Saturday 3 March 2018

மாயவனைக் கட்டிப் போட்ட மன்னவன்!

பிரகாரங்களைக் கடந்து உள்ளே நுழைந்ததும் அனுப்பு மண்டபம் எனப்படும் முழுக்க கருங்கல்லினாலான சேதுபதி மண்டபம் வரவேற்கும். அதைக் கடந்து உள்ளே நுழைந்ததும் தெற்கு முகமாக பெரிய அனுமன் தன் வலக்கையை உயர்த்தியபடி காட்சி தருகிறார். அனுமன் கோவிலுக்கு எதிரில் மகாலட்சுமி தீர்த்தம் உள்ளது. தீர்த்தத்தில் நீராடிய பின்பு தான் சன்னிதிக்குள் சென்று வழிபட வேண்டும். இத்தீர்த்தத்தில் நீராடிய பின் அதே வழியாக மகாலட்சுமி சன்னிதிக்கு வரலாம்.

அனுமன் கோவிலுக்கு மேற்கு பக்கத்தில்சேதுபதீசம்” (சேதுபதி ஈஸ்வரம்) உள்ளது. சேதுபதி மன்னர்களில் ஒருவரான விஜயரகுநாத சேதுபதி நாள்தோறும் குதிரையில் வந்து இராமநாதரை வழிபட்ட பின்னரே இரவு உணவை உண்பது வழக்கம். ஒருமுறை அவர் வருவதற்குள் அர்த்தசாமபூஜை முடிந்து விட்டது. அதனால் இனியும் தரிசனம் தடைபடக்கூடாது என்பதற்காக இந்த சேதுபதீசத்தை உருவாக்கினார். இங்கு எழுந்தருளியிருக்கும் இராமநாதர், விசுவநாதர் இருவரும்சேதுபதியம்மன்என்றும் அழைக்கப்படுகின்றனர். இந்த வரலாற்றை நினைவு கூறும் வகையில் விஜயரகுநாத சேதுபதி குதிரை மீது சவாரி செய்யும் பாவணையில் அமைந்த உலோகச் சிற்பம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. சேதுபதீசத்தின் தெற்கே உள்ள சிறிய நடைமண்டபம் வழியாகவும் மகாலட்சுமி தீர்த்தத்தையும், மகாலட்சுமி சன்னிதியையும் அடையலாம்.

பொருள் முதலிய மங்கள செளபாக்கியங்களுக்கும் தலைவியான மகாலட்சுமியை தீர்த்தத்தில் நீராடி வழிபட்ட பின் நடைமண்டபம் வழியாக தெற்கு நோக்கிப் போனால் பர்வதவர்த்தினியின் சன்னிதியில் அமைந்த கல்யாணமண்டபம் வரும். ஆடி மாதத்தில் அம்மனுக்கு கல்யாண உற்சவ வைபவம் இந்த மண்டபத்தில் நடைபெறுவதால் இதற்குகல்யாணமண்டபம்என்ற பெயர் ஏற்பட்டது. இந்த கல்யாண மண்டபத்தின் இருபக்கத்திலும் விநாயகர் மற்றும் முருகன் சன்னிதிகள் உள்ளன.

மகாலட்சுமி தீர்த்தத்தை அடுத்து சாவித்திரி, காயத்ரி, சரஸ்வதி தீர்த்தங்கள் உள்ளன, மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்ட மிகப்பெரிய தொட்டியில் இம்மூன்று தீர்த்தங்களும் உள்ளன.

மேற்கு சுற்ற்றின் மேற்கு திசையில் ஸ்ரீ கோதண்டராமசாமி கோவில் கருவறையில் இருப்பதைப் போலவே கோதண்டராமர் கோவில் கொண்டுள்ளார். இக்கோவில் பகுதியில் கவய தீர்த்தம், கவாட்ச தீர்த்தம், நள தீர்த்தம், நீல தீர்த்தம், கந்தமாதன தீர்த்தம் என்ற ஐந்து தீர்த்தங்கள் உள்ளன, இத்துடன் பத்து தீர்த்தங்கள் நிறைவு பெறும்.

இதற்கடுத்து வெள்ளை சலவைக்கல்லால் வடிவமைக்கப்பட்ட சேதுமாதவர் கோவில் உள்ளது. கிழக்கு பார்த்து மகா மண்டபம், அர்த்த மண்டபம் ஆகியவைகளோடு அமைந்துள்ள இக்கோவிலில் சேதுமாதவராக எழுந்தருளியிருப்பவர் விஷ்ணு! அவர் இங்கு சேதுமாதவராக வந்ததற்கு ஒரு தனி கதை உண்டு.

மதுரையை ஆண்டு வந்த புண்ணியநாதி என்ற மன்னன் இங்குள்ள இராமநாதர் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தான். அவன் தனுஷ்கோடி சென்று விதிப்படி நீராடி விஷ்ணுவை முன்னிட்டு ஒரு யாகம் செய்தான். இராமநாதரையும் தரிசித்து வந்தான். இதனால் அவனுடன் விளையாடிப் பார்க்க நினைத்த விஷ்ணு மகாலட்சுமியை ஒரு சிறுமியாக அங்கே அனுப்பி வைத்தார். தனக்கு மகள் இல்லாத குறையை போக்கவே இப்பெண்குழந்தை கிடைத்திருப்பதாக நினைத்த மன்னன் அவளை அரண்மனைக்கு அழைத்துச் சென்று வளர்த்து வந்தான். பருவ வயதை அடைந்த மகாலட்சுமி அழகு தேவதையாய் விளங்கினாள். ஒருநாள் அவள் அரண்மனை தோட்டத்தில் பூக்கள் பறித்துக் கொண்டிருந்த போது வயதான அந்தணர் ஒருவர் அவளின் அழகில் மயங்கி கையை பிடித்து இழுப்பதைக் கண்ட காவலர்கள் பதறிப்போயினர். பாய்ந்து வந்தவர்கள் அந்தணரை பிடித்துக் கொண்டு போய் மன்னன் முன் நிறுத்தினர்.

நடந்தவைகளைக் கேட்டு கோபம் கொண்ட மன்னன் இராமநாதசாமி கோவிலில் உள்ள ஒரு மண்டபத்தில் கயிற்றாலும், சங்கிலியாலும் அந்தணரை கட்டிப்போட உத்தரவிட்டான். மன்னனின் உத்தரவு காவலர்களால் நிறைவேற்றப்பட்டது. மறுநாள் விடியும் நேரம் தான் கட்டிப்போட உத்தரவிட்ட வயதான அந்தணர் சங்கு, சக்கரம் ஏந்தி ஆதிசேஷன் மீது படுத்திருப்பதைப் போல மன்னன் கனவு கண்டான். பதறி எழுந்தவன் விடிந்ததும் தன் வளர்ப்பு மகளோடு இராமநாதசாமி கோவிலுக்கு வந்தான். அங்கு மண்டப தூணில் தன் கால்கள் விலங்கிடப்பட்ட நிலையில் விஷ்ணு அவனுக்கு காட்சியளித்தார்.

இதைக்கண்டு செய்வதறியாது திகைத்து தன்னை மன்னித்தருளும்படி பாதம் பணிந்து வனங்கி நின்ற மன்னனிடம் விஷ்ணு தன் விளையாட்டைப் பற்றி கூறினார். அதோடு தான் இங்கேயேசேதுமாதவர்என்ற பெயரில் தங்கப் போவதாகவும், இங்கு என்னை தரிசிப்பவர்களின் விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும் என்று கூறியும் அருளினார். மன்னனின் வளர்ப்பு மகளாய், அழகு தேவதையாய் அதுவரை அங்கு நின்றிருந்தவள் மகாலட்சுமியாய் மாறி விஷ்ணுவோடு இணைந்தாள். சேது மாதவர்ஸ்வேத மாதவர்என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார். “ஸ்வேதம்என்பதற்குவெள்ளை நிறம்என்று பொருள்.

ஹரியும் (விஷ்ணு), சிவனும் ஒன்னுஎன்பதை உலகிற்கு உணர்த்தும் விதமாக இவ்விருவரும் இத்தலத்தில் வீற்றிருகின்றனர். சேதுமாதவர் சன்னிதிக்கு அருகிலேயே சேதுமாதவ தீர்த்தம் அமைந்துள்ளது. தெப்பக்குளம் போன்ற அமைப்புடைய இத்தீர்த்தத்தில் நீராடி சேதுமாதவரையும், மகாலட்சுமியையும் தரிசிக்க வேண்டும்.

மேற்கு சுற்றும், மேற்கு கோபுர வாசலிலிருந்து சேதுமாதவர் சன்னிதிக்கு வரும் வழியும் கூடும் இடம் பெருக்கல் குறி போல இருக்கும். சொக்கட்டான் பலகையை நினைவுபடுத்தும் வகையில் அதன் தோற்றம் அமைந்துள்ளதால்சொக்கட்டான் மண்டபம்என்று அழைக்கப்படுகிறது. இந்த மண்டபத்தில் ஒரே கல்லில் உருவான மூன்று ஜன்னல்களும், அதில் பசுவின் முகமும் அமைந்திருப்பது பார்க்க கண்கொள்ளா காட்சியாகும்.

மூன்றாம் திருச்சுற்றின் வடமேற்கு மூலையில்ஸ்ரீ இராமலிங்க பிரதிஷ்டைநிகழ்ச்சி தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மூலையில் நடராஜர் சன்னிதி அமைந்துள்ளது. மற்ற கோவில்களில் உள்ளதை விட நடராஜர் விக்கிரகம் உயரமாகவும், சன்னிதியின் விமானம் ருத்திராட்ச மணிகளால் அமைக்கப்பட்டும் இருப்பது சிறப்பு. கணங்களுக்கெல்லாம் அதிபதியாய், சபாபதியாய் சிவகாமியோடு வீற்றிருக்கும் நடராஜரை வணங்கி வழிபடுவதோடு மூன்றாம் திருச்சுற்று முடிவடையும்.

நன்றி : ஆன்மிகம் மாதமிருமுறை இதழ்

1 comment: