Monday 11 May 2020

நீர்த்துப் போன இலக்கிய விமர்சனங்களும், வாசகனின் பொது அறிமுகமும்

வாங்கி வந்த புத்தகங்கள், வாசித்த புத்தகங்கள், வாசிக்க வேண்டிய புத்தகங்கள், வாங்க வேண்டிய புத்தகங்கள் என சமூகவலைத்தளங்களில் பலரும் பட்டியலிட்டு வருகின்றனர். தாங்கள் வாசித்த புத்தகங்கள் குறித்து அறிமுகங்களைச் செய்து வருகின்றனர். இப்படி நீட்டப்படும் பட்டியல்களாலும், செய்யப்படும் அறிமுகங்களாலும் என்ன பயன்? புத்தகங்களுக்கான அறிமுகங்கள் விமர்சனமாகுமா? என்ற எதிர்வினையும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நூலுக்கான அறிமுகம் என்பது வெறும் அட்டைப் படத்தை தொடர்ந்து ஒரே நிலையிலோ அல்லது பல்வேறு நிலைகளிலோ ஊடகங்கள் வழியே தொடர்ந்து பதிவிட்டு டிரண்டிங்காக மாற்றி அதன் மீது கவனத்தைக் குவிய வைப்பது. இதை படைப்பாளி தனிப்பட்ட முறையில் செய்கின்றான். அல்லது படைப்பாளியின் நண்பர்கள், பதிப்பாளர் ஆகியோர் செய்கின்றனர். சமீபத்தில் முகநூலில் ஒரு எழுத்தாளர் புத்தகக் கண்காட்சியில் தான் வாங்கிய புத்தகங்கள் என ஒரு பட்டியல் போட்டிருந்தார். சற்றே உற்று நோக்கி வாசித்த போது அந்த புத்தகப் பட்டியலில் இருந்த அத்தனை புத்தகங்களும் அவர் எழுதி வெளியிட்டவைகள். புத்தக அறிமுகத்தில் இது ஒரு வகை. இன்னொன்று படைப்பாளியின் நண்பர்கள், அல்லது சம்பந்தப்பட்ட புத்தகத்தை வாங்கி வாசித்த வாசகர்கள் அந்நூல் பற்றிய சிறுகுறிப்பை அல்லது நூலின் சில அம்சங்களை அடையாளப்படுத்தி அந்தப் படைப்பை அறிமுகம் செய்வது இன்னொரு வகை. இலக்கிய விமர்சனம் என்பது நீர்த்துப் போய் விட்ட நிலையில் இவ்விரு வகைகளில் செய்யப்படும் அறிமுகங்கள் தான் ஒரு படைப்பை தெரிந்து கொள்ளவும், புத்தக விற்பனையை தூக்கி நிறுத்தவும், பதிப்புத் துறைக்கு வரும் புதியவர்களுக்கு நம்பிக்கைக் கீற்றாகவும் இருக்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது

இலக்கிய விமர்சனங்கள் நீர்த்துப் போனதற்கும், அதன் நீட்சியாக வாசிப்பின் வழியான அக எழுச்சி மட்டுமே படைப்புகளின் அறிமுகமாக நிகழ்ந்து வருவதற்கும் விமர்சகனே முக்கியக் காரணம் என்பேன். ஒரு படைப்பின் எதிர்நிலையில் நின்று அதை அணுகுபவனாக விமர்சகன் இருந்தான். அதனால் அப்படைப்பில் நிகழ்ந்திருப்பவைகளைக் கோடி காட்டி நிகழ்ந்திருக்க வேண்டியவைகளை அவனால் சுட்ட முடிந்தது. படைப்பின் நுண்மங்களை அடையாளப்படுத்திக் காட்ட இயன்றது. படைப்பாளி தன் அடுத்த படைப்புகளில் கவனம் செலுத்த வேண்டிய விசயங்களை அந்தப் படைப்பை முன் நிறுத்தி விரிக்க முடிந்தது. தன் விமர்சனங்கள் மூலம் நல்ல படைப்புகளை கண்டடையச் செய்ய முடிந்தது. நேரமில்லை. பொருளாதர பலமின்மை என்ற இரு சிக்கல்களுக்குள் மூழ்கிக் கிடக்கும் வாசகன் சரியான படைப்புகளை அறிந்து விலை கொடுத்து வாங்கி, நேரம் ஒதுக்கி வாசிக்கச் செய்ய விமர்சகனால் முடிந்தது. அதனால் தான் அன்றைய பெரும் பகுதி படைப்புகள் விமர்சனங்களால் மகுடம் பெற்றன. இன்று அப்படியான விமர்சனங்கள் வருகிறதா? என்பது விவாதத்திற்குரிய மிகப்பெரிய கேள்வி

கால சுழற்சியில் படைப்பைப் புறந்தள்ளி படைப்பாளியை முன்நிறுத்துவதில் விமர்சகன் கொண்ட கவனம் விமர்சனத்திற்கான அத்தனை கட்டமைவுகளையும் உடைத்தெறிந்து விட்டது. எழுத்தாளனின் தனிப்பட்ட, அந்தரங்கங்களே படைப்பின் மீதான விமர்சனமாக வெளிவர ஆரம்பித்தன. படைப்பின் தரம் தவிர்த்த எல்லாவற்றையும் தனக்கான கருவியாக விமர்சகன் கைக் கொள்ள ஆரம்பித்தான். விமர்சகன் துரதிருஷ்டவசமாக படைப்பாளியாகவும் இருந்து விடுவதால் தன் படைப்பை முன் நிறுத்தும் நோக்கில் பிற படைப்பின் மீது தட்டையான விமர்சனங்களை முன் வைக்கின்றான். அல்லது பாசங்கற்ற விமர்சனத்தில் இருந்து ஒதுங்கிக் கொள்கின்றான்.  தனக்கென ஒரு வாசக வட்டத்தை, குழுவை உருவாக்கி அதன் மூலம் தன் படைப்பை விற்பனைச் சந்தையில் ஓட வைக்கச் செய்வதில் அவனுள் எழும் பெரும் ஆர்வம் அவனுக்கிட்ட பணியிலிருந்து மெல்ல விலகிக் கொள்ள வைத்தது.

உள்ளூர் இலக்கிய அரசியல், சிற்றிதழ், வர்த்தக இதழ் இவைகளால் கட்டமைக்கப்படிருக்கும் இலக்கிய அளவுகோல்கள், அயலகங்களில் உரை நிகழ்த்த, இலக்கிய விழாக்களில் பங்கெடுக்கச் செல்லும் படைப்பாளிகள் அப்படியான பயணங்களைத் தொடர ஏதுவாக ஒரு சில இலக்கிய அமைப்புகள் சார்ந்த  வெளியீடுகளை குறையற்ற நிறையாய் மகுடம் சூட்ட வேண்டிய அவசியம் போன்ற பல்வேறு காரணங்களால் விமர்சகன் தனக்குத் தானே சில ஒப்புதல்களைக் கொடுத்துக் கொண்டதன் விளைவு, விமர்சகனைவிமர்சனங்களை சாதாரண வாசகன் புறந்தள்ள ஆரம்பித்தான். தனக்கான சாதகங்கள் என்ற ஒற்றை விருப்பக்குறியோடு  “விமர்சகன்என்ற போர்வைக்குள் அவர்கள் ஒளிந்து கொள்வதை நாளடைவில் வாசகனே கண்டுணர்ந்து கொண்டான். விமர்சகன் சுய உணர்வோடு நிகழ்த்துகின்ற இலக்கியக் கள்ள உறவில் தன்னை நுழைத்துக் கொள்ள விரும்பாத வாசகன் தன்னுடைய தேடலின் வழியே சிறந்த, வாசிக்கத் தகுந்த, விருப்பமான படைப்புகளை கண்டடையத் தொடங்கினான். அந்த தொடக்கம் இன்று தோரணமாகி நிற்கிறது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். இந்த உறுதிக்கு உதாரணமாய் விமர்சகனால் அறிந்தோ, அறியாமலோ கவனிக்காது விடப்பட்ட அல்லது விமர்சனங்களுக்கான கோருதல் கொண்ட பல படைப்புகளை வாசகன் தன் வாசிப்பின் வழியாக விமர்சனமற்ற பொது அறிமுகம் மூலமாக விரிவான வாசிப்புப் பரப்பிற்கு கொண்டு வந்ததைச் சொல்லலாம்.

எந்த முன் முடிபுமின்றி ஒரு புத்தகத்தை வாசிக்கும் போது அது இயல்பான மனநிலையை கிளறிக் கொண்டே இருக்கும். அந்தக் கிளர்ச்சி அடங்க சில மணிநேரம் ஆகலாம் அல்லது வருடங்கள் ஆகலாம். இந்த அகவெழுச்சியானது வாசித்த படைப்பின் மீதான தாக்கத்தை வெளிப்படுத்த தூண்டிக் கொண்டே இருக்கும். தூண்டலின் தீவிரத்தால் தனக்கு வாய்த்த அத்தனை ஊடகங்கள் வழியாகவும் வாசித்த நூலின் மீதான தாக்கத்தை பொது வெளிக்கு வாசகன் கொண்டு வருகின்றான். இதைவிமர்சனம்என பொதுவாக அடிக் கோடிட்டாலும் அவை முழுமையான விமர்சனமல்ல என்பதையும் மறுப்பதற்கில்லை

மிகச்சரியான விமர்சனம் என்பது ஒப்புமைகளால் நிகழ வேண்டும். , நோக்கு அடைப்படையில் தன் கருத்தை முன் வைத்து விவாதிக்கத் தூண்ட வேண்டும். இது நிகழ நீண்ட, தொடர் வாசிப்பு அனுபவம் இருத்தல் அவசியம். வெவ்வேறு களம், வெவ்வேறு நடை, மாறுபட்ட யுக்தி, படைப்பை முன் நகர்த்தும் திறன், வாசகன் எதிர் வினை புரிய கொடுக்கப்பட்டிருக்கும் இடைவெளி, முன்னத்தி ஏராய் நிற்கும் படைப்புகளில் இருந்து மாறுபட்டு நிற்கும் தன்மை, சமகாலச் சூழலோடு படைப்பு நிரல்படும் தன்மை, முன்முடிபுகளை கட்டுடைத்திருக்கும் விதம் எனப் படைப்புகளில் நிகழ்த்தப்படும் அத்தனை சாத்தியங்களையும் அடையாளம் கண்டுணரும் வாசிப்பு நுணுக்கம் இருக்க வேண்டும். வாசிப்பிற்குப் பிந்தைய மனநிலையைச் சமூகவலைத்தளங்களில் பதிவிடும் இன்றைய வாசகர்களில் பெரும்பாலானோர் தனக்கு முந்தைய தலைமுறை படைப்புகளை வாசித்திராதவர்களாகவே இருக்கின்றனர். இவர்களிடமிருந்து ஒப்புமை நோக்கிலும், மேற்சொன்ன வாசிப்பு நுணுக்க அடிப்படையிலும் விமர்சனங்களை எதிர்பார்க்க இயலாது. இதைப் பற்றியெல்லாம் வாசகன் எந்த கவலையும் கொள்வதில்லை.

விமர்சனத்திற்கான அளவீட்டுக் கருவிகளை பயன்படுத்தும் திறனற்ற நிலையில் இருந்த போதும் தான் வாசித்த படைப்பை தன்னளவில் மற்றவர்கள் முன் வைக்கின்றான். தன் வாசிப்பின் மீதான எண்ணக்குவியல்களாய் அவன் தரும் அறிமுகம் என்பது அந்த நூல் நோக்கி மற்றவர்களை அழைத்து வர வைக்கிறது. படைப்புகளை தேக்க நிலையில் இருந்து வாசிப்பு நிலைக்கு நகர்த்துகிறது. பலரும் பேசுகிறார்களே என்ற ஒரே காரணத்திற்காக நான் வாங்கியிருக்கும் புத்தகம் என முகநூலில் எழுதப்படும் பதிவுகள் பொது அறிமுகம் மூலமாகவே பல புதியவர்களின் படைப்புகள் வாசக வீதிகளில் இறங்குகின்றன என்பதை தெளிவாக்கிப் போகின்றன. நூல்கள் பொது அறிமுகத்தை செய்ய இன்றைய விமர்சகனை விட வாசகன் மிகுந்த தகுதியுடையவனாகவே இருக்கின்றான் என்பதற்கு உதாரணம், ”தான் அறிமுகப்படுத்தும் படைப்பை / நூலை / தொகுப்பை/ முழுமையாக வாசித்தவனாக இருக்கின்றான்”. இது ஒன்று போதாதா?

நன்றிகணையாழி மாத இதழ்

 


No comments:

Post a Comment