Wednesday, 29 April 2020

கடலெனும் வசீகர மீன்தொட்டி

யாவரும் பப்ளிஷர்ஸ் மூலம் வெளிவந்திருக்கும்கடலெனும் வசீகர மீன் தொட்டிசுபா செந்தில்குமாரின் முதல் கவிதைத் தொகுப்பு. முற்றிலும் மாறுபட்ட பார்வையை நமக்குள் விரித்து விரவும் இத்தொகுப்பின் அநேகக் கவிதைகள் காதல், காமம், தனித்திருத்தல், எதார்த்தம் என நான்கு அடுக்குகளில் துளிர்த்தும்,  தனித்த அவலத்தின் சாயல் தரித்தும் நிற்கின்றன.

வாசிப்பவனின் தடம் பற்றி நிமிரும் கவிதைகள் அவனைத் தன் நிழலில் நிறுத்தும் போது அந்தக் கவிதைக்குள் தழும்பி நிற்கும் துயரம், சந்தோசம், தனிமை, கோபம், எள்ளல், காதல், காமக், கழிவிரக்கம் என எதுவொன்றையும் தனக்கானதாய் மாற்றிக் கொண்டு அடிக்கும், நுனிக்குமாய் ஊடு பாய்கின்றான். அதன் குளிர்ச்சியில் எப்பொழுதும் தன்னைப் பதப்படுத்திக் கொள்கின்றான். இத்தொகுப்பின் தலைப்புக் கவிதையானகடலெனும் வசீகர மீன்தொட்டிஅப்படியான ஊடுபாய்தலையும், தன் பதப்படுத்தலையும் தந்தபடியே இருக்கிறது. மீனின் வழியே பிரிந்திருப்பவனின் மீந்து வழியும் காமத்தை நமக்குள் கொண்டு செலுத்த கவிஞர் சுபா கட்டமைத்திருக்கும் / பளபளப்பானதொரு தூண்டில் முள்ளில் / ஆண் வாசனையைச் சுமந்து வரும் இரை / ரகசியமாய் உதடுகள் குவித்து நீந்துகின்றன / ஈரமில்லாமல் வந்து சேர்ந்த முத்தங்கள் / வலதும் இடதுமாய் அலைந்து திரும்புகிறது / பகிர்ந்து கொள்ளப்படாத காமம் / இப்படியான ஒற்றை வரிகள் அந்தத் துயரின் அளவிடமுடியாத அடர்த்தியை உணரச் செய்து விடுகிறது.

கவிதையை ஒரு சிறுகதையாய் விரிக்க இயலும். புனைவுகளின் துணை கொண்டு காரணிகளின் வழியே அது நிகழ்தல் சாத்தியம். ஆனால், அக்காரணிகளைக் கழைந்து மையத்தின் கூர் நோக்கி காட்சிகளின் வழியே ஒரு சிறுகதையின் பரப்பைக் கவிதையாக்குவது என்பது அத்தனை சுலபமல்லசில நேரங்களில் இப்படியான கவிதையாக்கம் தன் இறுக்கம் தளர்ந்து நீர்த்துப் போய்விடும் அபாயங்களைக் கொண்டவை. ஆனால், இத்தொகுப்பில் கவிஞர் தன் கவிதைகளை கட்டமைவு சிதையாமலும், சரியான விவரணைச் சொல்லாடல் மூலமும் வாசிப்பவனுக்குள் ஒரு சிறுகதையாய் விரிய வைத்து விடுகிறார். மனைவியை இழந்த ஒருவரின் நினைவுகளின் வழியே வேர் பிடித்து எழும்மனமுதிர் காலம்கவிதை இதற்கொரு உதாரணம். / அம்மா நட்டுவைத்த செம்பருத்தி / இப்போதெல்லாம் அளவாய் தான் பூக்கிறதாம்அதுவரை அத்தெருவில் பார்த்தேயிராத பூக்காரி / அம்மாயிருந்தா நாலு முழம் வாங்குவாங்க / என்று சொன்ன பொய் ஒன்றிற்காகவே / மலர்ந்திருந்த மல்லிப்பூப் பந்தையே  வாங்கி / நெஞ்சோடு அணைத்த படி படுத்திருந்தாராம் / இந்த ஏழுவரிகள் அவரின் அப்போதைய இறுப்பையும், மனநிலையையும் சொல்லி விடுகிறது. இந்த ஏழு வரியை வசிக்கும் போதே நம்மால் காட்சிப் படுத்திப் பார்க்க முடிகிறது. / வாசலில் கொட்டிக் கிடக்கும் / உதிர்ந்த பவள மல்லிகளோடு / சிரித்தபடி செல்ஃபி எடுத்து அனுப்பும் அப்பாவிற்கு / முப்பது வயது குறைந்திருக்கிறது / பூக்கடை வாசலில் உட்கார்ந்திருந்தவரை / வீடு வரை அழைத்து வந்து விட்ட சீனு மாமா / அவ நெனப்பாவே இருக்கான் போல / அடிக்கடி போனில் பேசும்மா என்கிறார் / அடுத்த எட்டு வரிகள் அவரின் தவித்திருத்தலையும், தனித்திருத்தலையும் காட்சிப்படுத்தி விடுகிறது. பின்னொரு நாளில்  / துளசி மாடத்தில் குஞ்சு பொரித்திருந்த / தாய்பூரான் கடித்து விட்டதாய் / தளர்ந்து போன சிரிப்போடு / என்னை வாட்சப்பில் அழைத்திருந்தார்என்ற வரிகளின் வழியே அவரின் தனிமையை  / அன்று அப்பாவின் கால்களில் / திண்டு திண்டாய் சிவந்த இதழ்களோடு  / அம்மா தான் பூத்திருந்தாள் / என முடிக்கிறார். தனிமையில் இருக்கும் தன் தந்தையைப் பற்றிய இக்கவிதை அது சூல் கொண்ட விதத்தினால் ஒரு சிறுகதையாய் நம்மை வியாபித்துக் கொள்கிறது.

ஊற்றுக்கண்ணில் வழியும் ஈரம்காலத்தின் மாற்றத்தையும் அதன் வழி நாம் இழந்து நிற்கும் நீரின் ஊற்றுக் கண் தூர்வார இயலாத நிலைக்குப் போய்விட்டதையும் சுட்டிக் காட்டுகிறது. ஒரு கிணற்றின் ஊற்றுக் கண் வழியே ஊருக்காய் நிரம்பி நின்ற நீர் போர்வெல் குழாய்க்குள் சுருங்கி, சின்டெக்ஸ் தொட்டிக்குள் அடங்கி பின்னொரு நாளில் அது சிறு குழாய்க்குள் இடம் பெயர்ந்து இளநீர் அளவாய் ஆனதைப் பேசும் கவிதையை / கைநிறைய வழிந்து கொண்டிருந்தன / வேர்நீரின் பெருமிதங்கள் / என முடித்து வைக்கிறார். உண்மையில், இப்படித்தான் நம் பெரும்பாலான பெருமிதங்கள் கடலாய், வானமாய் இருந்தது போய் நமக்குச் சொல்லவும், நாம் பிறருக்குச் சொல்லவும் கையளவாய் சுருங்கி நிற்கிறது.

தேவை என்ற ஒன்று மட்டுமே எப்பொழுதும் இயங்க வைத்தபடியே இருக்கிறது. அந்த இயக்கத்திற்கு தன்னைத் தின்னக் கொடுத்தவனின் வாழ்க்கை பற்சக்கரங்களுக்குள் சிக்கிய கசடாகிறது. நம்மில் பெரும்பாலானவர்களின் வாழ்க்கையும் பற்சக்கரங்களுக்குள்  சிக்கித் தான் கிடக்கிறது. அதில் இருந்து நம்மை விடுவித்துக் கொள்ள வழக்கமான தினங்களில் இருந்து விலகி நிற்க நினைக்கிறோம். அது அவரவர் சார்ந்ததாய் இருக்கிறது. மதுக்கோப்பையின் மயக்கமாய், பிரியாணியின் ருசியாய், புணர்ச்சியின் இயக்கமாய் கடந்து போகும் வாரக்கடைசி தினத்தின் அடுத்த தினத்திற்கான விடிதல் தன் வழக்கமான பாதையிலேயே ஆரம்பித்து விடுகிறது. இந்த ஆரம்பத்தை நம்மில் எத்தனை பேரால் விட்டு விலகி நிற்க முடிந்திருக்கிறது. முடிகிறது. “சவ்வூடு பரவல்கவிதை முடிவற்ற இந்த வாழ்வியலின் தினங்களைப் பேசுகிறது.

பிறத்தலுக்கும், இறத்தலுக்குமான இடைவெளிகளை எப்பொழுதும் நீளப்படுத்திக் கொள்ள ஆசைப்படுகின்றோம். அதை எவ்வளவு நீட்டிக்க முடியும் என்பதில் இயற்கையோடு நமக்கான பிணக்கு இன்னும் தீர்க்கப்படாமலே இருக்கிறது. ஆயினும் எதார்த்த மனநிலையில் கடந்து செல்ல இயலாத  அதைரியத்தின் அவலத்தை அழுகையாய், ஒப்பாரியாய் வெளிக்காட்டிக் கொள்கின்றோம். இவை எதுவும் இயற்கையை அசைத்துப் பார்ப்பதில்லை. மாறாக, அது / எதற்காகவோ அடிக்கத் துடிக்கும் / அவரின் பாதி துண்டிக்கப்பட்ட / வலது கையைப் போல / பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே / எஞ்சியிருக்கிறது இருத்தலின் மிச்சம் /   என துண்டிக்கப்பட்ட ஒரு உறுப்பின் பாகமாகவே பிறப்புக்கும், இறப்புக்குமான இடைவெளியை வைத்திருக்கிறது என்கிறார். அந்த இடைவெளியை நாம் எப்படி நிரப்பிக் கொள்கிறோம் என்பதில் மட்டுமே வாழ்தலின் அடையாளத் தொடர்ச்சி இருப்பதை  ”இருத்தலின் மிச்சம்கவிதை சொல்லிப் போகிறது.

கண்ணாடி அறைகளுக்குள் டாம்பீகமாய் புலப்படாத உருவங்களை, உருவகங்களை புனைந்து அலங்காரச் சட்டமிட்டிருப்பவனிடம் காட்டும் அதீத புத்திசாலித்தனத்தைக் காட்ட வேண்டாம். குறைந்தபட்ச ஆதரவுக் கரத்தையாவது சாலை ஓவியனிடம் நீட்டுகின்றோமா? அந்த ஆதரவு அவனுக்கு ஒரு பிடி அரிசியைத் தவிர வேறில்லை. ஆனாலும், அதைப் புறந்தள்ளும் மனமே நமக்கு வாய்த்திருக்கிறது. இயற்கைக்கு எப்பொழுதுமே  இப்படியான மனநிலை இருப்பதில்லை. புறந்தள்ளுவதற்கு மாறாக அரவணைக்கிறது. அந்த மனநிலையில் அது வாரி அணைக்கும் காட்சியைக் கண்ட போதும் கூட நம் மனம் இளகுவதில்லை. இளகாத மனங்களுக்காய் இந்த சாலை ஓவியன் ஏன் ஓவியம் தீட்ட வேண்டுமென நினைத்தே அதை மழை வாரிக் கொண்டதோ என நினைக்க வைக்கிறது. பிழைப்பிற்காய் வரைந்த ஓவியத்தை மழையிறங்கி கரைத்துப் போவதைக் கூட கருணையின் வெளிப்பாடாய் / ஆதரிக்கப்படாத / சாலை ஓவியமொன்றை / தன் நிறமற்ற விரல்கள் நீட்டி / வழித்துச் சேகரிக்கிறது மழைஎன நான்கு வரிகளில்மழைக்கரம்கவிதை நங்கூரமிடுகிறது.

வீதிகளில் வசிப்பவர்கள் குறித்த கவிதைபலவின் பால்”. நேரடி விவரணையோ, அத்தகைய சபிக்கப்பட்டவர்களின் வாழ்வியலோ அற்று அவர்களின் இல்லற வாழ்வினை மட்டும் கேக்கின் வெட்டப்பட்ட துண்டாய் பேசுகிறது. வால் முளைத்த ஆரவாரம்  சாலையோரங்களில் வசிப்பவர்கள் குறித்த நம்மின் வன்மமாகவும் பிரதிபலிக்கிறது. அவர்களின் வாழ்வியல் மீதான நம் இடம் எங்கே என்பதை / தன் கருணை வழியும் கரங்களில் / இருளை வழங்குகிறது / உயர்திணை மரம் / என்ற வரிகள் சொல்லி விடுகிறது. வீதியையும், வீட்டையும் சாலை மட்டுமே பிரிக்கவில்லை. நம் மனமும் தான்!

வார்த்தைஆயுதங்களைத் தரித்து சமர் செய்து விட்டு எதிர்வினையாற்ற எதுவுமற்ற நிர்கதியில் நிராயுதபாணியாய் தன் போரை ஆரம்பிக்கிறதுமெளனம்”. பல நேரங்களில், சந்தர்ப்பங்களில், சூழ்நிலைகளில் நிராயுதபாணியாய் நிற்கும் மெளனம் மட்டுமே சமாதானத்திற்கான சாரளமாக மாறி அந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவதை / வார்த்தைகளை / எய்து முடித்த பின் / நிராயுதபாணியாய் / போரைத் தொடர்கிறது / மெளனம் / என்றஊடல்கவிதை சுட்டுகிறது.

வனங்கள் பூமியின் நுரையீரல். அதைச் சுருங்கச் செய்து விட்டால் எப்படி சுவாசம் இலகுவாகும்? என்ற பிரஞ்ஞை இல்லாமல் பற்றி எரியும் நெருப்புகளுக்கு பல நேரங்களில் காரணமாக இருக்கும் நாம் அது பற்றிய அறிதலோ, புரிதலோ கொண்டிருப்பதில்லை. அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாய் அதைக் கடக்கப் பழகி விட்ட நம்மை நோக்கிபற்றி எரியும் உயிர்கவிதையில் / அப்படியென்ன நிகழ்ந்து விடப்போகிறது / ஒரு வனம் இன்னும் கொஞ்சம் எரிவதால் / ஒரு சுவாசம் இன்னும் கொஞ்சம் குறைவதால் / எனக் கேள்வி கேட்கிறார். இந்தக் கேள்வியில் இருந்தே இந்தக் கவிதையும் ஆரம்பிப்பதாய் நினைக்கிறேன். இந்த ஆரம்பத்தின் ஆதார சுருதியை உணரும் போது நம் சுவாசம் நிச்சயம் இலகுவாய் இருக்கும்.

இத்தொகுப்பின் கடைசி அறைகளை நிறைக்கும்கதவுகளின் குரல்பெண்களின் குரலாய், அவர்களுக்குள் அமிழ்ந்து கிடக்கும் ஈன சுரத்தின் சுருதியாய் நம்மை வந்தடைகிறது. ஆண் கண்டடையவும், கவனிக்கவும் வேண்டிய பெண்களின் உள்ளுணர்வின் புழுக்கத்தை அதிர்வின் சப்தமின்றி விரித்து வைக்கிறது. உதாரணமாக, “இதுவரை சொன்னதே இல்லைஎன்ற கவிதை வீடுகளில் இல்லற பந்தத்திற்குள் காண வாய்க்காத விரிசலை தெரிந்தோ தெரியாமலோ / அம்மாவைப் போல இரு என்று மட்டும் / அவள் இதுவரை சொன்னதே இல்லை / என்ற வரிகளில் கோடி காட்டுகிறது. அப்பாவின் அலட்சியங்களை பிள்ளைகளுக்குத் தெரியாமல் கடத்தும் அம்மாவின் உணர்வாக மட்டும் இதைப் பார்க்காமல் ஆண்களால் மறுதலிக்கப்படும் பெண்களின் உள்ளமாகவும் பார்க்கலாம்

படிமம் இல்லாமல் கவிதை இல்லைஎன்பார் கவிஞர் தேவதேவன். “பெயிண்ட் வாளியில் தேங்கியிருக்கும் நிலா”, “கருவேல முள்ளில் சிக்கி அலையும் கிழிந்த பழஞ்சேலைபோன்ற படிமங்கள் இத்தொகுப்பின் பல்வேறு பக்கக் கவிதைகளில் அஸ்திவாரமிட்டிருக்கின்றன. படிமங்களைப் போலவே நீள் கவிதைகளின் முடிவும், ஆரம்பமுமாய் மிளிரும் குறுங்கவிதைகளும் தொகுப்பின் கவிதைகளைக் காத்திரப்படுத்துகின்றன

பறத்தலை அளத்தல்கவிதையின் / பாவம் அந்தப் பறவைக்குபறக்க மட்டுமே தெரியும் / என்ற கடைசி இரு வரிகளும், “மறுதலிக்கப்பட்ட விடுதலைஎன்ற கவிதையின் / விரல்களெங்கும் பிதுங்குகிறது / விடுதலையின் மறுதலிப்பு / என்ற கடைசி வரிகளும்  தனித்ததொரு குறுங்கவிதைகளாய் மிளிர்கிறது. அவ்வாறே, “நல்லடக்கம் மறுக்கப்பட்ட ஆன்மாக்கள்கவிதையின் / மடி நிறைய குட்டிகளைச் சுமக்கும் / நிறைமாத கர்ப்பிணியாய் / எதிர்ப்புகளற்றுச் சுணங்கிக்கிடக்கிறது / துணையிழந்த பேருந்து நிலையம் / என்ற ஆரம்ப வரிகளும், “நிறங்களைத் தொலைத்த ஓவியம்கவிதையின் / செவ்வகக் கோடுகளால் / அண்டவெளியை வரையும் குழந்தை / பழகிப்போன வட்டப்பாதையை / கலைத்துப் போடுகிறது / என்ற தொடக்கமும் கூட மற்றுமொரு குறுங்கவிதையாகவே இருக்கின்றன. வாசிப்பின் ஊடாக கவிதையின் சரடு பிடித்து எழும் இப்படியான குறுங்கவிதைகளும், படிமங்களும் வாசிக்கும் நம்மை இன்னும் சில நொடிகள் அக்கவிதைகளில் இறுத்தி வைக்கின்றன

பார்வைகளால் ஊடுருவிப் பாய்கின்ற அனைத்தையும் கவிஞன் கவிதையாக்குவதில்லை. அதன் வழி தேர்வு செய்தல் மூலமே தன் கவிதைக்கான கருவை உருக்கொள்ள வைக்கின்றான். அதை வாசகனுக்குத் தேர்ந்த சொல்லாலும், தளர்ச்சியில்லா கட்டமைவாலும், வழமையான சொற்களற்றும் சட்டமிட்டுக் கொடுக்கும் போது அப்படைப்பு வாசகனுக்குள் தாக்கத்தை கிளர்த்துகிறது. படைப்பவனின் தவிப்பு வாசிப்பவனின் தாக்கமாக மாறுகிறதுகவிஞன் உத்தேசித்து உருக்கொடுக்கும் கவிதை வாசகனின் மடி தவழும் போது கவிஞனின் உத்தேசத்தை அது உதறித் தள்ள வேண்டும். அப்படி உதறித் தள்ளுவதற்கான சாளரங்களைக் கொண்டிருப்பவைகளே நவீன கவிதைகளாகின்றன. அப்படியான கவிதைகளே வாசகனுக்குள் புதிய திறப்புகளைத் தன் சாளரங்கள் வழி தருகின்றன. இந்தத் தொகுப்பும் உங்களின் வாசிப்பின் வழியான கடப்பில் அப்படியான ஒன்றைக் கண்டடைய வைக்கும்.

நன்றி : சொல்வனம்.காம்


1 comment: