Thursday, 18 February 2016

குறுக்குக் கோடு குணாவும், நாள்காட்டியும்

ஒரு விபத்து போலத் தான் அது நடந்தது என்று கேட்டும், வாசித்தும் அறிந்திருந்த குணா அதன் உள்ளார்ந்த பொருளை இப்போது உணரவும் தொடங்கி இருந்தான். தலையணையின் அருகில் வைத்திருக்கும் நாள்காட்டியில் வேலைக்குச் செல்லும் தினங்களைக் குறுக்குக் கோடிடுவது அவனின் வழக்கம். அதனாலயே ”குறுக்குக் கோடு குணா” என்ற பட்டப் பெயரில் அழைக்கப்பட்டான். கடந்த மூன்று நாட்களாக நாள்காட்டியில்  குறுக்குக் கோடிட முடியாமல் போனதை அவனின் துரதிருஷ்டம் என்றே சொல்ல வேண்டும்.

பணிமனையில் கப்பலின் மேல் தளத்தில் அவனோடு வேலை செய்து கொண்டிருந்தவன் கால் இடறி கடலுக்குள் தவறி விழுந்தும் அவனைக் காப்பாற்றுவதற்காக இவனும் கடலுக்குள்  குதித்தான். அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளும், மீட்பு நடவடிக்கைகளுக்கான அதிகாரிகளும் அவ்விருவரையும் கரைக்குக் கொண்டு வந்தனர். முதலுதவிகள் முடிந்ததும் ”நண்பேண்டா” என மற்றவர்களின் பாராட்டுப் பூரிப்பில் நின்று கொண்டிருந்த குணாவிடம் பாதுகாப்பு அதிகாரி நாளை பணிமனைக்குச் செல்லாமல் என் அலுவலத்திற்கு வந்து விடு என்று சொன்ன போது தான் ஏதோ தவறாகி விட்டது என அவனுக்குத் தோன்றியது.

மறுநாள் அங்கு சென்றதும் இருக்கையில் அமரச் சொல்லி அவனின் அடையாள அட்டையை வாங்கி விபரங்களைக் குறித்துக் கொண்டவர் ”கடலில் குதிக்க உனக்கு யார் அனுமதி அளித்தது? என்றார்.

நானே தான் குதித்தேன்.

அவன் கடலில் விழுந்ததைப் பார்த்ததும் நீ பாதுகாப்பு அதிகாரிகளைத் தானே அழைத்திருக்க வேண்டும்?

அந்த நேரத்தில் எதுவும் யோசிக்கத் தோனல, நீச்சல் தெரியுங்கிறதாலா குதிச்சிட்டேன்.

நீச்சல் தெரியும் என்பதற்காகக் கடலுக்குள் குதித்து விடுவாயா? என்ற அவரின் கேள்விக்கு அவனிடம் எந்த பதிலும் இருக்கவில்லை.  வேலைக்குச் செல்ல முடியாமல் போனதால் ஏற்பட்ட  மனஉளச்சலினால் அன்றைய இரவு அவனுக்கு மட்டும் பகலாகிக் கொண்டிருந்தது.  

அடுத்த நாள் விசாரணையின் போது, ”நான் அவனைக் காப்பாத்துறதுக்காகக் கடலில் குதிச்சது தப்பா சார்? என்ற அவனின் கேள்விக்கு “ஆம்” என்று பாதுகாப்பு அதிகாரி சொன்ன பதிலைக் கேட்டு அதிர்ச்சியடைந்தான்.

அவன் கடலில் தவறி விழுந்தது விபத்து. அவனைக் காப்பாற்றுவதற்காக நீ குதித்தது முட்டாள்தனம். அசம்பாவிதமாக ஏதாவது நிகழ்ந்து உன்னுடைய உயிருக்கு ஆபத்தாகியிருந்தால் அது எவ்வளவு சிக்கலை உருவாக்கி இருக்கும் என்று தெரியுமா?  உன்னோடு வேலை செய்பவர்கள், வேலையிட அதிகாரிகள்,, உனக்கு வேலை தந்த நிறுவனம் என எல்லோருக்குமே பெரும் பிரச்சனையாகி இருக்கும், இவை எல்லாவற்றையும் விட எங்களுக்கு உயிர் முக்கியம்.  நீ செய்தது மன்னிக்க முடியாத செயல் என்றார் கடுமையான குரலில்.

அன்றிரவு மேற்பார்வையாளர் அவனிடம் தந்த கடிதத்தில் பதினைந்து நாட்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாய் அறிவிக்கப்பட்டிருந்தது. மனவருத்தத்தோடு இருந்தவனிடம் “சம்பளம் போச்சேன்னு வருத்தப்படாதீங்க, பணத்தை எப்ப வேணுனாலும் சம்பாதிச்சுக்கிடலாம். இதுவும் நல்லதுக்குன்னு நினைச்சுக்கங்க” என்று அவன் மனைவி கூறிய வார்த்தைகள் ஆறுதலைத் தரக் குறுக்குக் கோடிடாமல் கீறலின்றி வெண்மையாய் இருந்த நாள்காட்டியின் பக்கங்களையே வெறித்துப் பார்த்தபடி இருந்தான். அது தன்னைப் பார்த்து புன்னகைப்பதாகவே அவனுக்குத் தெரிந்தது.

நன்றி : தமிழ்முரசு நாளிதழ்