Monday, 30 September 2019

காந்தியை வெறுக்க யார் காரணம்?

ஏழாம் வகுப்பு படிக்கும் மகனுக்கு தேர்வு விடுமுறையில் தரப்பட்டிருக்கும் புராஜெக்டில் ஒன்று காந்தியின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக எழுதிக் கொண்டு வர வேண்டும் என்பது!  

கூகுள், யூடியூபில் தேடிப் பார்த்து விட்டு அது பற்றி எதுவும் கிடைக்கல டாடி...... என என்னிடம் வந்தான். அருகில் இருந்த மகள் அவள் பரிசாக வாங்கி இருந்த "சத்திய சோதனை" புத்தகத்தைக் கொடுத்து இதை படிச்சிட்டு அப்படியே நாடகமா எழுதிடு என்றாள்

இந்த புத்தகமே இவ்வளவு பெருசா இருக்கு. இதை எப்படி படிச்சு எழுத முடியும்? என்றவன் நீங்க எழுதித் தர முடியுமா? என என்னிடம் கேட்டான்

Saturday, 28 September 2019

புதுப்பிக்கும் புத்தக வாசிப்பு!

மனிதனின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு எது? எனக் கேட்டபோது சற்றும் யோசிக்காமல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்ன பதில்புத்தகம்”. அதை புத்தகக் கண்காட்சிகளிலும், பத்து சதவிகிதக் கழிவில் கிடைக்கிறது என்றும் கை நிறைய வாங்கி வந்து அலமாரிகளை நிரப்பி வைக்கிறோம். எங்கள் வீட்டிலும்புத்தக அலமாரிஇருக்கிறது எனச் சொல்லிக் கொள்வதில் ஒரு வித பெருமை கொள்கின்றோம். அழகுப் பொருட்களை வாங்கி அடுக்கி வைத்திருப்பதைப் போல புத்தகங்களை வாங்கி அலமாரிகளில் வைப்பதில் ஒரு பயனுமில்லை. சமூக வலைத்தளங்களில் பதிவதற்காகவே நீண்ட பட்டியலில் புத்தகங்களை வாங்குபவர்கள் அவைகளை புரட்டிக் கூட பார்ப்பதில்லை என்பதே எதார்த்தம். ”புத்தக வாசிப்புஎன்பது  மறைந்து போய்புத்தக சேமிப்புஎன்பது இன்று பேஷனாகி விட்டது. பயன்படுத்தாத புத்தகங்கள் கூர் இல்லாத வாளுக்குச் சமம். அறிவை விசாலப்படுத்தச் செய்யும் புத்தகங்களை வெறும் பொருளாக பார்க்கும் மனநிலை மாற வேண்டும். அதற்கு புத்தகம் வாசிக்கும் பழக்கத்திற்கு நாம் ஒவ்வொருவரும் பழக வேண்டும்

Tuesday, 10 September 2019

நீர்த்திவலைகள்

பிரேமா மகாலிங்கத்தின் முதல் சிறுகதைத் தொகுப்புநீர்த்திவலைகள்”. பதினேழு கதைகள் அடங்கிய இத்தொகுப்பின் ஒவ்வொரு கதையையும் தன்னுடைய நுட்பமான அவதானிப்புகளாலும், சொல்லாடல்களாலும் நமக்குள் கடத்திப் போகிறார்.

சிறுகதையை வாசிக்கின்ற வாசகனுக்கு கதையின் மையப்புள்ளியை கோடி காட்டி விட்டு படைப்பாளி மெளனமாகி விடுகின்றான். அதன் பின் படைப்பாளி பேசும் அத்தனை வார்த்தைகளும் வாசகனின் மனதை கதைக்கு அருகில் கொண்டு செலுத்த மட்டுமே உதவுகின்றன. படைப்பாளி மெளனமடையும் அந்த இடத்தில் இருந்து வாசகன் பங்கேற்பாளனாக மாறி கதையின் போக்கில் தன் மனஓட்டத்தை தன்னியல்பாக நகர்த்திச் செல்கின்றான். கதையின் இறுதி வரியில் அவனும், படைப்பாளியும் சந்திக்க நேரும் புள்ளியில் படைப்பாளி வாசகனைஅடஎன வியக்கவோ, மிரளவோ வைக்கும் போது வாசகனின் மனதில் அந்தக் கதை சிம்மாசனம் இட்டுக் கொள்கிறது. இத்தொகுப்பில் அப்படி சிம்மாசனமிட்டுக் கொள்ளும் கதைகளாகமுட்டையின் நிறம் கருப்பு”, “நீர்த்திவலைகள்”, ”மஞ்சள் வெயில்ஆகிய கதைகளைச் சொல்லலாம்.

Sunday, 8 September 2019

மெளனம்

முத்தையாவுக்கும், சுதாகருக்கும் ஒரே உணவகத்தில் வேலை. அவர்கள் தங்கியிருக்கும் அறை உணவகத்தின் மேலேயே இருந்தது. ஐம்பத்திரண்டு வயது முத்தையா அந்த உணவகத்தில் சமையலறை உதவியாளராய் வந்து இன்று காசாளராய் உயர்ந்திருப்பவர். இரவில் ஒரு குவார்ட்டர் இல்லாமல் அவரால் கண் அயர முடியாது. இப்போது ஆயிரங்களில் சம்பளம் வாங்கினாலும் குவார்ட்டர் என்ற அளவை அவர் மாற்றவில்லை. இது தவிர வாரத்தின் மூன்று நாட்களும் தலா பத்து வெள்ளிக்கு நான்கு நம்பர் பரிசுச் சீட்டு* எடுத்து விடுவார். சிங்கப்பூரைச் சூழும் புகை மூட்டம் போல அவ்வப்போது அதில் விழும் அதிர்ஷ்டப் பரிசும் ஐநூறு வெள்ளியைத் தாண்டியதே இல்லை. அதேபோல சம்பளத் தேதியின் மறுநாள் சூதாட்டக் கூடத்திற்குச் சென்று விடுவார். அங்கு சென்று திரும்பும் ஒவ்வொரு முறையும் அவரின் பணப்பை பிரசவத்திற்குப் பிந்தைய பிள்ளைத்தாச்சியாய் மாறிவிடும். ஆனாலும் அது பற்றி அவர் கவலைப்பட்டதே இல்லை. மகளுக்குத் திருமணம் செய்து விட்டதால் சேமிப்பு பற்றி அதிக அக்கறையின்றி ஊரில் இருக்கும் குடும்பத்திற்கு அவ்வப்போது சில நூறு வெள்ளிகளை ஏஜண்ட்* மூலம் அனுப்பி வைப்பார். சில மாதங்களில் அதுவும் கிடையாது. இத்தனை இருந்தும் வேலை விசயத்தில் முத்தையாவை அசைத்துப் பார்க்க முடியாது. தவிர்க்க முடியாத நிலையிலும் கூட வேலைக்கு வருவதைத் தவிர்க்கமாட்டார். வேலையின் மீது இருந்த அந்த மோகம் கடை முதலாளியிடம் அவரை எப்பொழுதும் செல்வாக்கு மிக்க ஊழியாராக வைத்திருந்தது.