Tuesday, 27 April 2021

தமிழகப் பாளையங்களின் வரலாறு

பாளையக்காரர்கள் எப்படிப்பட்டவர்கள்? அவர்களுடைய ஆட்சி முறை எப்படி இருந்தது? வரி வசூலித்து, சட்டம் அளிக்கும் பொறுப்பில் இருந்த பாளையக்காரர்கள் வரிகட்ட மறுத்தது எப்படி? தமிழகப் பாளையங்கள் குறித்த விவரங்களை எல்லாம் திரட்டி, விறுவிறுப்பாக எழுதப்பட்டிருக்கும் புத்தகம் இது.  

“தமிழகப் பாளையங்களின் வரலாறு” இரண்டு நூற்றாண்டு தமிழக வரலாறு என்றும் சொல்லலாம்.

- தினமணி - கலாரசிகன்.

Monday, 26 April 2021

இஸ்லாம் கற்றுத்தரும் வாழ்வியல்

2003 ம் ஆண்டு முதல் பதிப்பு வெளிவந்தது. தமிழக நூலகங்களுக்குத் தேர்வானதாலும், ஒரு இஸ்லாமிய நண்பர் அவருடைய திருமணத்திற்குத் தர மொத்தமாக 500 பிரதிகளை வாங்கிக் கொண்டதாலும் பொது விற்பனைக்கு இந்நூலை கொண்டுவர முடியாமல் போனது. அதன் பின்னர் நூலுக்கான தேவை இருந்த போதும் பதிப்பு சார்ந்த விபரங்கள் அப்போதைக்கு தெரியாமல் இருந்ததால் சுய முயற்சி செய்து பார்ப்பதில் தயக்கம் இருந்தது. ஒரு பதிப்பகம் அச்சு வடிவில் மீண்டும் கொண்டு வருவதற்கான விருப்பத்தைச் சொல்லி இருக்கிறது. கொரானா காலகட்டத்தில் சாத்தியமா? என்பது தெரியாத நிலையில் கிண்டிலில் 18 ஆண்டுகளுக்குப் பின் அதை மறு பிரசுரம் செய்வதற்கான வாய்ப்பு அமைந்தது. நூலினை இங்கே சென்று வாங்க முடியும். கிண்டில் பதிப்பிற்காக எழுதப்பட்ட முன்னுரை அந்நூல் சார்ந்த புரிதலை உருவாக்கும் என நினைக்கிறேன்.

Saturday, 24 April 2021

கபடவேடதாரி - விமர்சனப்போட்டி -2

                                       அத்தியாயம் – 2 (மிதக்கும் நகரம்)

தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிரான யுத்தமாக தண்டனைக்காக தன்னைக் கொண்டு செல்லும் மரணக் கப்பலில் இருந்து தப்பிக்க வேண்டுமென சூனியன் நினைக்கிறான். அதற்கான வாய்ப்புகளை தேடுகிறான். தன்னைப் போல நிலக்கடலை ஓட்டிற்குள் அடைபட்டு வரும் கைதிகளை புரட்சிக்குத் தூண்டலாமா? என மானிடர்களைப் போல திட்டமிடுகிறான். அதற்கெல்லாம் வாய்ப்பில்லை என்பதைப் போல சூனியனின் உடலில் காவலரால் பனிக்கத்திகள் இறக்கப்படுகின்றன. சாதாரண குளிரே தனக்கு ஒவ்வாது என்ற நிலையில் இரண்டு பனிக்கத்திகளை தன் உடல் தாங்கி நின்ற போதும் தன் பக்க நியாயத்தை நிலை நிறுத்த “தப்பித்தல்” மட்டுமே அவனுக்கான ஒரே வழியாய் இருக்கிறது.

Friday, 23 April 2021

எனக்கு வாசிப்பு எதைத் தந்தது ?

இன்றைய புத்தக தினத்தில் ஒரு படைப்பாளியாய் எங்கிருந்து கிளம்பி இருக்கிறேன் என்று நினைத்துப் பார்க்கிறேன். பள்ளி, கல்லூரி நாட்களில் பாடப் புத்தகங்களே  வாழ்க்கையாக இருந்தது. யாரும் நுழைய அஞ்சும் கல்லூரி நூலகத்திற்குச் சென்று வைரமுத்து, மு. மேத்தா, கவிக்கோ உள்ளிட்டவர்களின் புதுக்கவிதைத்  தொகுப்புகளை எடுத்து வந்து வாசித்து அப்படியாக சிலவற்றை எழுதிப் பார்த்து புழங்காகிதப் பட்டுக் கொள்வதுண்டு. அந்த சமயத்தில் வாசித்த ஒரு கவிதை புத்தகம் ஒரு தூண்டலைத் தர நாமும் கவிதை எழுதியே தீர வேண்டும் என்ற வெறியோ, வேட்கையோ அடங்க மறுத்து பொங்கி நின்றது. அடுத்த ஒரு மாதத்திற்குள் எழுதி “விந்தை மனிதன்”  என காந்தியின் அட்டைப் படத்தோடு ஒரு தொகுப்பைக் கொண்டு வந்து கல்லூரி நண்பர்களிடமும், உறவினர்களிடமும் கவிஞனாக முடி சூட்டிக் கொண்டேன். 1999 ல் இந்த அலப்பறை எல்லாம் முடிந்தும் இன்னும் கவிதை எழுதுவதும், புரிந்து கொள்வதும் பிடிபடவில்லை.