Wednesday 6 May 2020

எதிர்சேவை - மண் வாசம்!

பரிவை சே. குமாரின் முதல் சிறுகதைத் தொகுப்பு “எதிர் சேவை”.  கலக்கல் ட்ரீம்ஸ் வெளியீடான இத்தொகுப்பில் மொத்தம் 12 கதைகள் உள்ளன.  இத்தொகுப்பின் சில கதைகளை இதழ்கள், வலைப்பூக்கள் வழியாக வாசித்திருந்த போதும் தொகுப்பாக வாசிக்கும் போது கிடைத்த வாசிப்பனுபவம் வேறானது. ”அப்பாவின் சட்டை”, ”அப்பாவின் சைக்கிள்” என வாசித்திருந்த கதைகள் வரிசையில் “அப்பாவின் நாற்காலி” என்ற தலைப்பை பார்த்ததும் அந்தக் கதை ஈர்ப்பைத் தந்தது. அப்பாவிற்கு விருப்பமான ஒரு நாற்காலியைப் பற்றிப் பேசும் அந்தக் கதையினுள் மெலிதாய் ஓடும் சாதிய ஏற்றத்தாழ்வு பற்றிய சமூக சிந்தனை தான் அந்தக் கதையை தூக்கி நிறுத்துகிறது. சாதியப் பாகுபாடெல்லாம் அப்பா காலத்தோடு போய்விட்டது என்பதை பூடகமாய் சொல்லும் முகமாக அவருக்குப் பின் அவருடைய நாற்காலியும் ஒதுங்கிக் கிடக்கிறது “அப்பாவுடையது” என்ற அடைமொழியோடு என்ற கதையின் முடிவு அந்தக் கதையின் தொடக்கப் பக்கங்களை மீண்டும் வாசிக்கத் தூண்டுகிறது.

கள்ளழகரின் எதிர்சேவை வழியேயான அழகான காதல் கதை “எதிர் சேவை”. அண்ணனுக்குப் பெண் பார்க்க வந்த இடத்தில் பெற்றோர்க்குத் தெரியாமலே மாமன் வீட்டில் மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுக்கும் அகிலாவும், அதை நாசுக்காய் கண்டு தன் அண்ணனுக்குப் பகடி காட்டும் கவிதாவும் கதை நகர்வைச் சுவராசியமாக்குகிறார்கள். எதிர்சேவையில் நிகழும் கவிதாவின் விருப்பத்தை நம்மாலும் யூகிக்க முடிகிறது.

உடன் பிறந்த உறவு என்றாலும் பணம் சார்ந்தும், வசதி சார்ந்தும் மாறிவிட்ட நிலையில் கிராமங்களில் மட்டுமே அது அன்பு சார்ந்ததாய் இருக்கிறது. அந்த அன்பை அண்ணன், தங்கை மூலமாக மீட்டுருவாக்கம் செய்கிறது “ஜீவ நதி” கதை. பொறுப்பற்ற கணவனால் பெண் வதைபடுவதை, வறுமையின் அடர்த்தி முன் அன்பின் அடர்த்தி குறையாமல் இருப்பதை, வறுமையின் துயரங்கள் அன்பினால் வீழ்வதை இக்கதை பேசுகிறது.

குடும்ப உறவுகள் தடம் மாறுவதால் உடைபடும் அந்நியோன்யம் குறித்துப் பேசும் “குலசாமி” கதை கணவன் – மனைவி, அப்பா – மகள் என்ற இரு சரடுகள் வழியே ஒரு முனை நோக்கி நகர்கிறது.  கணவன் – மனைவிக்கிடையே காலப் போக்கில் நிகழும் மனமாற்றங்கள் மட்டுமல்ல அதை நிகழ்த்தும் கதை மாந்தர்களும் எதார்த்தமானவர்களாக இருக்கின்றனர். கதையின் ஆரம்பத்தில் வரும் பெற்றோர் – பிள்ளைகள் குறித்த பொதுவான தகவல்களைத் தவிர்த்திருக்கலாம். குலசாமியின் தொடக்கத்தை இந்த விவரணைகள் நீர்த்துப் போகச் செய்து விட்டது. முடிவைப் போலவே கதையின் ஆரம்பமும் முக்கியம்.

