற்கு பக்கத்தில் இருந்தும், உத்தராயண காலத்தில் வடக்கு பக்கத்தில் இருந்தும் இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் விநாயகரின் மேல் சூரிய ஒளிபடுகிறது. அதனால் ”வெயில் உகந்த விநாயகர்” என்றழைக்கப்படுகிறார் என்று தலபுராணம் கூறுகிறது.
இராமநாதபுரத்திலிருந்து தொண்டி செல்லும் வழியில் அமைந்துள்ள இத்தலம் இராமாயண காலத்திற்கு முந்தைய பழமை வாய்ந்தது. 1905 ம் ஆண்டில் இராமநாதபுரத்தை ஆண்ட சேதுமன்னர் பாஸ்கர சேதுபதியால் கட்டப்பட்டது என்றும், பாஸ்கர சேதுபதியின் அனுமதியுடன் தேவகோட்டை ஜமீன்தார் இராமசாமி செட்டியாரால் 1885 ம் ஆண்டு முதல் 1990 ம் ஆண்டு வரை ஒன்றரை இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது என்றும் வெவ்வேறு குறிப்புகள் உள்ளன. இந்த விநாயகர் ஆலயத்தில் சூரிய ஒளி சன்னிதியில் விழுமாறு உட்பிரகாரத்திற்கும், கருவறைக்கும் இடையே மேல்தளம் இல்லாதவாறு திறந்தவெளியாக அமைந்துள்ளது. ஆரம்பத்தில் எல்லா கோவில்களையும் போல் கர்ப்பகிரகத்தின் மீது சூரியஒளி படாதவாறு கட்டப்பட்டதால் அது இடிந்து தரைமட்டமானதாகவும் மரத்தடியில் வீற்றிருந்த விநாயகர் ஒரு அர்ச்சகர் வடிவில் மன்னரின் கனவில் தோன்றி அர்த்த மண்டபத்தின் மேல்கூரையை மூடாமல் தனக்கு ஆலயம் கட்டுமாறு கூறியதால் அவ்வாறு கட்டப்பட்டதாகவும் செவிவழிக்கதைகள் கூறப்படுகிறன.
அதன் பின்னர் விநாயகர் அருளியபடி சூரியக்கதிர்கள் படுமாறு அமைக்கப்பட்டதாகவும், வேதவியாசகர் பதிணென்கீழ்கணக்கு நூல்களை வகைப்படுத்த முடியாமல் திணறி நின்ற போது அதை சிறப்பாக செய்து முடிக்க உதவியவரும், திரிபுராவதிகளை சிவபெருமான் அழிக்க செல்லும் முன் சிவபெருமானே வணங்கி சென்ற வல்லமை மிகுந்தவருமான விநாயகரை இராமரும் வணங்கினார். இராவண யுத்தத்திற்காக இலங்கைக்கு செல்ல தான் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடைய வேண்டும் என வேண்டி நின்றார். முழு முதற்கடவுளையும், தன் சூரிய குல தெய்வத்தையும் ஒரு சேர வணங்கிய திருப்தியோடு சேது பந்தனம் நோக்கிக் கிளம்பினார். இராமரின் பயணம் தொடங்கிய இத்தலத்தில் இருந்தே இராமேஸ்வர யாத்திரையும் தொடங்குகிறது.
சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், லெட்சுமி தீர்த்தம் என்ற மூன்று தீர்த்தங்களுடன் நான்கடி உயர கம்பீர உருவத்தில் நாலுகால் மண்டப கருவறையில் வீற்றிருக்கும் விநாயகரை அங்குள்ள தீர்த்தத்தில் நீராடி வணங்கி வழிபட்ட பின் செல்ல வேண்டிய தலம் “தேவிபட்டிணம்”.
நன்றி : ஆன்மிகம் மாதமிருமுறை இதழ்
No comments:
Post a Comment