திருக்கயிலாய மலையில் சிவபெருமான் தன் துணைவி பார்வதி தேவியிடம் தான் ஏற்கனவே கற்றுக் கொடுத்திருந்த வேதமந்திரத்தை திருப்பிச் சொல்லும் படி கேட்க அதை அவர் மறந்து விட்டார். இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் பூலோகத்திற்குச் சென்று வேதியர் ஒருவரின் மகளாக பிறந்து வேதங்களை பலமுறை பயின்று வர பார்வதி தேவிக்கு சாபமிட்டார்.
சாபம் பெற்ற பார்வதி தேவியை இராஜமாணிக்க சதுர்வேதபுரம் என்ற ஊரில் முறைப்படி வேதம் பயின்ற, குழந்தை வரம் வேண்டி நீண்டகாலம் தன்னை நினைத்து தவமிருந்து வரும் வேதியர் ஒருவருக்கு மகளாக பிறக்கச் செய்தார். பூண் முலையாள் என்ற பெயரோடு வேதமந்திரங்களை கற்று வளர்ந்து வந்த பார்வதி தேவி பருவ வயதை அடைந்ததும் சிவபெருமான் வேதியர் உருவில் வந்து பார்வதி தேவியை மணந்தார்.
அங்கிருந்து மீண்டும் திருக்கயிலாய மலைக்கு அழைத்து வந்து வேதமந்திரங்களை சொல்லச் சொன்னார். அவரும் வேதமந்திரங்களை சொல்ல அதற்கான பொருளை சிவபெருமான் விளக்கினார். பார்வதி தேவியை தன் துணையாக திரும்ப பெற்று அவருக்கு வேத மறைபொருளை சிவபெருமான் உணர்த்தியதால் இத்தலம் “உத்தரகோச மங்கை” எனப் பெயர் பெற்றது. (கோசம் – வேதம்; உத்தரம் – திரும்ப பெறும் விடை; மங்கை – பார்வதி). ஆதிசிதம்பரம், மங்களபுரி, தட்சிண காசி, சதுர்வேத புரி என்ற வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.
இராவணன் அரசாண்ட காலத்தில், இராமேஸ்வரம் தோன்றுவதற்கு முன் உருவான இத்தலத்தில் உள்ள இக்கோவில் உலகில் தோன்றிய முதல் கோவில் என்றும், பூலோக கைலாயம் என்றும் சிறப்பித்து கூறப்படுகிறது. “மண் முந்தியோ….இல்லை…மங்கை முந்தியோ” என்று இப்பகுதி வழக்குச் சொல் இதை உறுதிப்படுத்தும். 120 அடி உயரம் உள்ள ஏழு நிலை கோபுரமும் அடுத்து 64 அடி உயர ஐந்து நிலை கோபுரமும் கொண்டு விளங்கும் இவ்வாலயம் ஏழு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு நடராஜ பெருமானுக்கு ஆதிசிதம்பரம் என்ற தனிக்கோவில் உள்ளது. இத்தலத்தில் மட்டும் தாம் மூலவராக நடராஜர் கோவில் கொண்டுள்ளார். மூலவர் ”மங்களநாதர்” என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்.
மண்டோதரி உலகிலேயே சிறந்த சிவபக்தனை மட்டுமே திருமணம் செய்வேன் என கூறி சிவபெருமானை வேண்டி தியானம் செய்ய ஆரம்பித்தாள். அவளுக்கு காட்சி தர முடிவு செய்த சிவபெருமான் தான் பாதுகாத்து வந்த வேத ஆகம நூல் ஒன்றை முனிவர்களிடம் கொடுத்து பத்திரமாக வைத்திருக்கச் சொல்லி விட்டு சென்றார். மண்டோதரியின் முன் குழந்தை வடிவில் காட்சி தந்த சிவபெருமானை அடையாளம் கண்டு கொண்ட இராவணன் சிவனை தொட அவனை சோதனைக்குள்ளாக்க நினைத்த இறைவன் அக்னியாய் மாறியதால் உலகில் அனைத்தும் தீப்பற்றி எரிந்தது. முனிவர்களிடம் பாதுகாப்பாக சிவபெருமான் வைத்திருக்கச் சொல்லி விட்டுச் சென்ற வேத ஆகம நூலுக்கும் ஆபத்து வந்ததால் பயந்து போன முனிவர்கள் தீர்த்தத்தில் குதித்து இறந்தனர். ஆனால், அங்கிருந்த மாணிக்கவாசகர் மட்டும் தைரியமாக நின்று அந்த நூலை காப்பாற்றினார். அதன்பின் இறைவன் இராவணனுக்கும், மண்டோதரிக்கும் திருமணம் நடக்க அருள்பாளித்தவர் ஆகமநூலை காத்து நின்ற மாணிக்கவாசகருக்கு தன்னைப் போன்றதொரு லிங்க வடிவத்தை கொடுத்தருளினார். மற்ற தலங்களில் மாணிக்கவாசகரின் திருமேனி துறவு நிலையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இங்கு மட்டும் தான் தனிச் சன்னிதியில் லிங்க வடிவில் காட்சி தருகிறார். இத்தலம் பற்றி ஒன்பது பாடல்களைப் பாடியுள்ள மாணிக்கவாசகர் “அழகமர் மண்டோதரிக்கு பேரருள் அளித்த பிரான்” என்று சிவனை பாடுகிறார்.
உலகிலேயே முழு மரகதத்தாலான நடராஜர் திருவுருவம் இங்கு மட்டுமே அமைந்துள்ளது. இதை வடிவமைத்தவர் சண்முக வடிவேலர். விருப்பாச்சியுடன் சேர்த்து ஏழடி உயரத்தில் அமைந்துள்ள இம்மரகதம் மிகவும் மென்மையான கல்லால் ஆனது. சாதாரண ஒலி அலைகளால் கூட உதிர்ந்து விழும் தன்மை கொண்டதால் “மத்தளம் கொட்ட மரகதம் உதிரும்” என்னும் வழக்குச் சொல் உருவானது. சிறிய ஒலி, ஒளி அதிர்வுகளால் கூட பாதிப்படையக்கூடிய இம்மரகதக் கல்லில் உளியால் 6.5 அடி உயரத்திற்கு சிலை வடிவமைக்கப்படுள்ளது. இச்சிலை ஆண்டு முழுவதும் சந்தனத்தால் கவசம் போல பூசி வைக்கப்பட்டு வருடத்திற்கு ஒருமுறை ஆருத்ரா தரிசனம் அன்று மட்டும் சந்தனகாப்பு களையப்பட்டு நடராஜர் சிலை பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படுகிறது. மரகதச் சிலையின் மீது பூசப்பட்டிருக்கும் சந்தனம் மருத்துவகுணம் உடையது.
நவக்கிரகங்களில் சனீஸ்வரர் மட்டுமே காட்சியளிப்பது இத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சமாகும். தவிர, இத்தலத்தில் உள்ள இலந்தைமரம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருப்பதாக கூறப்படுகிறது. இறைவன் சுயம்புவாக இம்மரத்தடியில் தோன்றியதாகவும், மாணிக்கவாசகர் இம்மரத்தடியில் தான் அமர்ந்திருந்தார் என்றும், வேதவியாசர், பராசரர் ஆகியோர் இம்மரத்தடியில் அமர்ந்து தவம் செய்ததாகவும், பதஞ்சலி, வியாக்கிரமர்கள் இம்மரத்தடியில் நிஷ்டையில் இருந்ததாகவும் தலச்சிறப்பு கூறுகிறது. இம்மரத்தின் அருகில் உள்ள லிங்கத்தின் மீது வரிசைக்கு ஐம்பது வீதம் இருபது வரிசைகளில் ஆயிரம் லிங்கங்கள் பொறிக்கப்பட்டுள்ளது.
அறையில் ஆடிய பதஞ்சலிக்கும், வியாக்கிரபாதருக்கும், காரைக்கால் அம்மையாருக்கும் நடராஜர் இங்கு தான் முதலில் காட்சி தந்து விட்டு அதன்பின் சிதம்பரம் சென்று அனைவரும் காணுமாறு ஆடினார். இதற்கு ஆதரமாக ஆரம்பகாலத்தில் உத்தரகோசமங்கைக்கும், சிதம்பரத்திற்கும் இடையில் சுரங்கப்பாதை இருந்ததையும் காலப்போக்கில் பராமரிப்பின்றி மணலால் அப்பாதை அடைபட்டு விட்டதையும் எடுத்துக்காட்டுகின்றனர்.
மாறவர்மன் சுந்தரபாண்டியன், தஞ்சை நாயக்க மன்னர் அச்சுதப்பர், மதுரை நாயக்க மன்னர் முத்து வீரப்பர், சேதுபதி மன்னர்கள் இக்கோவிலுக்கு திருப்பணிகள் செய்து மானியங்கள் வழங்கி உள்ளனர்.வருடம் முழுவதும் வற்றாத உப்புக்கரிக்கும் நீரை உடைய தெப்பக்குளத்தை உடைய இக்கோவில் குளத்தில் உள்ள மீன்கள் கடல்நீரில் வாழும் மீன் வகைகளைச் சேர்ந்தவைகள். கடல்நீரால் சூழப்பட்டிருந்த நீர்ப்பரப்பால் விளங்கிய இத்தலம் கடல்நீர் உள்வாங்கி சென்ற பின் இன்றைய நிலையை அடைந்தது.
இக்கோவிலின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு யாழி சிலைகளின் திறந்த வாய்க்குள் பந்து போன்ற கல் உருண்டை ஒன்று சுழலும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கற்சிலையை செய்து அதனுள் கல் உருண்டையை திணிக்க முடியாது என்பதால் இன்றும் அச்சிலைகள் தமிழர்களின் சிற்பக்கலைக்கு சான்றாக திகழ்கிறது. இங்கு நடைபெறும் மார்கழி திருவாதிரை திருவிழா, சித்திரை திருவிழா இரண்டும் மிகவும் புகழ்பெற்றது.
மாணிக்கவாசகரால் பாடல் பெற்றதும், பிருகு முனிவர், கங்கை, சாண்டிலியர், அக்னி ஆகியோர் வணங்கி பேறு பெற்றதுமான இத்தலத்தில் உள்ள நடராஜரை வணங்குவதோடு இராமேஸ்வர யாத்திரை முடிவு பெறுகிறது.
நன்றி : ஆன்மிகம் மாதமிருமுறை இதழ்
No comments:
Post a Comment