கொண்டாட்டமாய் போக
வேண்டிய விடுமுறையை “செம
போர்” எனச் சொல்ல
வைத்து விட்டது கொரோனா.
வீட்டை விட்டு வெளியேறக் கூடாது
என்ற கண்டிஷனோடு கிடைத்திருக்கும் விடுப்பு பெரியவர்களுக்கே சுமையாக இருக்கும் நிலையில் குழந்தைகளுக்குச் சொல்லவே வேண்டியதில்லை. கொஞ்சம் மெனக்கெட்டால் நமக்கு
மட்டுமல்ல குழந்தைகளுக்கும் கூட
இந்த வீடு அடங்கி
இருத்தலை சுகமான நினைவுகளாக மாற்றிக் கொடுக்க முடியும். வீட்டிற்குள் இருக்க
மறுக்கும் குழந்தைகளை வீட்டிற்குள்ளேயே அடங்கி
இருக்கச் செய்திருக்கும் இந்நாட்களில் அவர்களோடு சேர்ந்து நீங்காத நினைவுகளை உருவாக்கிக் கொள்ள
பெற்றோர்கள் செய்ய வேண்டிய சில
விசயங்களைச் சொல்ல விரும்புகிறேன்.
பிடித்ததைச் செய்ய அனுமதியுங்கள் :
பள்ளி நாட்களில் படி, படி என ஆசிரியர்கள் ஒரு பக்கம், நாம் ஒரு பக்கம் என குழந்தைகளை விரட்டிக் கொண்டே இருந்திருப்போம். வீட்டுப் பாடங்கள் செய்யவே அவர்களுக்கு நேரம் போதுமானதாய் இருந்திருக்கும். இப்போது கிடைத்திருக்கும் இந்த விடுப்பை அவர்களுக்கானதாக மாற்றுங்கள். அவர்களுக்குப் பிடித்த விசயங்களைச் செய்ய ஊக்குவியுங்கள். அவர்கள் பள்ளி நாட்களில் செய்ய விரும்பி நீங்கள் மறுத்த விசயங்களை நினைவூட்டி இப்போது செய்ய அறிவுறுத்துங்கள். செஸ், கேரம் போர்டு, அலைபேசி விளையாட்டுகள் என அவர்கள் அறிந்த விளையாட்டுகளோடு அவர்கள் தலைமுறையில் காணாமல் போன பல்லாங்குழி, தாயம், தட்டாங்கல் போன்ற விளையாட்டுகளை அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். உங்களிடமிருந்து அவர்களும், அவர்களிடமிருந்து நீங்களும் கற்றுக் கொள்வதாக அத்தகைய விளையாட்டுகள் இருக்கட்டும்.
பயிற்சி பெற வையுங்கள் :
இன்றைய குழந்தைகள் பெரும்பாலும் ஆங்கில வழியில் பயின்று வருபவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்குத் தாய் மொழியில் உச்சரிப்பும், பிழையின்றி எழுதுவதும் சிரமமாக இருக்கும். இந்த நாட்களில் தினமும் ஒரு மணிநேரமோ, அரைமணி நேரமோ ஒதுக்கிப் பாடப் புத்தகம் சாராத நாளிதழ், மாத இதழ், கதைப் புத்தகங்களை வாசிக்கச் சொல்லுங்கள். வீட்டில் இரண்டு குழந்தைகள் இருந்தால் ஒரு குழந்தை வாசிப்பதைக் கேட்டு மற்றொரு குழந்தையை எழுதச் சொல்லுங்கள். அடுத்த நாள் அதையே மாற்றி செய்யச் சொல்லுங்கள். அவர்கள் எழுதியதை அவர்களையே சரிபார்த்துக் கொள்ள வையுங்கள். இதனால் அவர்களின் மொழி வளம், வாசிப்புத் திறன், உச்சரிப்பு முறை மேம்படும். இது பள்ளி திறந்து குழந்தைகள் வகுப்பறைக்குச் செல்லும் போது மொழிப் பாடத்தில் அவர்களுக்கு பெரிய நம்பிக்கையைக் கொடுக்கும்.
வாய்ப்புகளை அடையாளம் காட்டுங்கள் :
குழந்தைகள் வீட்டில் முடங்கி இருக்கும் இந்த நேரத்தில் குழந்தைகளுக்கான போட்டிகளை பல்வேறு அமைப்புகள் நடத்துகின்றன. தினமலர் நாளிதழ், யுனெசெஃப், சமூக அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் போன்றவைகள் ஓவியப்போட்டிகள், கட்டுரைப் போட்டிகள், கவிதைப் போட்டிகளை நடத்துகின்றன. நாளிதழ்கள், வாட்ஸ் அப்பில் வரும் அத்தகைய தகவல்களை குழந்தைகளுக்குக் காட்டி அதில் அவர்களை பங்கு கொள்ள வழிகாட்டுங்கள். அவர்களின் படைப்புகளை இதழ்களுக்கும், இணைய தளங்களுக்கும் அனுப்பி வையுங்கள். வெளியாகும் படைப்புகளால் அவர்களின் தன்னம்பிக்கை உயரும். தங்களின் திறமைகளை அவர்கள் கண்டு கொள்வதால் இன்னும் சிறப்பாக அதில் செயல்பட வேண்டும் என்ற ஆர்வம் அவர்களுக்கு உண்டாகும்.
கற்றுக் கொடுங்கள்:
எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்த நீங்கள் அவர்களையும் அதில் பங்கு பெற வையுங்கள். அவர்களுக்கான அலமாரிகளை அவர்களிடமே கொடுங்கள். சலவை இயந்திரத்தில் துணிகளை அலச போடுதல், துணிகளை கொடிகளில் உலர்த்துதல், மடித்து வைத்தல் சிறு, சிறு சமையல் வேலைகளைச் செய்தல், வீட்டை சுத்தப்படுத்துதல், படுக்கைகளை ஒழுங்கு செய்தல், காய்கறிகள் நறுக்குதல், பாத்திரங்களைக் கழுவி ஒழுங்கு செய்தல், காய்கறிக் கழிவுகளை செடிகளுக்கு போடச் செய்தல் போன்ற வேலைகளை அவர்களுக்கு செய்யக் கொடுங்கள். எது ஒன்றையும் நேர்த்தியாய் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை இது அவர்களுக்குத் தரும். இப்போதைய சூழலைக் கொண்டு சிறு சேமிப்பின் அவசியத்தையும், சிக்கனத்தின் தேவையையும், ஆரோக்கியத்தின் அவசியத்தையும் கற்றுக் கொடுங்கள். வங்கி, தபால் நிலைய பரிவர்த்தணை படிவங்கள் கைவசமிருந்தால் அவைகளை நிரப்பச் சொல்லிக் கொடுங்கள். அவர்களுக்குள் சுய நம்பிக்கையை அது தரும்.
கூடி அமர்ந்து உணவருந்துங்கள் :
வழக்கமான நாட்களில் குழந்தைகளோடு, குடும்பத்தாரோடு ஒன்றாக அமர்ந்து ஒருவேளை சாப்பிடுதல் கூட சாத்தியப்படாமல் இருந்திருக்கும். இன்றோ மூன்று வேளையும் அப்படியான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதைத் தவற விடாமல் குடும்ப உறுப்பினர்களோடு, குழந்தைகளோடு ஒன்றாக அமர்ந்து உணவருந்துங்கள். அச்சமயத்தில் உங்களின் கடந்த காலங்களை, பள்ளி, கல்லூரி காலங்களை, வேலையிட சுவாரசிய நினைவுகளை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அவ்வாறே மற்றவர்களையும் பகிர்ந்து கொள்ளச் சொல்லுங்கள். அதேபோல, பிள்ளைகளிடம் அவர்களின் பள்ளி நிகழ்வுகள், விரும்பும் ஆசிரியர்கள், நண்பர்கள், அவர்களிடம் பிடித்த குணங்கள், பிடிக்காத குணங்கள் பற்றிக் கேளுங்கள். வருங்காலத்தில் எந்த விசயத்தையும் பகிர்ந்து கொள்ள என் பெற்றோர் உடனிருக்கிறார்கள் என்ற எண்ணத்தை அவர்களுக்கு இந்தக் கலந்துரையாடல் கொடுக்கும்.
மேற்பார்வையாளராக்குங்கள் :
பிள்ளைகளிடம் சில புதிய பழக்கங்களை அறிமுகப்படுத்துங்கள். புதியவைகளைக் கற்றுக் கொடுங்கள். உதாரணமாக காலை எழுந்தவுடன் கால் மணிநேரம் உடற்பயிற்சியையோ, மூச்சுப் பயிற்சியையோ கற்றுக் கொடுங்கள். அவர்களோடு நீங்களும் அந்த கால் மணிநேரத்தை ஒதுக்கி சில நாட்கள் செய்தால் அது அவர்களுக்குப் பழக்கமாகிவிடும். அதன் பின் அவர்களை நீங்கள் கண்காணிக்காதீர்கள். அப்படிச் செய்வது அவர்களுக்கு ஒருவித அயர்ச்சியை கொடுக்கும். அதற்குப் பதில் ஒரு குழந்தை அத்தகைய பயிற்சிகளைச் செய்யும் போது மற்றொரு குழந்தையை மேற்பார்வை செய்யச் சொல்லுங்கள். குறைகளைக் கண்டறியச் சொல்லுங்கள். இதனால் அவர்களுக்குள் ஈகோ வராது. இப்படிச் செய்வதன் மூலம் அவர்களுக்கு ஒரு லீடர்ஷிப் தன்மை உருவாகும்.
உறவுகளை இணையுங்கள் :
நேரமில்லை என்ற காரணத்தால் நீங்கள் பேச மறந்த உறவினர்களையும், விசேசங்களில் மட்டும் சந்திக்க வாய்க்கும் சொந்தங்களையும் அலைபேசியில் அழைத்துப் பேசுங்கள். அச்சமயங்களில் குழந்தைகள் அருகில் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களையும் இரண்டொரு வார்த்தை அவர்களிடம் பேச வையுங்கள். அந்த உறவினர்கள், அவர்கள் குடும்பங்களில் இருப்பவர்கள், அவர்கள் பற்றிய நல்ல விசயங்களை குழந்தைகளிடம் சொல்லுங்கள். அதேபோல, குடும்பத்தினர், குழந்தைகள் சூழ அமர்ந்து உங்களின் திருமண ஆல்பம், குடும்ப நிகழ்வுகளில் எடுத்த புகைப்படங்கள் ஆகியவைகளின் மூலம் உங்கள் நினைவுகளை மீட்டெடுங்கள். ஒவ்வொரு புகைப்படத்தைப் பார்க்கும் போதும் ஒவ்வொருவருக்கும் வரும் நினைவுகளை பகிர்ந்து கொள்ளச் சொல்லுங்கள். இப்படிச் செய்வது கணவன், மனைவியான உங்களுக்கு எப்படி இருந்த நீங்கள் எப்படி மாறி இருக்கிறீர்கள்? என்ற சுயபரிசோதனை செய்து கொள்ள உதவும். உங்கள் குடும்பத்திற்கான கொடிவழியை குழந்தைகளோடு இணைந்து உருவாக்க முயலுங்கள். அவர்களுக்கு அது ஒரு புது அனுபவமாய் இருக்கும்.
குழந்தைகளும், குழந்தைகளோடு சேர்ந்தும் செய்யும் எல்லா நிகழ்வுகளும், எப்பொழுதும் அற்புதமானவையாய், புது அனுபவமாய் அமையும். அதை இந்த வீடு அடங்கி இருக்கும் நாளில் எவ்வளவு அதிகமாக்கிக் கொள்ள முடியுமோ அவ்வளவுக்கு அதிகமாக்கிக் கொள்ளும் போது அது குடும்பத்தினர் அனைவரையும் புத்துணர்ச்சி கொள்ள வைக்கும். புதிய தொடக்கத்தை இன்னும் இனிதாக்கித் தரும்.
நன்றி : திண்ணை.காம்
அருமையான யோசனைகள்...
ReplyDelete