Friday, 11 March 2016

முகவரிகளின் முகவரி - 1

 

இணைய இதழ்கள், மின்னூல்கள் வாசிப்பிற்காக இணையப் பக்கங்களில் உலாவித் திரியும் சமயங்களில் எஸ். ராமகிருஷ்ணன், மாலன், ஜெயமோகன், சாரு நிவேதிதா, மாமல்லன், பா.ராகவன், சமஸ் ஆகியோரின் பக்கங்களிலும் பயணம் செய்வதுண்டு. நண்பர்கள் அவ்வப்போது பரிந்துரைக்கும் வலைப்பக்கங்களையும் வாசித்து வந்தேன்.  நான் எழுதியவைகளை எல்லாம் சேகரித்து வைப்பது குறித்துப் பேச்சு வந்த போது நண்பர் ஒருவர் உனக்கென்று வலைப்பக்கம் ஒன்றை  ஆரம்பித்து அதில் எல்லாவற்றையும் ஏற்றி விடு. சேமிப்பாகவும் இருக்கும். இன்னும் சிலருக்கு அதை வாசிக்கத் தந்த மாதிரியும் இருக்கும் என்றார். வலைப்பக்கங்களை முகநூல் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதாக கவிஞர்.மகுடேஸ்வரன் உள்ளிட்ட வலைப்பதிவர்கள் கருத்துகளைப் பதிவு செய்திருந்த சமயத்தில் என் எழுத்துக்களை சேமிக்கும் ஒரு தளமாகவும், ஒரு இணைய விசிட்டிங்கார்டாகவும் இருக்கட்டுமே என்ற நினைப்பில் வலைப்பக்கத்தை ஆரம்பித்தேன். அதன் தொடர்ச்சியாகப் புதிய, புதிய வலைப்பக்கங்களை வாசிக்க வாய்ப்பு ஏற்பட்டது. நா.முத்து நிலவன் அவர்கள் கடந்த வாரம் ஆரம்பித்து வைத்த வலைப்பதிவர்கள் அறிமுகம் என்ற பதிவின் தொடர்ச்சியாக நான் வாசிக்கும் வலைப்பக்கங்கள் குறித்து பகிர்ந்து கொள்கிறேன்

வளரும் கவிதை : நா.முத்து நிலவன் அவர்களின் வலைப்பக்கம். எனக்கான நேரத்தைச் செலவழிக்கும் போது அதன் வழி ஏதாவது ஒன்றை நான் பெற வேண்டும் என நினைப்பவரா நீங்கள்? அப்படியெனில் தயங்காமல் வளரும் கவிதைக்குள் வலம் வரலாம். மொழி, அரசியல், சமூகம் சார்ந்த தன்னுடைய என்ணங்களை அறிவுப்பூர்வமாகவும், ஆரோக்கியமான விவாதங்களுக்குச் சாளரம் திறக்கும் வகையிலுமான கட்டமைப்பில் கட்டுரைகளாக, கவிதைகளாக வாசிக்கத் தருகிறார்

நிசப்தம் : வா.மணிகண்டன் அவர்களின் வலைப்பக்கம். ஒருவர் தன் எழுத்தின் மூலமாக அதுவும் வலைப்பக்க எழுத்துக்களை மட்டும் வைத்துக் கொண்டு என்னவெல்லாம் செய்ய முடியும் எனத் தெரிந்து கொள்ள விரும்பினால் இவரின் நிசப்தம் வலைக்குள் நுழையலாம். தன் வலைப்பக்கத்தை ஒரு அறக்கட்டளைக்கான திறப்பாக மாற்றியவர். கவிதை, அரசியல், சமூகம் ஆகியவைகளோடு சக மனிதர்களையும் சம்பவங்களின் காட்சிகளாக சுவராசியமாகவும், அதன் வீச்சுக் குறையாமலும் எளிய வரிகளில் வாசிக்கத் தருகிறார்.

கசியும் மெளனம் : ஈரோடு கதிர் அவர்களின் வலைப்பக்கம். மெல்லிய அன்பை, நாம் வாழ்வில் உணரத் தவறிய விசயங்களை, கவனிக்க மறந்து கடந்து போகின்றவைகளை, அண்டை மனிதர்களின், உறவுகளின், மன உணர்வுகளைத் தன் கூரிய அவதானிப்புகளின் மூலமாகக் கட்டுரைகளாகவும், கவிதைகளாகவும் தனக்கே உரிய மொழி நடையில் வாசிக்கத் தருகிறார். இவ்வலைப்பக்கத்தின் தேர்ந்தெடுத்த கட்டுரைகளைகிளையில் இருந்து வேர் வரைஎன்ற தொகுப்பாக்கி இருக்கிறார்.

திண்டுக்கல் தனபாலன் : 
வலைச்சித்தர் என்று வலைப்பதிவர்களால் அழைக்கப்படும் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் வலைப்பக்கம். ஒவ்வொரு கட்டுரையையும் தொழில் நுட்பத்தின் அத்தனை சாத்தியங்களோடும் எழுதிக் காட்டுபவர். நம் வாழ்வியலோடு ஒட்டி விட்ட சினிமாப் பாடல்களையும், ஒட்ட வேண்டிய திருக்குறளையும் மைய இழையாய் வைத்து தன் கட்டுரைகளை வாசிக்கத் தருபவர். வலைப்பதிவர்களுக்கு தொழில் நுட்பச் சிக்கல் ஏற்படும் போதெல்லாம் ஆபத்பாந்தவானாய் உதவுபவர். என்னுடைய வலைப்பக்கத்தை மேம்படுத்தித் தந்தவர்களில் முதன்மையானவர்.

கில்லர்ஜி 
எந்த வலைப்பதிவிலோ இவரின் இயற்பெயரை வாசித்த ஞாபகம், சட்டென நினைவுக்கு வர மறுக்கிறது,  ”ஜிஎன்று பலரும் அறிந்த ஒரு சொல்லை தன் சொல்லாடல் வழி கவனிக்க வைத்திருப்பவர். முதல் அறிமுகத்திலேயே உங்களின் முதல் நூல் என்னிடம் இன்னும் இருக்கிறது என்ற ஆச்சர்யத்தைத் தந்தவர். என்னிடம் கூட அதன் காப்பி இல்லை! சீரியசான விசயங்களைக் கூட நல்லதொரு நகைச்சுவை நடையில் மிக எளிதாகத் தன் கட்டுரைகளின் வழியாக நமக்குள் கடத்தக் கூடியவர். ஊர் பெயரை முடிவு செய்து விட்டு ஆட்களின் பெயரையும் அவர்களின் குணங்களையும் முடிவு செய்வாரோ? என நினைக்கும் வகையில் அவர் தன் கட்டுரைகளுக்கு வைக்கும் தலைப்புகள் சுவராசியமாய் இருக்கும்.

சுவாதியும் கவிதையும் : 
கவிஞர் சுவாதியின் வலைப்பக்கம். முகநூல் வழியேயான முதல் அறிமுகத்திலேயே பதிமூன்று ஆண்டுகளுக்கு முன் வந்த என் நாவல் குறித்து நினைவு கூர்ந்து ஆச்சர்யம் தந்தவர். தன் படிப்பைப் போலவே படைப்பையும் குறைவில்லாமல் வைத்திருப்பவர். தன் எண்ணங்களை கவிதைகளின் அத்தனை வகைகளின் வழியாகவும் வாசிக்கத் தருந்திருக்கும் இவருடைய எழுத்தின் மற்றுமொரு பரிணாமம் தீபம் இதழில் இவர் எழுதி வரும் கனவு குறித்த கட்டுரைத் தொடர்!

சும்மா : தேனம்மை லெஷ்மணன் அவர்களின் வலைப்பக்கம். ”சும்மாஎன்ற தலைப்பில் பல சுவராசியமான விசயங்களைத் தருபவர். கடந்த வருட புத்தகத் திருவிழா சமயத்தில் இவர் வாசித்து வலைப்பக்கம் வழி அறிமுகம் செய்த நூல்களின் வரிசை பிரமிக்கத் தக்கது, அதில் என் மூன்று நூல்களும் அடக்கம். கவிதை, கட்டுரை, கதை, பயணக் கட்டுரைகள் என பல்வேறு தளங்களில் தன் எண்ணங்களை வாசிக்கத் தருகிறார். வலைப்பக்கத்திற்குள் நுழைந்து வெளிவரும் போது ஒரு கலவையான வாசிப்பனுபவம் கிடைக்கும்.

தென்றல் : மு.கீதா அவர்களின் வலைப்பக்கம். தேவதா தமிழ் என்ற பெயரில் முகநூலில் அறிமுகமாகி இருந்த போதும் இவருடையஒரு கோப்பை மனிதம்புத்தக அறிமுகங்களைச் சார்ந்து வாசித்த தகவல்களே இவரின் வலைப்பக்கத்தைக் கண்டடைய வைத்தது. இவரின் கவிதைத் திறனுக்கும் எழுத்துக்கும் சான்றாக அவரவர் சொந்தப் பெயரில் முகநூல் உள்ளிட்ட பல்வேறு பக்கங்களிலும் பதியப்பட்ட பாலியல் வன்முறைக்கு எதிரான இவரின் கவிதையும், இவருக்குக் கிடைத்த கவிப்பேராசான் மீரா விருதும் போதும்

மனசு : பரிவை சே.குமார் அவர்களின் வலைப்பக்கம். இணையப் பக்கங்களிலும், இணைய இதழ்களிலும் வாசித்த இவரின் சில படைப்புகளின் வழியாக இந்த வலைப்பக்கத்தைக் கண்டடைந்தேன். கட்டுரை, கதை, சினிமா, நாவல் என  படைப்பின் எல்லாத் தளங்களையும் தனக்குரியதாக்கிக் கொண்டிருப்பவர். செழுமையான படைப்புகளைத் தன் வலைப்பக்கங்கள் முழுவதும் விதைத்திருப்பவர். புத்தகங்களின் வழியே தன் எழுத்துக்களை இன்னும் கொண்டு வராதவர் என்ற தகவல் ஆச்சர்யம் தருகிறது.

கூட்டாஞ்சோறு : எஸ்.பி.செந்தில் குமார் அவர்களின் வலைப்பக்கம். தலைப்பிற்கேற்ப வலைப்பக்கம் முழுக்கப் பயணம், அனுபவம், சுற்றுலா என சகலமும் விரிந்து கிடக்கிறது. நண்பர்களின் வலைப்பக்கம் வழியே அறிந்திருந்த இவரின் பெயரைநம்பமுடியாத உண்மைகள்தொகுப்பு நூலின் வழி வலைப்பக்கத்தில் கண்டடைந்தேன். இவர் எழுதும் தகவல்களை எங்கிருந்து திரட்டுகிறார்? என்பதே ஆச்சர்யம். விவசாயம் சார்ந்த இவரின் கட்டுரைகள், நேர்காணல்கள் வழமை போல் இல்லாமல் அதிகபட்சத் தகவல்களோடு வெகு நேர்த்தியாய் இருக்கும்.

இப்படி ஒரு பதிவு எழுத இருப்பது குறித்து நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது பரவலாக எல்லோரும் அறிந்திருப்பவர்களைப் பற்றிய இன்னொரு கட்டுரையை நீ எழுத வேண்டுமா? என்று கேட்டார்.  

வலைப்பதிவர்கள் உலகில் முகவரிகளின் முகங்களாய் பவனி வருகின்ற இவர்களின் முகவரியை வைத்துக் கொண்டு தான் என்னை மேம்படுத்தும் விசயங்களைக் கிரகித்து வருகிறேன். உங்களுக்கும் அது பயன்படலாம் என என் நட்பு வட்டத்தில் இருக்கும் இவர்களை அறிந்திராதவர்களுக்கு அடையாளம் காட்டவே  இந்தப் பதிவை எழுதுகிறேன்என்று அவருக்குப் பதில் சொன்னேன்.  இவைகள் தவிர வேறு சில வலைப்பக்கங்களிலும் பயணிக்கிறேன். அவைகளை ஒரே கட்டுரைக்குள் இருத்த முடியாது என்பதால் அடுத்தடுத்த கட்டுரைகளில் எழுத நினைத்துள்ளேன்.

அதெல்லாம் இருக்கட்டும். யாரைக் கேட்டு எங்க புகைப்படங்களை எடுத்து போஸ்டராக்கினாய்? என யாரும் மல்லுக்கு நின்று விடாதீர்கள். சரிக்குச் சரி நிற்க திராணி இல்லை.

நீங்கள் அறிந்த, நான் அறிந்த வலைப்பதிவர்களின் அறிமுகங்களோடு இன்னொரு பதிவில் சந்திப்போம்.