அம்மாவின் வார்த்தையை மீற முடியாமல் தாலி கட்டி விட்டதாகவும், அறிமுகப்படுத்தும் அளவுக்கு அழகுடையவள் இல்லை என்றும் திருமண வரவேற்பில் தன் காது பட நண்பர்களிடம் வெளிப்படையாக கணவன் பிரபு கூறியதைக் கேட்டு வருத்தப்பட்டாலும் அதில் இருந்த எதார்த்தத்தை உணர்ந்தவளாய் அவனோடு குடும்பம் நடத்துகிறாள் சந்திரிகா. தன் மீதான வெறுப்பை வன்மமாய் குழந்தையின் மீது அவன் காட்டிய போதும் சகித்துக் கொள்கிறாள். பொய்த்துப் போன எதிர்பார்ப்புகளோடு மட்டுமேயான வாழ்க்கையிலும் தன் கணவனை மனதார நேசிக்கும் சந்திரிகா அவனின் பொய்யான வார்த்தைகளால் எடுக்கும் முடிவை மனித இயல்புகளின் மெல்லிய உணர்வுகளோடு கடிதம் வடிவில் சொல்லும் கதை ”ஆசையின்றி ஒர் கடிதம்”. உத்தம சோழனின் ”மனிதத் தீவுகள்” என்ற தொகுப்பில் இக்கதை இடம் பெற்றுள்ளது
”நான் உங்களுக்குப் பிடிக்காதவள் தான். ஆனாலும் நானும் ஒரு மனுஷி தானே. எனக்கென்றும் ஒரு மனசு….அதற்கென்றும் சில ஆசைகள் இருக்கும் தானே….அதைப்பற்றி எப்பொழுதாவது யோசித்திருப்பீர்களா?” என்ற சந்திரிகாவின் வரிகளின் மூலம் அவளுக்கும், அவள் கணவனுக்குமான இடைவெளியையும், பல குடும்பங்களில் மனைவி என்ற நிலையில் இருக்கும் பெண்களின் மனவலியையும் ஆசிரியர் சமதளத்தில் காட்டி விடுகிறார்.