Friday, 10 January 2020

சிகைத் தாய்

நேர்த்திஎன்பதைச் சிரம் மேற்கொண்டு செய்யக்கூடிய தொழிலாளர்களில் சிகை அலங்கார கலைஞனுக்கு எப்பொழுதுமே தனித்த இடம் உண்டு. ஒற்றைச் சீப்பும், சாணை பிடித்த கத்தியும் அவனின் கேடயமாகவும், ஆயுதமாகவும் மாறும் போது அதன் வெற்றி அவனை விடவும் நமக்கே உரியதாகுகிறது.  

நமக்குள் அடங்கியிருக்கும் வசீகரத்தைக் களைந்தும், கழைத்தும் நேர்த்தியாக்குபவனாக அவன் இருப்பதால் நமக்கும் நெருக்கமானவனாக இருக்கிறான்.   

தேவையில்லாததை தேவைக்கேற்ப நீக்குவதன் மூலம் நம்மைநம் முகத்தைநம் அடையாளத்தை மற்றவர்களுக்கு அருகில் நகர்த்தும் அரும் பணி செய்ய அந்த கலைஞனுக்குப் பத்து நிமிடங்கள் போதுமானதாக இருக்கிறது. அந்த பத்து நிமிடத்தில் அவனால் நிகழ்த்தப்படும் நிகழ்வுகளின் வரிவடிவம்சிகைத் தாய்”.

அவசியத்திற்கு அதிகமானதை களையத் தொடங்கும் போது சிகை அலங்கார கலைஞனாக இருப்பவன், தன் பணியை நிவர்த்தி செய்து, நேர்த்தியாக்கி சிரசின் இருப்பக்க ஓரம் நின்று சிறு தொடுதலும், ஒரு நகர்வுப் பார்வையும் பார்க்கும் போது பால்யத்தில் நம்மை ஒப்பனை செய்து பள்ளிக்கு அனுப்பி வைக்கும் தாயாகி விடுகின்றான். அந்த உணர்வை நமக்குத் தந்து விடுகிறான். வாசித்து முடிக்கையில் அதை உணர வைத்து விடுகிறது சம்பத்ஜியின் இந்தக் கவிதை.

சுழல் நாற்காலியின்

லாவக திருப்பலில்

போத்தலை பீய்ச்சி, பீய்ச்சி

நறுமணச் சாரலை முகம்தூவி

அகவையைக் குளிர்வித்தான்.


வெள்ளையும், கறுப்புமாய்

தரைபடிந்த சிகைத் துணுக்குகள்

ஆயுளை உறுத்தின.


ஒப்பனையின் இறுதியாக

சிகையுயர்த்தி

நறுமணம் பீய்ச்சி

பிரியமாய் முகம் தடவி

சொடுக்கெடுத்து புன்னகை பூக்க

புறமிருந்து கவனித்து நேர்த்தியாக்கி

பெருமிதம் கொண்டான்.

 

 பால்யத்தில் பள்ளிக்கு அலங்கரித்து

அனுப்பும் என் அம்மாவைப் போல.

கேச இசையில் மூழ்கியிருக்கும் அந்த சிகை அலங்காரக் கலைஞன் தன் சவரக்கத்தியைக் கூராக்கும் நேரத்திலோ, சீப்பிலிருக்கும் சிக்குகளை அகற்றும் சமயத்திலோ கிடைத்த சிறு இடைவெளியில்

வெள்ளையும், கறுப்புமாய்

தரைபடிந்த சிகைத் துணுக்குகள்

ஆயுளை உறுத்தின.

என்ற மூன்று வரிகள் நிகழ்ந்திருக்கக் கூடும் என நினைக்கிறேன். அந்த இடைவெளியைக் களைந்து விட்டால்சிகைத்தாய்இன்னும் பூரணம் கொண்டிருக்கும்.

தொகுப்பு   - முரல் நீங்கிய புறா

வெளியீடு  - புது எழுத்து பதிப்பகம்

1 comment: