Thursday 30 January 2020

ஈபிள் கோபுரம்

திரைப்படங்களில், வாழ்த்து அட்டைகளில், அலங்கார வளைவுகளில் இடம் பெற்றிருக்கும் ஈபிள் கோபுரம் அதன் உயரம் போலவே சுவராசியமான பல தகவல்களைக் கொண்டது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரில் இக்கோபுரம் அமைந்திருக்கும் இடத்தின் பெயர்சாம்ப்டிமார்”. இவ்விடம் ஒரு அணிவகுப்பு மைதானமாகும்.

1789 – 1799 ல் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த பிரெஞ்சு புரட்சியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியானஎக்ஸ் பொசிசன் யுனிவர்செல்எனும் உலகக் கண்காட்சி விழாவிற்கான நுழைவாயிலாக 1889 ல் இக்கோபுரம் கட்டப்பட்டது. இதைக் கட்டிய பொறியாளரின் பெயர்அலெக்சாண்டர் கஸ்டாவ் ஈபிள்”.  அவர் பெயராலயே அதுஈபிள் கோபுரம்என்றழைக்கப்பட்டது.

இக்கோபுரம் ஆரம்பத்தில் பிரான்ஸ் நாட்டின் மற்றொரு நகரான பார்சிலோனாவில் அமைப்பதாக இருந்தது. ஆனால், கோபுரத்தின் உயரம், வடிவமைப்பு, அதை அமைக்கும் விதம் ஆகியவைகளைச் சுட்டிக் காட்டி பார்சிலோனா நகராட்சி அனுமதி தர மறுத்து விட்டது. அதன் பின்னரே பாரீஸ் நகரம் தேர்வு செய்யப்பட்டது.

பாரீஸ் நகரின் முக்கிய அடையாளமாக 2.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோபுரம் 986 அடி உயரமுடையது. ஐந்து இலட்சம் ஆணிகளைக் கொண்டு 18,038 சிறப்பு உருக்கு இரும்புத் துண்டுகளை இணைத்து உருவாக்கப்பட்ட இக்கோபுரம் 10,000 டன் எடை கொண்டது. இதில் இரும்பு பாகத்தின் எடை மட்டும் 7300 டன்கள்! மூன்று அடுக்குகளாக அமைந்துள்ள கோபுரத்தில் 1800 படிக்கட்டுகள் உள்ளன. தவிர, 189 அடி, 380 அடி, 906 அடி உயரங்களில் அமைந்துள்ள மூன்று நடை மேடைகளில் இருந்தும் பாரீஸ் நகரின் அழகை பார்த்து இரசிக்க  முடியும். அதற்கு ஏதுவாக எட்டு மின் தூக்கிகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அடுக்கிலும் உணவகம், தகவல் நிலையம், கண்காட்சி மண்டபம் ஆகியவைகள் உள்ளது.

கோபுரத்தின் உச்சியில் வானொலி ஒலிபரப்பிற்காக 20 மீட்டர் உயரம் உடைய ஆண்டெனா பொருத்தப்பட்டுள்ளது. 1909 ல் பொருத்தப்பட்ட இவ்வாண்டனா 1957 முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பிற்கும் பயன் பட்டது. ஆண்டனாவோடு சேர்த்து கோபுரத்தின் மொத்த உயரம் 1063 அடிகள். கோபுரத்தின் கீழ்பகுதியில் ஒரு சுரங்க வானொலி நிலையம் செயல்படுகின்றது

கோபுரத்தின் இரும்புகள் தடபவெப்ப மற்றும் பருவநிலை மாற்றங்களால் பாதிக்கப்படாதவாறு இருக்க 50 முதல் 60 டன் எடையுள்ள மண் நிறம் கொண்ட வர்ணம் ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூசப்படுகிறது. நவீன முறைகளில் அல்லாமல் வெறும் தூரிகைகள் கொண்டு மட்டுமே இப்பணி செய்யப்படுகிறது.

கோடைவெயில் கோபுரத்தின் பக்கவாட்டில் படும் சமயங்களில் கோபுரம் முன்நோக்கி 18 செ.மீ. வரைக்கும் வளைவதாகவும், வேகமாகக் காற்றடிக்கும் சமயங்களில் கோபுரத்தின் நுனி அதன் நிலையிலிருந்து 6 முதல் 7 செ.மீ. வரையில் ஊசலாடுவதாகவும் கணக்கிட்டுள்ளனர்.

1887 – ல் தொடங்கி 1889 மார்ச் 31 ல் முடிவடைந்த இக்கோபுரம் முந்நூறு தொழிலாளர்களின் தொடர் உழைப்பினால் கட்டப்பட்டது. இதே ஆண்டு மே 6 ம் தேதி பார்வையாளர்களுக்குத் திறந்து விடப்பட்டது. ஆரம்ப காலத்தில் பார்வையாளர்களுக்குக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. பின்னர் கூட்ட நெரிசல், கோபுரத்தின் பராமரிப்புச் செலவு ஆகிய காரணங்களுக்காக டிக்கெட் முறை கொண்டு வரப்பட்டது. கோபுர பராமரிப்பு பணியில் முந்நூறு ஊழியர்கள் உள்ளனர். அவர்களுக்கென தனிச் சங்கமும் உள்ளது!

கோபுரத்தை இருபது ஆண்டுகள் மட்டுமே நிறுத்தி வைக்க ஈபிள் அனுமதி பெற்றிருந்தார். ஆனால், காலப்போக்கில் பாரீஸின் அடையாளமாக மாறிப்போனதால் 1909 ல் பாரீஸ் நகர நகராட்சியின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் ஈபிள் கோபுரம் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. ஆய்வு முடிவில் இன்னும் முந்நூறு ஆண்டுகளுக்கு நிலைத்திருக்கும் என தெரியவந்ததும் அதே நிலையி;ல் கூடுதல் வசதிகளோடு கோபுரத்தை பராமரிப்பதென பாரீஸ் நகராட்சி முடிவு செய்தது.

தெளிவான கால நிலையில் சாதாரணமாக நாற்பத்தி இரண்டு மைல் தொலைவில் இருந்து இக்கோபுரத்தைக் காணமுடியும்.  கட்டி முடிக்கப்பட்ட காலத்தில் இருந்து  1930 ம் ஆண்டு வரை உலகின் மிக உயரமான கோபுரமாக இது திகழ்ந்தது. 1930 ல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கட்டப்பட்ட கிரைஸ்லர் கட்டிடத்தால் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்ட ஈபிள் கோபுரம் தற்போது ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஆயினும், குறுகிய காலத்தில் கட்டப்பட்டு நீண்ட நாட்கள் நிலைத்திருக்கும் கட்டுமானம் இது ஒன்றாகத் தான் இருக்கும் என இதை வடிவமைத்த அலெக்சாண்டர் கஸ்டாவ் ஈபிளின் கூற்றை இன்றும் தக்க வைத்தபடி நிற்கிறது ஈபிள் கோபுரம்!

நவீன கட்டிடப் பொறியாளர்களின் அதிசயமாக விளங்கும் இக்கோபுரத்தின் கட்டுமான முறைகள்வோர்விக் ஹேர்பேட் ரேப்பர்என்ற ஆங்கிலேய ஓவியர் தீட்டி வைத்திருந்த ஓவியங்கள் மூலம் வெளி உலகிற்குத் தெரிய வந்தது. கோபுரத்தின் கட்டுமான சமயத்தில் அடிக்கடி பாரீஸிற்குச் சென்று வந்த வோர்விக் கட்டுமானப் பணிகளையும், பாரீஸ் நகர மக்களையும் ஓவியங்களாக வரைந்து வைத்திருந்தார். இந்த ஓவியங்கள் அவருடைய பேரன் மூலம் கண்டெடுக்கப்பட்டு வெளிஉலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டது.

கோபுரத்தின் அடிப்பகுதியில் முகப்பிற்கு பதினெட்டு பேர் வீதம் நன்கு முகப்புகளிலும் எழுபத்தி இரண்டு பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானிகளின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோபுரத்தைக் கட்டி முடிக்க அன்றைய மதிப்பில் ஆன செலவு எட்டு மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ட்! இதன் முதலாமாண்டில் நுழைவுக் கட்டணமாக கிடைத்த தொகை இதைக் கட்ட ஆன செலவுத் தொகையை விட அதிகம்!!

1902 ஜுன் 3 ல் மின்னல் தாக்குதலாலும், 1956 ஜனவரி 3 – ல் மின் கசிவாலும் கோபுரத்தின் உச்சிப்பகுதி சேதமடைந்து சரி செய்யப்பட்டது. படப்பிடிப்பிற்கான அனுமதி முதன் முதலில் ஜேம்ஸ்பாண்ட் திரைப்படத்திற்காக 1965 ல் வழங்கப்பட்டது. 2000 – ம் ஆண்டில் கோபுரம் முழுவதும் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டன.

ஐரோப்பாவின் விலை மதிப்பு மிக்க நினைவுச் சின்னமாக பெயரிடப்பட்டுள்ள ஈபிள் கோபுரம் தனது இருபது கோடியாவது பார்வையாளரை 2002 ல் எட்டியது. பிரான்சின் ஆண்டுப் பொருளாதாரத்தில் பெருமளவு தொகை ஈபிள் கோபுரம் மூலமே பெறப்படுகிறது.

1892 ம் ஆண்டு தொடங்கி பல ஆண்டுகள் வரையிலும் இரும்பினாலான இந்தக் கட்டுமானம் ஆபத்தானது. இதன் உறுதி நம்பகமில்லாதது. பாதுகாப்பற்றது என்று சொல்லப்பட்ட விமர்சனங்களை எல்லாம் வென்று இன்றும் ஈபிள் கோபுரம் கம்பீரமாய் நிற்கிறது. ஈபிள் கோபுரத்தில் ஏற்பட்ட உயிர்சேதம் அதன் கட்டுமான பணிக் காலத்தில் நிகழ்ந்த ஒரு தொழிலாளியின் இறப்பு மட்டுமே என்பதும் கூட இன்னொரு அதிசயம் தான்!.

நன்றி : தினமணி - சிறுவர்மணி

1 comment:

  1. அருமை அறியாத பல விசயங்களை தங்கள் பதிவின் மூலம் அறிந்தேன்..வாழ்த்துகளுடன்...

    ReplyDelete