Saturday 28 September 2019

புதுப்பிக்கும் புத்தக வாசிப்பு!

மனிதனின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு எது? எனக் கேட்டபோது சற்றும் யோசிக்காமல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்ன பதில்புத்தகம்”. அதை புத்தகக் கண்காட்சிகளிலும், பத்து சதவிகிதக் கழிவில் கிடைக்கிறது என்றும் கை நிறைய வாங்கி வந்து அலமாரிகளை நிரப்பி வைக்கிறோம். எங்கள் வீட்டிலும்புத்தக அலமாரிஇருக்கிறது எனச் சொல்லிக் கொள்வதில் ஒரு வித பெருமை கொள்கின்றோம். அழகுப் பொருட்களை வாங்கி அடுக்கி வைத்திருப்பதைப் போல புத்தகங்களை வாங்கி அலமாரிகளில் வைப்பதில் ஒரு பயனுமில்லை. சமூக வலைத்தளங்களில் பதிவதற்காகவே நீண்ட பட்டியலில் புத்தகங்களை வாங்குபவர்கள் அவைகளை புரட்டிக் கூட பார்ப்பதில்லை என்பதே எதார்த்தம். ”புத்தக வாசிப்புஎன்பது  மறைந்து போய்புத்தக சேமிப்புஎன்பது இன்று பேஷனாகி விட்டது. பயன்படுத்தாத புத்தகங்கள் கூர் இல்லாத வாளுக்குச் சமம். அறிவை விசாலப்படுத்தச் செய்யும் புத்தகங்களை வெறும் பொருளாக பார்க்கும் மனநிலை மாற வேண்டும். அதற்கு புத்தகம் வாசிக்கும் பழக்கத்திற்கு நாம் ஒவ்வொருவரும் பழக வேண்டும்

படிப்பில் இருந்து வாசிப்பிற்கு!

புத்தக வாசிப்பு என்பது நம்மை புதுப்பித்துக் கொள்வதற்கு உதவும் ஒரு காரணி. அது தினப்படியான நிகழ்வுகளில் ஒன்றாய் இருக்கவேண்டும். கல்லூரி காலத்திலோ, வேலை தேடும் பொருட்டோ பாட நூல்களில் பதுங்கிக் கிடக்கும் நாம் அதன் பின் வாசிப்பை ஓரங்கட்டி விடுகின்றோம். ”படிப்பு என்பது பின்னொரு நாளில் வசதிகளையும், வளங்களையும் தர மட்டுமேஎன நினைக்கிறோம். அதனால் தான் தேவைகளுக்காகப் படிக்கின்ற நாம் அதன் பின் தேடி வாசிப்பதை நிறுத்தி விடுகிறோம். தேவைகளுக்காக படித்த நூல்களைத் தேடிப் படிக்கும் போது படிப்பு என்ற நிலையில் இருந்து வாசிப்பு என்ற அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது. அதனால் தான்பாடநூல்களுக்கு வெளியில் கிடைக்கும் வாசிப்பு சுவையானதுஎன்றனர்.

நம்மை புத்தாக்கம் செய்து கொள்வதற்கான அத்தனை சக்திகளும், அனுபவங்களும் புத்தகங்களில் மட்டுமே நிறைந்திருக்கின்றன. நம்மைக் கடந்து போகின்றவர்களையும், கடத்திப் போகின்றவர்களையும் கையாள்வதற்கான எல்லா தந்திரங்களையும் கொண்டிருக்கும் காலக் கண்ணாடியாக புத்தகங்கள் திகழ்கின்றன. சொந்த அனுபவத்தோடு அடுத்தவர்களின் வாழ்க்கையில் இருந்து பெற்ற அனுபவங்களையும் சேர்த்து நம் அன்றாட வாழ்க்கை முறைக்குப் பயன்படுத்துவதில் தான் வெற்றியின் சூட்சுமம் அடங்கி இருக்கிறது. அந்த சூட்சுமத்தை நமக்கான அடையாளமாய் மாற்றிக் கொள்வதற்கு வாசிப்பு என்னும் வசியம் அவசியம்!

எதை வாசிப்பது?

நம்மில் பலரும் இலக்கியங்கள் தான் வாசிப்பிற்கு உரியவை என நினைக்கிறோம். இலக்கியம் தவிர்த்த பயணம், கலச்சாரம், அறிவியல், புவியியல், பூகோளம், நாகரீகம் என  அறிவை அகலப்படுத்தக்கூடிய, சிந்தனையைத் தூண்டக்கூடிய  எந்த நூலும் வாசிப்புக்கு உகந்தவையே!. ஆயினும், ஆரம்ப நிலை வாசிப்பாளர்கள் இந்தக் கேள்வியைப் புறந்தள்ளி விட்டு தங்களுக்கு விருப்பமான புத்தகங்களை முதலில் வாசிக்கலாம். அவ்வாறே இப்படித்தான் வாசிக்க வேண்டும் என்ற வரையறைகளும் வைத்துக் கொள்ள வேண்டியதில்லை. மனம் விரும்பியதை, விரும்பிய முறையில் வாசிக்கப் பழகினாலே போதும். அந்தப் பழக்கம் வழக்கமாகி வாழ்க்கை முறையாகிவிடும். வாசிப்பு என்னும் போதை மெல்ல நமக்குள் இறங்க ஆரம்பித்துவிடும். அதுவே காலப்போக்கில்  நம்மைத் தரமான புத்தகங்களை அடையாளம் காணச் செய்யும்

தான் இயங்கும் துறைக்கும், வேலைக்கும் உரிய நூல்களை மட்டும் ஒருவர் தொடர்ந்து வாசிப்பது என்பது வாசிப்பாகாது. அது வெறும் தகவல் சேகரிப்பு மட்டுமே என்பதை உணர வேண்டும். துறை சாராத நூல்களின் வாசிப்பு மட்டுமே உலகப் பார்வையை நமக்குள் விரிய வைக்கும். அப்படியான வாசிப்பு மட்டுமே வளமானதாய், நம்மை முன் நகர்த்தும் முன்னத்தி ஏராய் விளங்கும்.

நேரமில்லை என்பது காரணமல்ல!

வாங்கி வைத்த புத்தகங்களை வாசிக்க நேரமில்லை என அங்கலாய்ப்பவர்கள் அநேகம். உண்மையில் அதுவா காரணம்? நமக்கு விருப்பமில்லை என்பதே உண்மைவாசிப்பதை தனி நேரம் ஒதுக்கித் தான் செய்ய வேண்டும் என்பதில்லை. நம்முடைய அன்றாட செயல்கள் சார்ந்து வாசிப்பையும் செய்ய முடியும். உடற்பயிற்சி செய்து கொண்டே நல்ல இசையை இரசிப்பதைப் போல பயணம் செய்து கொண்டிருக்கும் நேரத்தில் கையில் எடுத்துச் செல்லும் புத்தகத்தின் சில பக்கங்களை வாசித்து விடலாம். மருத்துவரைக் காண காத்திருக்கும் நேரத்தில் இன்னும் சில பக்கங்களை வாசித்து விடலாம். தினமும் நண்பர்களைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்குவதைப் போல புத்தகம் என்ற நண்பனையும் சந்திக்க நேரத்தை ஒதுக்கிக் கொள்ளலாம்

இவ்வளவு புத்தகங்களையும் வாசிக்க உங்களுக்கு எப்படி நேரமிருக்கிறது?” என நேருவிடம் கேட்டனர். அதற்கு அவர், “நான் புத்தகங்கள் வாசிப்பதற்க்கான நேரத்தைக் களவாடுகிறேன்என்றார். நேருவைப் போல நாமும் நம்முடைய வீணாகும் நேரங்களைத் திருடி அதை புத்தக வாசிப்பிற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். வாசிப்பதற்கு கையில் புத்தகமும், வாசிக்க மனமும் இருந்தால் போதும் நேரமில்லை என்ற காரணத்தைப் பொய்யாக்க முடியும். மனமிருந்தால் மார்க்கம் உண்டல்லவா?

புரட்டிப்போடும் புத்தகங்கள்:          

புத்தகங்கள் கைத்துப்பாக்கிகளை விட வலிமையான ஆயுதம்என்கிறார் லெனின். அந்த ஆயுதத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே நம்மை நாமே வலிமையாக்கிக் கொள்ள முடியும். அப்படி வலிமைப் படுத்திக் கொள்கிறோமா? என்றால் அதற்கான பதில் அத்தனை வலிமையாய் இல்லை என்பதே நிஜம்.

தனி மனிதனை, ஒட்டு மொத்த சமூகத்தை அப்படியே மாற்றியமைக்கும் சக்தி புத்தகங்களுக்கு உண்டு. இந்த உண்மையை உணர்ந்திருந்ததாலயே இந்தியாவின் மனித சக்தியை தன் அசைவில் வைத்திருந்த காந்தியடிகள் ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் ஒரு நூலகம் கட்டுவேன் என்றார். வாஷிங்டனின் வாழ்க்கை வரலாற்றை வாசித்த லிங்கன் அமெரிக்காவின் அதிபரானார். ரூஸோவின் நூல்கள் பிரெஞ்சு புரட்சிக்கு வழிவகுத்தது

நம் அரசியல்வாதிகளில் பலர் இலக்கியப் பாடங்களை கல்லூரிகளில் படித்தவர்கள் இல்லை. ஆனாலும் அவர்களால் தேர்ந்த தமிழ் பேராசிரியர்களை விடவும் சிறப்பாக இலக்கியங்களை பேச முடிகிறதே எப்படி? யோசித்துப் பார்த்தால் அவர்கள் தொடர்ந்து வாசிப்பவர்களாக இருப்பதே அதற்குக் காரணம் என்ற உண்மை விளங்கும். நெல்லை கண்ணன், மறைந்த கலைஞர் கருணாநிதி ஆகியோரின் வாழ்க்கை நமக்குச் சொல்லும் செய்தி இது தான். கல்லூரிக்குச் சென்றும் பலரால் கைவரப் பெற முடியாததை வாசிப்பின் மூலம் அவர்கள் வசப்படுத்திக் காட்டினர்.  

குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கம்:

வாசிப்பாளர்களாக இருப்பவர்கள், ”வாசிக்கும் பழக்கத்தை தன் தாத்தாவிடமிருந்து, பாட்டியிடமிருந்து, பெற்றோரிடமிருந்து கற்றேன். அவர்கள் வாசித்துச் சொன்ன கதைகள் என்னையும் புத்தகங்கள் வாசிக்க வைத்ததுஎன சொல்லக் கேட்கிறோம். கூட்டுக் குடும்ப வாழ்க்கை சிதைந்து போன நிலையில் வீட்டில் வாசித்துக் கொண்டிருந்த தாத்தா, பாட்டி இருவரும் முதியோர் இல்லங்களுக்குச் சென்று விட்டார்கள். வசிப்பதற்காக ஓடிக் களைத்துத் திரும்பும் பெற்றோர்கள் வாசிப்பதே இல்லை. அல்லது அவர்கள் வாசிக்கும் பழக்கத்திற்குப் பழகவில்லை. அவ்வாறே பிள்ளைகளையும் பழக்குவதில்லை. தொலைக்காட்சி, அலைபேசி என எதையாவது பார்த்துக் கொண்டு குழந்தைகள் தொந்தரவு தராமல் இருந்தால் போதும் என நினைக்கிறோம். அதற்காகவே அவர்களின் கைகளில் செல் போன்களைத் திணித்து விடுகிறோம். பொழுது போக்குகளுக்காக செலவழிக்கும் பணத்தில் சிறு தொகையைக் கூட குழந்தைகளுக்கு புத்தகங்கள் வாங்கித் தர நாம் விரும்புவதில்லை. அவர்களுக்காக நேரம் ஒதுக்கி நூலகங்களுக்கு அழைத்துச் செல்வதில்லை. கொஞ்சம் மெனக்கெட்டு குழந்தைகளாக இருக்கும் போதே வாசிப்புப் பழக்கத்தை அவர்களுக்குக் கற்றுக் கொடுத்து விட்டால் போதும். அதன் பின் அவர்களை பற்றிக் கவலைப் பட வேண்டியதில்லை. அவர்களே சிற்பியாய் மாறி தங்களைச் சிலையாய் செதுக்கிக் கொள்வார்கள்.

நகராத நீர் நதியாகாது. அங்கேயே கிடந்து சாக்கடையாக மாறிவிடும். நீர் போன்றது தான் நம் மனமும், எண்ணங்களும்! அது நதியாய் நகர வேண்டுமானால் அதற்கு வாசிப்பு அவசியம். வாசிப்பு மட்டுமே நம்மை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும். அலட்சியங்களையும், அவமானங்களையும் எளிதில் கடந்து செல்ல உதவும். “போதும் என்று நொந்து போய் புது வாழ்வைத் தேடுகிறீர்களா……….ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்குங்கள்என்கிறார் இங்கர்சால். நாமும் நம் வாழ்வில் புதிய அத்தியாயத்தைத் தொடங்க புத்தகங்கள் வாங்குவதோடு அவைகளை வாசிக்கவும் பழகுவோம். அதன் மூலம் நமமை நாமே புதுப்பித்துக் கொள்வோம். பாறை சிலையாவதும், படிக்கட்டாவதும் நம் கைகளில் தான் இருக்கிறது.

நன்றி : உங்கள் நூலகம் மாத இதழ்




1 comment: