Friday 6 April 2018

இராமர் வகுத்துக் கொடுத்த வழிபடு மரபு !

விபிஷணன் பிரதிஷ்டை செய்த லிங்கத்தை அடுத்துகாசிவிசுவநாதர் லிங்கம்உள்ள காசி விசுவநாதர் சன்னிதி உள்ளது. இராவணவதம் முடிந்ததும் சீதையோடு வானர வீரர்கள் சூழ கந்தமாதன மலைக்கு (இன்றைய கந்தமாதன பர்வதம்) வந்த இராமரை அகத்தியர் முதலான ரிஷிகளும், தேவர்களும் சந்தித்து வணங்கி வழிபட்டதோடு பிரம்மஹத்தி தோசம் நீங்க சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட ஆலோசனை கூறினர். அவர்கள் கூறிய படி பூஜித்து வழிபட சிவலிங்கம் ஒன்றை கொண்டு வரச் சொல்லி தன் பரம பக்தனான, போர்க்களத்தில் புகுந்து விளையாடிய அனுமனை இராமர் அனுப்பி வைத்தார்

காலபைரவரோடு எற்பட்ட பஞ்சாயத்தால் அவர் வர தாமதமானது. பூஜைக்கான நேரம் நெருங்கிக் கொண்டிருந்ததால் சீதை மணலை தன் கைகளால் குவித்து லிங்கம் போல் செய்து தர அதையே பிரதிஷ்டை செய்த இராமர் வழிபாட்டை ஆரம்பித்தார். தாமதமாக வந்த அனுமன் தான் கொண்டு வந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்யச் சொன்னதோடு சீதை உருவாக்கிய லிங்கத்தை தன் வாலால் பிடுங்கி எறிய முயன்றார். தன் பலம் கொண்ட மட்டும் முயன்ற

போதும் அவரால் அதை பிடுங்க முடியவில்லை. பிடுங்கிய வேகத்தில் சுமார் முப்பத்தேழு கி.மீ. தொலைவில் போய் விழுந்தார். அப்படி அவர் விழுந்த இடம்வாலாந்தரவை” (வால் + அருந்த + தரவை) என்று அழைக்கப்படுகிறது. இராமேஸ்வரம் செல்லும் வழியில் அமைந்துள்ள இவ்வூர் இன்றும் அப்பெயராலயே அழைக்கபடுகிறது. இராமலிங்கத்தை அனுமன் பிடுங்க முயன்ற போது ஏற்பட்ட வால் தழும்பு இன்றும் அந்த லிங்கத்தின் மீது இருக்கிறது.

மிகுந்த வருத்தத்தோடு நின்ற அனுமனை சமாதானம் செய்த இராமர் அனுமன் கொண்டு வந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை நடத்திய பின் சீதை உருவாக்கி கொடுத்த லிங்கத்திற்கு பூஜை செய்ததோடு, “நான் பிரதிஷ்டை செய்த இராமலிங்கத்தை தரிசனம் செய்வதால் கிடைக்கும் முழு பலனையும் பெற வேண்டுமானால் அதற்கு முன் உன்னுடைய சிவலிங்கத்தை பக்தர்கள் தரிசனம் செய்ய வேண்டும்என்று கூறி ஆசி வழங்கினார். அனுமன் கொண்டு வந்த அந்த லிங்கம்காசிவிசுவநாதர் லிங்கம்என்றும், “அனுமன் லிங்கம்என்றும் அழைக்கப்படுகிறது. காசியில் விசுவநாதர் சன்னிதி அமைந்திருக்கும் முறையிலேயே கருவறை நீர் விட்டு நிரப்பும் அமைப்பிலேயே இங்கும் அமைந்துள்ளது.

அடுத்து இராமநாத சாமியின் மூலஸ்தானம். சீதை உருவாக்கிக் கொடுத்து இராமர் பிரதிஷ்டை செய்தஇராமலிங்கம்கருவறையில் இருக்கிறது. ஐந்து தலை நாகம் குடைபிடித்த கவசம் கம்பீரமாக காட்சியளிக்கிறது. திருமேனியில் ருத்திராட்ச மாலை, பதக்கங்களுடன் இராமலிங்கர் காட்சி தருகிறார். இராமரின் சிலை முன்மண்டபத்தில் அமைந்துள்ளது

இராமலிங்கத்தை எப்பொழுது இராமர் பிரதிஷ்டை செய்தார் என்பது குறித்து இருவேறு கருத்துகள் உள்ளன. இராவண வதத்திற்காக இராமர் பாலம் கட்டத் தொடங்கிய செய்தி இராவணனுக்குத் தெரிய வந்தது. பாலம் இருந்தால் தானே படை எடுத்து வர முடியும். பகல் முழுக்க பாலத்தை இராம சேனைகள் கட்டி முடிக்க அன்றிரவே இராவணன் தன் சேனைகளுடன் வந்து அப்பாலத்தை தகர்த் தெறிந்தான். இலங்கைக்குள் நுழைந்தால் மட்டுமே சீதையை மீட்க முடியும். அதற்கு பாலம் அவசியம். எனவே இராவணனோடு இலங்கைக்கு வெளியில் போரிடுவதை விட கட்டிய பாலத்தை அவனிடமிருந்து காக்க வேண்டும் என இராமர் நினைத்தார். தன் குழுவினர்களோடு ஆலோசனை செய்தார். அப்பொழுது ஜாம்பாவான், பாலத்தைக் கட்டியதும் அதன் மீது சிவலிங்க உருவை பிரதிஷ்டை செய்து விடுங்கள். தீவிர சிவபக்தனான இராவணன் சிவ உருவை சிதைக்க மாட்டான் என யோசனை கூறினார். அந்த யோசனைப்படி இராமர் பிரதிஷ்டை செய்தது தான் ஆலயத்தில் இருக்கும் இராமலிங்கம் என சிவபுராணம், ஆஞ்சநேய புராணம் ஆகியவைகள் கூறுகின்றன.

கம்பராமாயணம், தேவாரப் பதிகங்கள் ஆகியவைகளோ இராவணனைக் கொன்ற பிறகே பிரம்மஹத்தி தோசத்தை போக்கிக் கொள்ள இராமலிங்கத்தை பிரதிஷ்டை செய்தார் என்று கூறுகின்றன. திருஞன சம்பந்தர் தன்னுடைய பதிகம் ஒன்றில் - 

தசமாமுகன்

பூவியலும் முடிபொன்று வித்த பழி போ அற

ஏவியலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம்  என இக்கருத்துக்கு வலு சேர்க்கிறார். போருக்கு முன்பா? போருக்கு பின்பா? என்பதில் இரு வேறு கருத்துகள் இருந்தாலும் இராமலிங்கத்தை இராமர் தான் பிரதிஷ்டை செய்தார் என்பதில் கருத்து வேறுபாடுகள் இல்லை. அன்று இராமர் அனுமனுக்கு ஆசி கூறியபடியே அவர் கொண்டு வந்த லிங்கத்திற்கு பூஜை செய்து முடித்த பின்பு தான் இராமலிங்கத்திற்கு (இராமநாதசாமி) பூஜை செய்யும் வழக்கம் இன்றும் பின்பற்றப்படுகிறது. கடல் மண்ணினாலான இராமலிங்கம் காலத்தால் கல்லு போல கெட்டியாகி விட்டதால் அபிஷேகம் செய்யும் போது கரைவதில்லை. இராமலிங்கத்திற்கு பின்புறம் உப்புலிங்கம் ஒன்று உள்ளது. இந்த லிங்கத்திற்கும் ஒரு சுவராசியமான கதை உண்டு.

இந்து மதம் மட்டுமல்ல அதன் கடவுள்களும், வழிபாட்டு முறைகளும் கூட  காலம் காலமாக விவாதங்களுக்கும், கேலிக்கும் உள்ளாகி வந்தே இருக்கிறது. இந்து மதத்திற்கு மட்டுமே உரிய இந்த பலவீனமே அதன் பலமாகவும் இருக்கிறது. இக்கோவிலில் உள்ள இராமர் பிரதிஷ்டை செய்த லிங்கம் மணலினால் செய்யப்பட்டதல்ல என சிலர் சந்தேக வாதங்களை கிளப்பி வந்தனர். மணலால் ஆனதாக இருந்தால் அபிஷேகத்தின் போது கரைந்திருக்குமில்லையா? என விதண்டவாதம் பேசினர்இதனால் பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர் தண்ணீரில் எளிதில் கரைந்தும் அதனோடு கலந்தும் போகக்கூடிய உப்பில் ஒரு லிங்கத்தை செய்து அதற்கு அபிஷேகம் செய்தார். அப்போது அந்த லிங்கம் கரையவில்லை. அம்பாளை வணங்கும் சாதாரண பக்தனான தன்னால் பிரதிஷ்டை செய்த லிங்கமே கரையாத போது சீதாதேவி பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாமல் இருப்பதில் என்ன அதிசயமிருக்கிறது? கரைந்தால் அல்லவா அது அதிசயம் எனக் கூறி விதண்டவாதம் பேசியவர்களின் வாயை மூட வைத்தார்.

கருவறைக்கு முன் அழகிய வேலைப்பாடுடன் கூடிய தூண்களைக் கொண்ட முன் மண்டபத்தில் ரதம் ஒன்றில் இராமர், சீதை, அனுமன், சுக்ரீவன் ஆகியோரின் விக்கிரகங்கள் உள்ளன,

இராமலிங்கத்திற்கு முன்னால் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த மரகத ஸ்படிகலிங்கம் உள்ளது. ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட இந்த லிங்கத்தின் முன் வைத்து தான் அபிஷேகம் நடைபெறுகிறது. அதன் வழியே இராமலிங்கத்தை கண்டு தரிசிப்பது சிறப்பு

தீர்த்தங்களில் நீராடி வினைகளையும், பாவங்களையும் போக்கிக் கொண்டு இராமலிங்கத்தை தரிசித்த பின் கோவிலின் மேற்கு வாசல் வழியே வெளியேறி செல்ல வேண்டும். மேற்கு வாசலின் வெளிப்பகுதியில் விநாயகரும், முருகரும் வீற்றிருக்கின்றன்ர். இக்கோயிலை விட்டு வெளியேறுகிறவர்கள் இந்த வாசலில் இருக்கும் விநாயகரிடம் விடைபெற்றுச் செல்ல வேண்டும் என்பது மரபு. இம்மேற்கு வாசல் பகுதியில் விவேகானந்தர் இக்கோயிலில் ஆற்றிய சொற்பொழிவின் உரை கல்வெட்டில் பதிக்கப்பட்டுள்ளது. விநாயகரிடம் விடைபெற்று வெளியேறியதும் செல்ல வேண்டிய தலம்திருப்புல்லணை

நன்றி : ஆன்மிகம் மாதமிருமுறை இதழ்

No comments:

Post a Comment