Wednesday, 22 April 2020

நான்கு இலக்கம் நோக்கிய நம்பிக்கை!

முகநூலில் என் நண்பர்கள் சிக்சர்களாக விளாசிக் கொண்டிருந்த சமயத்தில் தான் அது எனக்கு அறிமுகம். நண்பர் பிரகாஷ் முகநூல் கணக்கைத் தொடங்கி அதில் எப்படி பதிவுகள் செய்ய வேண்டும் என்று பாடம் நடத்தி கட்டாயப்படுத்திய பின்பே முகநூலுக்குள் வந்தேன். அதில் பொழுதுகளைப் போக்கிக் கொண்டிருந்த நேரத்தில் சிலர் தங்களது பக்கங்களில் பகிர்ந்திருந்த அவர்களுடைய வலைப்பக்க லிங்க் வழியாக நுழைந்து திரிந்ததில் வலைப் பக்கம் பற்றிய அறிமுகம் கிடைத்ததுஅதன் வடிவமைப்பு தந்த கவர்ச்சியால் பல பேரின் வலைப்பக்கங்களுக்குச் சென்று பார்த்த பின் ஒரு ஆர்வத்தில் நண்பர்களிடம் வலைப்பக்கம் குறித்து விசாரித்தேன்.

வலைப்பக்கத்திற்கு காசெல்லாம் கட்டத் தேவையில்லை. எல்லாம் இனாம் தான். உன்னைப் போல எழுதத் தெரிந்த (!) நபர்களுக்கு வலைப்பக்கம் ஒரு விசிட்டிங் கார்டு மாதிரி. உன்னைப் பற்றிய விளக்கமெல்லாம் யாருக்கும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. உன் வலைப்பக்க முகவரி கொடுத்தால் அதைப் பார்த்து அவர்களே உன்னைப் பற்றித் தெரிந்து கொள்வார்கள் என அவர்கள் எரிகிற தீயில் எண்ணெய் வார்த்து விட மனம் இன்னும் கொஞ்சம் ஆசை கொள்ள ஆரம்பித்தது.

ஆசை தானே துன்பங்களுக்கு காரணம். இந்த விசயத்தைப் பொருத்தவரை என் ஆசை என் நண்பர்களுக்குத் துன்பமாகி விட்டது! வலைப்பக்கம் தொடங்க வேண்டும் என்ற என் நமுப்பு தாங்காமல் அவர்கள் சில லிங்க் அனுப்பி இதைப் படித்து நீயே வலைப்பக்கத்தை வடிவமைத்துக் கொள்ள முடியும். முயற்சி செய்ஏதாவது சிக்கல் என்றால் நாங்கள் சரி செய்து தருகிறோம் என்றார்கள்வேலையைவும், நேரத்தையும் விரட்டிப் பிடித்துக் கொண்டிருக்கும் துறையில் இருக்கும் அவர்களால் அதை மட்டும் தான் எனக்குச் செய்ய முடிந்தது.

தன் கையை தனக்குதவி என எப்பொழுதோ படித்தது நினைவுக்கு வர நானே களத்தில் இறங்கினேன். கட்டி அழித்து, அழித்துக் கட்டி என என் வலைப்பக்கத்தை வடிவமைத்தேன். தடுமாறி நிற்கையில் நண்பர்கள் உதவிகள் புரிய உருவானது gobisaraboji.blogspot.com! முகநூல் வந்த பின் வலைப்பக்கமெல்லாம் கூட்டமில்லாமல் காய்ந்து கிடக்கிறது என சில வலைப்பக்க பிரபலங்கள் சொன்னதை வாசித்து விட்டு நமக்கு இது சரியா வருமா? இப்படியே விட்டு விடுவோமா? என்றெல்லாம் யோசித்து அதற்காக நண்பர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதும் உண்டு. அவர்களின் தூண்டுதலால் வலைப்பக்கத்தை ஒரு மாதிரியாய் வடிவமைத்து முதல் பதிவையும் ஏற்றிப் பார்த்தேன். ஏக சந்தோசம்.

அதுவரை எழுதியது, பத்திரிக்கைகளில் வந்தது, பத்திரிக்கைகளுக்காக எழுதியது, அரைகுறையாய் எழுதி  நின்றது என எல்லாவற்றையும் தூசி தட்டி எடுத்து ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்தேன். பதிவுகளில் சதம் அடித்த போது டெண்டுல்கர் சதமடித்தால் வரும் மகிழ்வு வந்து சேர்ந்தது. அவ்வப்போது வலைப்பக்கத்திற்குள் வர முடியாத போதும் ஆறப்போடாமல் சில பதிவுகளை ஏற்றி கனகனப்போடு வைத்திருந்தேன்.

அந்த சமயத்தில், வலைப்பக்க முகவரி .com ஆக இல்லாமல் இருந்தால் சில நாடுகளின் இணையத்தில் அந்த வலைப்பக்கம் திறக்காது. அதனால் வலைப்பக்க முகவரியை  .com என மாற்ற வேண்டும் என ஒரு வலைப்பதிவர் எழுதி இருந்ததைக் கண்டதும் தூக்கம் போய் விட்டது. அடடா, நம்ம வலைப்பக்க முகவரி .com ஆக இல்லாமல் இருப்பதால் எந்த நாட்டுக்காரனாவது நம்மைப் பற்றி அறிய இயலாது போய் விடுமே என்ற நினைப்பு தொண்டையில் உருண்டு கொண்டே இருந்தது. அதனால்  அதற்கான வழிமுறைகளைச் சுயமாகத் தேட ஆரம்பித்தேன். ஆனால் அதில் சொல்லி இருந்த தொழில் நுட்பங்களை செய்து பார்க்கும் அளவுக்கு விசய ஞானம் இல்லாமல் போனதால் சுய முயற்சியைக் கைவிட்டேன். வலைப்பக்க நண்பர்களுக்கு வலைப்பக்கத்தில் ஏதேனும் தொழில் நுட்ப சிக்கல் என்றால் அண்ணன் திண்டுக்கல் தனபாலன் தான் ஆபத்பாந்தவனாக நினைவுக்கு வருவார். எனக்கும் அவர் நினைவு வர அழைத்தேன். செய்து தந்துட்டா போச்சு எனச் சொன்னவர் வலைப்பக்க உள்நுழைவு விவரங்களை வாங்கி அடுத்த சில மணி நேரங்களில் .com ஆக மாற்றிக் கொடுத்தார். தொலைந்த தூக்கம் திரும்பி வந்தது.

எழுத்துக் களத்தில் வேகமெடுத்து ஓடியதில் வலைப்பக்கத்தில் பதிவுகள் கூடிக் கொண்டே வந்தது. வலைப்பக்கத்தை இன்னும் ஜோடிக்க வழி இருக்கா? அதை இன்னும் அழகாய் வடிவமைக்க முடியுமா? என்பதற்காகவே நேரம் வாய்க்கும் போதெல்லாம் நண்பர்களின் வலைப்பக்கங்களுக்குச் சென்று வருவதுண்டு. சிலரின் வலைப்பக்கங்களில் தாங்கள் வாங்கிய விருதுகள், எழுதிய புத்தகங்கள் ஆகியவைகளைத் தெரியும் படி செய்திருந்தனர்ஐயா முத்துநிலவன் அவர்களும் தன் வலைப்பக்கத்தில் அவர் எழுதிய நூல்கள் தோன்றி மறையும் படி இணைத்திருந்தார். அதைப் பார்த்ததும் நாமளும் பத்து புத்தகங்களுக்கு மேல் எழுதி இருக்கோமே. அதைக் காட்டாமல் விட்டு விட்டோமே எனத் தோன்ற வலைப்பக்கத்தில் அதை எப்படி கொண்டு வருவது என்று யோசனை ஓடிக் கொண்டே இருந்தது. சுய தேடல் மூலம் அதை செய்ய முடியும் எனத் தோன்றவில்லை. முத்து நிலவன் ஐயா அவர்களுக்கு அந்த வடிவமைப்பை அண்ணன் திண்டுக்கல் தனபாலன் செய்து கொடுத்தார்கள் என அறிந்ததும் அவரையே மீண்டும் உதவிக்கு அழைத்தேன். மனிதர் அசரவில்லை. உன் புத்தக அட்டையை எல்லாம் அனுப்பு என்றார். இரண்டு தினங்களுக்குள் என் புத்தகங்களின் அட்டைப்படங்கள் வலைப்பக்கத்தில் அணிவகுத்து நின்றன. அது சார்ந்து அவர் எழுதிய தொழில் நுட்பக் கட்டுரையை அவரின் வலைப்பக்கத்தில் படித்த போது தான் எனக்காக அவர் மட்டுமல்ல அவரின் மகளும் இந்த வடிவமைப்பு விசயத்தில் உதவியது தெரிந்தது. அந்தக் கட்டுரையை இங்கே வாசிக்கலாம்.

பதிவுகளுக்கு வரும் கமெண்டுகளை உடனுக்குடன் பார்த்து பதிலுரை தர அப்பொழுது இருந்த வேலைச் சூழலில் நேரம் வாய்க்கவில்லை. அதனால் பதிவுகளை வாசித்து கமெண்ட் எழுதுபவர்கள் தவறான நினைத்துக் கொள்வார்களோ என்ற நினைப்பில் அந்தப் பெட்டியைத் தூக்கி ஓரம் வைக்கும் முயற்சியில் செய்த தவறால் வலைப்பக்கத்தை மறு கட்டமைவு செய்ய வேண்டியதாகிப் போனதுஅந்த அளவுக்குத்  தான் அது சார்ந்த அறிவு எனக்கு வாய்த்திருந்தது. மீண்டும் நண்பர்களை நாடி விரட்டிப் பிடித்து வலைப்பக்கத்தை மீட்டெடுத்தேன். கமெண்ட் பாக்ஸ்ஸை திறந்து விடுவது நல்லது என்றும், படைப்புகள் சார்ந்த எதிர்வினைகளைப் பெற அது அவசியம் எனவும் இணையப் பயிலரங்கில் கலந்து கொண்ட போது கிடைத்த அறிவுறுத்தலால் மீண்டும் திறந்து வைத்தேன். இதுவரையிலும் அப்படியான எதிர்வினைகளைத் தரக்கூடிய எந்தப் படைப்பையும் நான் எழுதவில்லை என்பது வேறு கதை!

டிஜிட்டல் விசிட்டிங்கார்டுக்கு நானும் சொந்தக்காரன் என்ற மிதப்பில் அட்டையில் அடித்து வைத்திருக்கும் பாக்கெட் விசிட்டிங்கார்டில் வலைப்பக்க முகவரியையும் இணைத்து பார்க்கிறவர்களுக்கெல்லாம் தள்ளி விட்டுக் கொண்டிருந்த சமயத்தில் கூகுள் காரன் திடீரென கூகுள்+ மூடப்போவதாக ஒரு அறிவிப்பைக் கொடுத்தான். உதவிக்கு நண்பர்களை நாட அவர்கள் கொடுத்த தைரியம் அத்தனை  தெம்பைக் கொடுக்கவில்லை. மிகச் சரியான தொழில் நுட்ப வல்லுநரின் ஆலோசனையைக் கேட்டால் மட்டுமே மனம் ஒப்புக் கொள்ளும் எனத் தோன்றியது. யாரிடம் தீர்வு கேட்கலாம்? என யோசித்த போது காம்கேர். புவனேஸ்வரி மேடம் தான் சட்டென நினைவுக்கு வந்தார். அவருக்கு இருக்கும் நேர நெருக்கடியில் எப்படித் தொடர்பு கொண்டு இது பற்றி கேட்பது எனத் தயங்கியபடியே குறுஞ்செய்தி அனுப்பினேன். நீங்க பயப்படுகிற அளவுக்கு வலைப்பக்கங்களுக்கு ஆபத்து வரும் வகையில் கூகுள் அறிவிப்பு ஏதும் தரவில்லை என நம்பிக்கை தந்தார். கூடவே வரும் முன் காப்போம் என்பதைப் போல அப்படியான சூழலில் எப்படியான தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி வலைப்பக்கத்தைச் சேகரித்து வேண்டும் என ஒரு தெளிவான கட்டுரையையும் பலரும் அறியும் வகையில் சமூக வலைத்தளத்திலும், நாளிதழிலும் தந்தார். அதை இங்கே வாசிக்கலாம். இப்போதைக்கு ஆபத்தில்லை. அப்படி வரும் போது மீட்டுத் தர ஒருவர் இருக்கிறார் என்ற நம்பிக்கை பிற விசயங்களைப் புறந்தள்ளி வைத்து விட்டு தொடர்ந்து அதில் எழுத வைத்தது. அப்படி எழுதியவைகள் மெல்ல தன் விரல்களை விரித்து ஐநூறு என்ற இலக்கை எட்டி இருக்கிறது.

என் படைப்பு சார்ந்த விசயங்களால் மட்டும் கட்டமைத்திருக்கும் இவ்வலைப்பக்கத்தை இன்னும் சிறப்பான பதிவுகளால் நிரப்ப வேண்டும். அதன் வழி ஆக்கப்பூர்வமான பயனை வாசிப்பவர்களும், நானும் பெற வேண்டும் என்பதே இப்போதைய விருப்பமாக இருக்கிறது. இந்த பெருவிருப்பத்தை நோக்கிய பயணம் இந்தக் கட்டுரையில் இருந்து நான்கு இலக்கம் நோக்கி நகரும் என நான் நம்புகிறேன். நீங்களும் நம்புங்கள். கொரானா வைரஸ் சுழற்றி அடிக்கும் இந்த நேரத்தில் நம்பிக்கை மட்டும் தானே வாழ்க்கையாக இருக்கிறது.

 

 

No comments:

Post a Comment