வாசிக்கின்றவனின் இளமை காலத்திற்குள் கொஞ்சம் கால் நனைத்து வர வைக்கும் “மனத்தேடல்” கதையை வாசிக்க, வாசிக்க ஒரு குறும்படக் காட்சியாய் அது மனதிற்குள் விரிகிறது. இந்தத் தொகுப்பில் இருக்கும் சிறந்த கதைகளில் இதுவும் ஒன்று. சிறந்த குறும்படம் ஒன்றை பார்த்த நிறைவை வாசிப்பாலும் தர வைக்க முடியும் என்பதற்கு இந்தக் கதை உதாரணம்.

ஊர் ஊராகச் சென்று ஆடுமேய்க்கும் கோனார்கள் வாழ்வியலின் ஒரு கூறை அவர்களின் வட்டார மொழியிலேயே ”வெள்ளாடும், செம்மறி ஆடும்” கதை பேசுகிறது. கதையின் பலமும் இது தான். கிடைபோடும் இடங்களில் அக்குடும்ப ஆண்கள் படும் இடர்கள் மனம் சார்ந்தும், பெண்கள் படும் பாடு உடலும், உணர்வும் சார்ந்து அமைவதை விரசமின்றி விரிக்கிறது. கதையின் முடிவை எட்டுவதற்கு முன்பே இப்படித்தான் அமையக்கூடும் என யூகித்து விடக்கூடிய முடிவையே கதை கொண்டிருந்த போதும் அதற்கான களமொழியில் சொல்லியிருப்பது அந்த முடிவை புறந்தள்ளி விட்டு இரசிக்க வைக்கிறது.

வாய்ப்புகள் என நம்பும் எது ஒன்றையும் தனக்காக வளைப்பது ஆண்களின் குணம். அந்த எண்ணம் உள்ள கணவனுக்கு தோழியாய், மனைவியாய் வரும் இரு பெண்கள் வழியே பெண்ணிய உணர்வையும், ஆண்களின் மனநிலையையும் சொல்லும் கதை ”என்னுயிர் நீதானே”. காமத்தின் வழியே காதலையும், நட்பையும் கண்டடையும் ராகவ் நம்மையும் அவருக்குள் இறுத்திக் கொள்கிறார்.

விவசாயத்தின் நிலை குறித்து முதுமைக்கும், இளமைக்குமான உரையாடலாக, இயற்கையின் கை விரிப்பு, அரசியல்வாதிகளின் புறக்கணிப்பு என கதை மாந்தர்களின் சொல்லாடலில் கிளை பரப்பும் “விரிவோடிய வாழ்க்கை” கதை விவரணை உரையாடலால் பலவீனமடைகிறது. கதைகளை சமகால நிகழ்வுகளின் வழியாக கட்டமைக்கும் போது ஏற்படும் அபாயத்தை இந்தக் கதை தொட்டிருக்கிறது. கதை என்ற தளத்தில் இருந்து இறங்கி வெறும் தரவுகளாக மட்டுமே  நிரம்பி நிற்கிறது.

ஒரே இரசணை கொண்ட இரு மனங்கள் இல்லறத்தில் இணைதல் என்பது எல்லோருக்கும் வாய்க்காத ஒன்று. அதுவும் இலக்கிய நேசர்களுக்குக் கேட்கவே வேண்டாம். “நேசத்தின் ராகம்” கதைக் களம் அப்படியான ஒன்று. இந்த சமூகத்தின், உறவுகளின் பார்வை என்பது ஒரு பொதுப் புத்தி தன்மையாக இருக்கும். அதைத் தாண்டிய பார்வைக்கு ஒரு இரசணை வேண்டும். அந்த இரசணை இந்தக் கதையில் இலக்கிய இரசணையாய் அப்பா – மகள் என்ற உறவோடு நிறைவடைகிறது. இந்தக் கதை இப்படியான கதைக் களத்தில் வாசித்திருந்த சில கதைகளை எனக்குள் மீண்டும் அசைபோட வைத்தது.  ஒரு படைப்பின் வெற்றி என்பது அது நம் மனநினைவுகளுக்குள் முன்னோ, பின்னோ நகர்த்திச் செல்ல வேண்டும். அந்த நகர்வை இந்தக் கதை செய்கிறது.

”நினைவின் ஆணிவேர்” கதை தன் நினைவுகளை மீட்டெடுக்கும் முயற்சியில் அம்மா – மகளுக்கிடையேயான உணர்வின் செய்கைகளை வார்த்தைகளால் விவரிக்கிறது. வலிந்து இழுக்காத மொழியின் கையாளல் கதை வாசிப்பை இயல்பானதாக்குகிறது. அக்ரஹாரத்து மொழியும், சாதாரண மொழியும் அழகாய் இணைந்து பயணிக்கிறது. கதை நகர்வில் “சென்னை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது அந்த சிகப்புக் கலர் ஸ்கார்பியோ. ராமகிருஷ்ணன் காரை ஓட்டிக் கொண்டிருக்க முன் இருக்கையில் பழனி அமர்ந்திருந்தான். பின்னிருக்கையில் அபிராமி படுத்திருந்தாள்” என்று வரும் பத்தி வேகத்தடையாய் மாறி அதுவரை கதை சொல்லி வந்த முறையில் இருந்து நழுவி அடுத்த பத்தியில் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புகிறது. 

வீட்டு வேலை செய்யும் பெண் தீபாவளியைக் கொண்டாட தன் வீட்டிற்கு வர நினைக்கிறாள். தீபாவளிக்கும், அதற்கு முந்தைய நாட்களுக்குமாய் அவளுக்குள் நிரம்பித் தளும்பும் நினைவுகள், ஆசைகள், விருப்பங்கள், வேட்கைகள் பற்றி சொல்லும் கதை “தீபாவளிக் கனவு”. தீபாவளி தினத்திற்காய் காத்திருக்கும் அப்பெண்ணிடம் சூழ் கொண்டிருந்த அத்தனை நினைவுகளையும் சூறாவளியாய் அடித்துப் போக வைத்த  கதையின் முடிவு வாசக யூகிப்பைத் தாண்டி நம் மனதோடு ஒன்றுகிறது. இனி வரும் பண்டிகை நாட்களில் தன் வீடு துறந்து வேலை செய்யும் பெண்களை, சிறுமிகளைக் காணும் போதெல்லாம் இந்தக்கதையும் நினைவில் வந்து போகும்.

சாதியைத் தன் தோள்களில் சுமந்து திரியும் மனிதர்கள் பற்றி பேசும் “வீராப்பு” கதை வட தமிழகத்து வன்முறைகளை நினைவுபடுத்துகிறது. சாதியின் வீராப்பில் மனங்களைக் கொள்பவர்கள் அதற்காகக் கொடுக்கும் இழப்புகளையும், அது தரும் வலிகளையும் பெரிதாக உணர்வதில்லை. அதை எவரேனும் மனம் வலிக்கச் சுட்டும் போதோ, நரையின் வழியேயான அனுபவம் கொடுக்கும் போதோ அவர்களின் அத்தனை வீராப்புகளும் உதிர்ந்து போய்விடுகிறது என்பதில் கதை முடிகிறது.

மாறுபட்ட கதைக் களம், அதற்கேற்ற கச்சிதமான மொழி நடை, வட்டார வழக்கு பிறழாத உச்சரிப்பு, வார்த்தைகளை வெறும் சொற்களால் நகர்த்தாமல் காட்சிகளால் விரிய வைக்கும் விதம், சறுக்காத சொல்லாடல் என கதைகளைத்  தூக்கிப் பிடிக்கும் பல விசயங்களால் இத்தொகுப்பு நம்மோடும், மனதோடும் நெருங்கி நிற்கிறது. 

வாசிப்பிற்கு சிரமம் எழாத வகையில் எழுத்தின் அளவை (FONT SIZE) இன்னும் சற்று கூடுதலாக்கி இருக்கலாம்.  தவிர, தொகுப்பில் பரவலாக விரவிக்கிடக்கும் ஒற்றுப் பிழைகள், கதைக்கு ஒட்டாமல் ஒட்டி வரும் விவரணைகளைத் தவிர்த்தல், ”புல்லானாலும் புருசன்”, ”கிளியை வளர்த்து பூனை கையில்” போன்ற அறிந்தவைகளையே அறியத் தராது இருத்தல், வாசக யூகிப்பிற்குச் சாத்தியமற்ற அதேநேரம் வாசகனுக்குள் ஒரு அதிர்வைத் தரக்கூடிய முடிவைக் கண்டடைதல் ஆகிய விசயங்களில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.  இதில் செலுத்தும் கவனம் கதைகளை வாசகன் சட்டெனக் கடந்து செல்லாத வகையில் அவனைத் தேக்கி வைப்பதோடு படைப்பின் மீதான கவனத்தையும் கூடுதலாக்கித் தரும்.

பரிவை சே. குமாரை அடையாளப்படுத்தக்கூடிய பல கதைகள் இத்தொகுப்பில் இருக்கின்றது. அந்த இருத்தல் கதைத்தளத்தில் அவரின் இறுப்பையும், நம் வாசிப்பையும் கொண்டு செலுத்தும். 

நன்றி – புத்தகம் பேசுது (bookday.co.in)


1 comment: