Wednesday, 18 April 2018

புயல் தொடாத புண்ணிய தலம்!


உயர்ந்த மதில் சுவர்களைக் கொண்டு கிழமேல் 865 அடி நீளமும், தென் வடல் 657 அடி அகலமும் கொண்ட இராமேஸ்வரம் கோயில் ஆரம்பகாலத்தில் ஆலயமாக கட்டப்படவில்லை. 16  ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இவ்வாலயத்தை ஆரம்ப காலத்தில் தீர்த்தப் பெருமைகளுக்குரியதாக மட்டுமே மக்கள் போற்றி வந்துள்ளனர். ஆலயமாக உருமாற்றும் போது தீர்த்தமாடலுக்கு அது தடையாகலாம் என்று கருதி  மன்னர்களும், அரசர்களும் கோயில் எழுப்பவில்லை. பின்னர் ஆட்சி உரிமைக்கு வந்த சேதுபதிகள் தீர்த்தங்களை மறைக்காமலும், தீர்த்தமாடல்களுக்கு சிக்கல் வராத வகையிலும் ஆலயத்தை வடிவமைத்து கோபுரங்களைக் கட்டினர்.

ஆலயத்தின் முகப்பில் இருக்கும் அனுமனின் திருமேனி வித்தியாசமானது. இடுப்பு வரை மட்டுமே வெளியில் இருக்கும் படியாக அமைந்திருக்கும் திருமேனியில் முகம் பெரியதாய் வீங்கி, குழிந்து சிவந்தும் – சினந்தும், கண்களும், வாயும் சிறுத்தும் அமைந்திருக்கும். கால்களை உயரத் தூக்கி, வால் உயர்த்திய  பாவனையில் சாதிலிங்க குழம்பால் பூசப்பட்டிருக்கும். அனுமனின் இத் திருமேனி வடிவத்தை விஸ்வரூபத்தின் அடையாளமாக குறிப்பிடுகின்றனர். இக்கருவறையின் உள்புறம் மழைக்காலத்தில் நீர் உயர்ந்தும், மற்ற காலங்களில் நீர் இன்றியும் இருப்பது கூடுதல் சிறப்பு.


இராமேஸ்வர ஆலய மூன்றாம் பிரகாரம் உலகப்புகழ் பெற்றது.. முத்துராமலிங்க சேதுபதியால் கட்டப்பட்டது. கி.பி.1740 ல் தொடங்கி கி.பி.1770 வரை முப்பது ஆண்டுகள் இப்பிரகாரம் கட்டும் பணி நடைபெற்றது. கிழமேல் 690 அடியும், வட தெற்கில் 435 அடியும் கொண்டு விளங்குகின்றது. உள் பிரகாரங்கள் இருபுறங்களிலும் ஐந்து அடி உயரமுள்ள மேடை தூண்களின் அணிவகுப்பிற்கு நடுவில் அமைந்துள்ளது. உள் பிரகாரங்கள் தவிர முக்கிய சந்நிதிகளை சுற்றிலும் கிழ மேற்காக 117 அடியும், வடதெற்காக 172 அடி நீளமும், 17 அடி அகலமும் கொண்ட தனிப்பிரகாரங்கள் அமைந்துள்ளது. இப்பிரகார சுற்றுகள் எல்லாம் சேர்த்து மூன்றாம் பிரகாரம் நான்காயிரம் அடி சுற்றளவைக் கொண்டது. பிரகாரத்தின் இருபுறமும் இருபது முதல் முப்பது அடி அகலத்தில் ஐந்து அடி உயர திண்ணையும், 22 அடி 7.5 அங்குலம் உயரமுடைய தூண்களும் அமைந்துள்ளது. இப்பிரகாரம் முழுவதும் உள்ள 1212 தூண்களும் ஒரே நேர்வரிசையிலும், ஒன்றையொன்று மறைக்காத வகையிலும் அமைந்திருப்பது சிறப்பானதொரு அம்சமாகும்.அக்கால கட்டிட கலைக்குச் சான்றாக விளங்குகின்ற தூண்களும், அதில் உள்ள சிற்ப வேலைப்பாடுகளும் கடலின் உப்பு காற்றால் நாளடைவில் சிதிலமடைய ஆரம்பித்ததால் அவைகளை எனாமல் பூசி பாதுகாத்து வருகின்றனர். அதில் இரண்டு தூண்கள் மட்டும் இன்றும் அதே பழைய நிலையிலேயே பராமரிக்கப்பட்டு வருகிறது, உலகிலேயே மிகப்பெரிய நடைபாதை என்ற சிறப்பும், திருச்சுற்று அமைப்பிற்கு பெயர் பெற்றதுமான இப்பிரகார திருச்சுற்று “CORRIDORS” என்று அழைக்கப்படுகிறது. 1973 ம் ஆண்டில் இச்சுற்றின் மேற்குப்பகுதியில் தீப்பிடித்து மேல்தளம் சேதமானது. இதன் பின்னர் திருப்பணிகள் செய்யப்பட்டு 1975 ல் குடமுழுக்கு விழா நடைபெற்றது.

மூன்றாம் திருச்சுற்றில் வீற்றிருக்கும் நடராஜரின் சன்னதி விமானம்  நேபாளத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு இராமநாதருக்கு அபிஷேகம் செய்ப்யப்பட்ட 1,25,000 ருத்திராட்சங்களால் அலங்கரிக்கப்பட்டது. முழுச் சந்நிதியின் முன்பகுதியில் நடராஜர் சிவகாமி அம்மையாரோடு வீற்றிருக்க பின்பகுதியில் பதஞ்சலிக்கென சந்நிதி உள்ளது. பதினெண் சித்தர்களில் பதஞ்சலிக்கு உரிய தலம் இராமேஸ்வரம்!

ஆலயப் பிரகாரங்களின் மொத்த நீளம் 3850 அடியாகும். கிழக்கு இராஜ கோபுரம் 126 அடியுடன், 9 அடுக்கும், 9 கலசமும் கொண்டது. மேற்கு இராஜ கோபுரம் 78 அடியுடன்  5 அடுக்கும், 5 கலசமும் கொண்டது. 1925, 1947 மற்றும் 1975 ல் இக்கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பன்னிரெண்டு ஆண்டுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நிகழ வேண்டும் என்ற நியதி இராமேஸ்வரம் ஆலயத்திற்கு பொருந்தாமல் போனதாலயே வட, தென் கோபுரங்கள் மொட்டையாக இருப்பதாய் சொல்லப்படுவதுண்டு.

ஆலயத்தில் வெள்ளிரதம் உள்பட மொத்தம் 25 வாகனங்கள் உள்ளன.

தனுஷ்கோடி என்ற முழு ஊரே அழிந்து போகும் படியாக 1964 டிசம்பர் 23 ல் அடித்த புயலுக்கு இராமேஸ்வரம் நகரம் சேதமடைந்தாலும் இராமநாத சுவாமி ஆலயம் சேதமடையவில்லை.

காசி யாத்திரையை முறையாகத் தொடங்கி அதை நிறைவு செய்வதற்காக இராமநாதருக்கும், விசுவநாதருக்கும் அபிஷேகம் செய்ய கங்கை தீர்த்தத்தோடு வருவோரை மங்கல மேளதாளங்கள் முழங்க, நடன மாதர்கள் ஆட, பூர்ண கும்ப மரியாதையோடு வரவேற்கும் வழக்கம் முன்பு இருந்துள்ளது. இன்று விரைவான வாகன வசதிகளால் வட இந்தியர்கள் நாள் தோறும் கங்கை தீர்த்தத்தைக் கொண்டு வருவதாலும், கங்கையில் இருந்து கொண்டுவர வேண்டிய தீர்த்தத்தை ஆலயத்திற்குள்ளேயே குப்பிகளில் அடைத்து விற்பனை செய்வதாலும் முந்தைய வழக்கம் தற்போது வழக்கொழிந்து போனது.

இராமரின் பிரதிஷ்டைக்கான சிவலிங்கத்தை சீதை இங்குள்ள மண்ணைக் கொண்டு செய்ததால் ஏர் கொண்டு உழவு செய்யும் விவசாய தொழிலும், மண் கொண்டு செய்யும் வேறு எந்த தொழிலும் இராமேஸ்வரத்தில் இல்லை. அதேபோல, இராமலிங்கத்தின் முகப்பை போலவே செக்கின் முகப்பும் இருப்பதால் இங்கு செக்கு மூலம் எண்ணெய் எடுப்பதில்லை. இத்தொழில்களைச் செய்வது தெய்வ குற்றமாகவே கருதப்படுவதால் இன்று வரையிலும் இவ்வூரில் இத்தொழில்கள் இல்லை!

இராமேஸ்வரம் தீவு முழுமையும் ஆரம்பத்தில் கந்தமாதன பர்வதம் (பர்வதம் – மலை) என்றே அழைக்கப்பட்டது. இராமேஸ்வரத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மலை என அழைக்கப்பட்டாலும் அது மணல் குன்றே!. அதை இறுக்கக் கட்டி படிகள் அமைத்து அதன் உச்சியில் கோவில் அமைத்துள்ளனர். சீதையை மீட்க பாலம் கட்டும் பணியினை இம்மலை மீதிருந்து இராமர் பார்த்தாராம். இதனைக் குறிக்கும் வகையில் இராமர் பாதம் இம்மலை உச்சியில் அமைக்கப்பட்டுள்ளதோடு ”இராமர் பாதம்” என்றே இப்பகுதி அழைக்கபடுகிறது.

பாரம்பரியமாக இக்கோயிலில் பூஜைகள் செய்து வருகின்றவர்களைத் தவிர இராமலிங்கத்தை தொட்டு பூஜை செய்யும் உரிமை ஜகத்குரு ஸ்ரீ சிருங்கேரி சன்னிதானம், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகள், இராமபிரானின் குல வழி தோன்றலாக கருதப்படும் நேபாளமன்னர் ஆகிய மூவருக்கு மட்டுமே உண்டு.

அந்நிய படையெடுப்புகளுக்கு ஆலயங்கள் தப்பியதில்லை என்பது வரலாறு. அதற்கு இராமேஸ்வரம் கோயிலும் விதிவிலக்கல்ல. டச்சுக்காரர்கள் இவ்வாலயத்தைத் தாக்கி கொள்ளையிட முயல்வதை அறிந்த தாயுமானவர் தன் தவச்சாலையில் இருந்து வெளியேறி இளைஞர்களையும், வீரர்களையும் திரட்டி படைத்தளபதியாய் மாறி இராமேஸ்வரம் வந்திறங்கினார். மாலிக்காபூர் படையெடுப்பினையும் இவ்வாலயம் எதிர் கொண்டது. 

1935 ம் ஆண்டு ஐந்தாம் ஜார் மன்னரின் முடிசூட்டு விழாவின் வெள்ளி விழா ஆண்டின் போது இராமேஸ்வரம் கோவில் பொறிக்கப்பட்ட அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

வைகாசி விசாகத்துடன் முடியும் பத்து நாள் வசந்த விழா –
சுக்லசஷ்டியில் தொடங்கி மூன்று நாள் நடைபெறும் ஆனிமாத இராமலிங்க பிரதிஷ்டை விழா –
தேய்பிறை அஷ்டமி முதல் பதினேழு நாள் நடைபெறும் ஆடி மாத திருக்கல்யாண உற்சவ விழா –
பத்து நாட்கள் நடைபெறும் புரட்டாசி மாத நவராத்திரி விழா –
ஆறு நாட்கள் நடைபெறும் கந்த சஷ்டி விழா –
பத்து நாட்கள் நடைபெறும் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா – போன்றவைகளோடு சித்திரை பிறப்பு, பெரிய கார்த்திகை, சங்கராந்தி, தைப்பூச தெப்பம், வைகுந்த ஏகாதசி, ஸ்ரீ இராமநவமி. ஆடி அமாவாசை, தை அமாவாசை போன்ற விழாக்களும் கோவிலில் கொண்டாடப்படுகின்றன. இன்றைய வாகன வசதிகளால் இராமேஸ்வர யாத்திரையை ஒரே நாளில் முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பி விட முடியும். இருப்பினும் சிறப்பு மிக்க இராமேஸ்வர ஆலய விழாக்களில் ஏதாவது ஒன்றை அங்கு தங்கி, கண்டு,, இரசித்து அந்நாளில் இறைவனை தரிசித்தால் இராமர், ஈசனின் அருளைப் பூரணமாக பெறலாம். எனவே இறையருளை பூரமணமாக பெறும் வகையில் இராமேஸ்வர யாத்திரை பயணத்தை அமைத்துக் கொள்வது சிறப்பாகும். 

நன்றி : ஆன்மிகம் மாதமிருமுறை இதழ்
 

No comments:

Post a Comment