Wednesday, 22 January 2020

கவிதை என்ன செய்யும்?

மகளுடனான உரையாடலின் போது, ”மூன்று வரியில் கவிதை இருந்தால் அதுக்குஹைக்கூ”  ன்னு பேராம்லஎன்றாள்.

ஹைக்கூ என்பது தனி வடிவம். அதன் பல வரையறைகளுள் ஒன்று மூன்று வரியில் இருக்க வேண்டும். அந்த வரையறையை மட்டும் மனதில் கொண்டு எழுதப்படும் மூன்று வரிக் கவிதைகளை இப்பொழுது எல்லோரும் ஹைக்கூ என அழைத்து வருகிறார்கள் என்றேன்.

அப்படியா? என்றாள்.

என்ன திடீர்னு கவிதை மேல ஆர்வம்? என்றேன்.

எங்கள் தமிழ் பாடத்தில்

இந்தக் காட்டில்

எந்த மூங்கில்

புல்லாங்குழல்?” –

என்ற ஒரு கவிதை இருக்கிறது. அதை ஹைக்கூ என்று சொன்னார்கள். அதான் கேட்டேன் என்றவள், “இதை நான் புரிந்து கொண்ட அளவில் அதைப் போலவே நானும் ஒன்றை (கவிதை என அவள் குறிப்பிடவில்லை) எழுதி இருக்கிறேன்என்றாள்.

சொல்லு கேட்போம்என்றேன்.

அதற்கு முன் எங்கள் பாடத்தில் இருக்கும் கவிதைக்கு விளக்கம் சொல்லுங்கள். நான் புரிந்து கொண்டது சரியா? என செக் செய்து கொள்கிறேன் என்றாள்.

ஒரு பெரிய வனம். அதில் நிறைய மூங்கில்கள் வளர்ந்திருக்கிறது. அதில் ஏதோ ஒன்று புல்லாங்குழல் ஆகப்போகிறது. அது எது என்பதைத் தான் கவிதை கோருகிறது. மூங்கிலை புல்லாங்குழலாக்கவும் முடியும். வெறும் சாரம் கட்டும் கழியாகவும் பயன்படுத்தவும் முடியும். புல்லாங்குழல் இறைவனின் கைகளில் இருக்கும் உயர் நிலை. சாரம் எல்லோர் கால்களிலும் மிதிபடும் கீழ் நிலை. இதைப் படிமக் கவிதையாகவும் பார்க்கலாம். வனத்தை நாம் வாழும் சமூகமாகவும், மூங்கில்களை அந்த சமூகத்தின் அங்கமான  மனிதர்களாகவும் கொள்ளலாம். இதில் எத்தனை மனிதர்கள் புல்லாங்குழல் போன்ற உயர் நிலை பெறுகின்றனர். எத்தனை பேர் சாரம் கட்டும் மூங்கில் போன்ற கீழ் நிலை பெறுகின்றனர். உயர் நிலை அடைதல் தானே மனித மாண்பின் அடையாளம். அதை அடைய வேண்டியதை மறை பொருளாக உணர்த்துவதாகவும் கொள்ளலாம்என அவளுக்கான எளிய மொழிநடையில் கவிதை வரியை அப்படியே விரித்து விளக்கினேன்.

ஓரளவு சரியாக புரிந்திருக்கிறேன்னு நினைக்கிறேன்என்றாள்

உன் பாடக்கவிதையை ஒட்டி நீ என்ன எழுதினாய்? என்றேன்.

என் கிளாஸில் (வகுப்பறையில்)

எந்த மிருகம்

மனிதன்? என்றாள்.

நீங்கள் எல்லாம் மிருகமா? என்றேன். மெல்லிய புன்னகைத்தாள். நானும் பதிலுக்குப் புன்னகைத்தேன்.

"ஒரு கவிதை இன்னொரு கவிதை செய்யும்" என எப்பொழுதோ வாசித்தது நினைவில் வந்து போனது. மெருகேறாத நடையாக அவள் எழுதியது இருந்த போதும் வாசிப்பு சாத்தியமானால் மெருகேறிய படைப்புகளை அவள் முயன்று பார்ப்பதற்கான சாத்தியம் இருப்பதாகவே தோன்றியது.

1 comment: