வரலாற்று நூல்கள் பிடித்த புத்தகங்களாக அப்போது இருந்தன. அதுவும் மொகலாய படையெடுப்பு, சுல்தான்களின் படையெடுப்பு, விஜயநகரப் பேரரசு, சேர, சோழ, பாண்டிய வரலாறு, கலிங்க யுத்தம் என தேடித் தேடி வாசிப்பேன். வாசித்துக் கொண்டிருக்கையிலேயே அதில் வரும் சண்டைக் காட்சிகளை அப்படியே கற்பனையாக மனதில் ஓட்டிப் பார்ப்பதில் அலாதி பிரியம் இருந்தது. ஆங்கிலம் உள்ளிட்ட மற்ற நூல்கள் பக்கம் எல்லாம் தலை வைத்துப் படுப்பதில்லை.
வார இதழ்கள், தீபாவளிமலர்கள், சிறப்பு மலர்கள் அனைத்தையும் வாங்கி வாசித்ததில் புதுக்கவிதைகளுக்கு அடுத்த வடிவிலான கவிதைகள், கதைகள் படிக்கும் பழக்கம் வளர்ந்தாலும் பெரிய இலக்கிய பரிட்சயம் ஏதும் கிட்டவில்லை. கவிதையாய் வாசித்திருந்தவர்களின் கட்டுரைகள் நூலகங்கள் மூலம் வாசிக்கக் கிடைத்தது. கல்லூரியை விட்டு வெளியேறி வந்த சமயத்தில் அப்துல்ரஹிமின் தன்னம்பிக்கை புத்தகத்தை நண்பர் கொடுத்தார். அந்த சமயத்தில் அது புதுவித வாசிப்பைக் கொடுத்தது. எம்.எஸ்.உதயமூர்த்தி, மெர்வின், கணேசன் போன்றோர் எழுதிய நூல்களை வாசித்ததோடு நூலக அடுக்குகளிலும் நிரப்பி வைத்தேன். அது தந்த உந்துதலில் தினபூமி இதழில் இரண்டு தொடர்களை எழுதினேன். ஆசை யாரை விட்டது? நாமும் தன்னம்பிக்கை நூலை எழுதினால் என்ன? என்ற எண்ணம் கிளம்ப முதல் புத்தகத்தை எழுதி வெளியிட்டேன். பத்திரிக்கை விமர்சனம், கையை பிடிக்காத விற்பனை என நகர்ந்ததால் அதில் தொடரும் எண்ணம் இருந்தது. அதிகம் விற்பனையாகும் நூல்களில் ஆன்மிக, கோல புத்தகங்களோடு தன்னம்பிக்கை நூல்களும் இருந்ததால் பதிப்பாளர்களும் தொடர்ந்து எழுதக் கேட்டனர். இதுவரை நான்கு நூல்கள் வெளிவந்திருக்கும் நிலையில் இரண்டு அச்சுக்கு போயிருக்கிறது. கண்ணதாசன் நூல்களை வாங்குவதற்காக கண்ணதாசன் பதிப்பகத்திற்குச் சென்றிருந்த சமயத்தில் தன்னபிக்கை நூல்களை எழுதிய அமெரிக்க எழுத்தாளர்களின் தமிழ் மொழிபெயர்ப்புகளை கண்டடைந்தேன். எம்.ஆர். காப்மேயர், சிவ்கேரா, நார்மன் வின்செண்ட் பீல் என ஒரு பெரும் பட்டியல் நீண்டது.
பதிப்பாளரைச் சந்திக்கச் சென்றிருந்த சமயத்தில் ஆன்மிகப் புத்தகங்கள் பற்றிய பேச்சினூடே சுகி.சிவத்தின் சில நூல்களை இலவசமாக வாசிக்கக் கொடுத்தார். அங்கிருந்து ஆன்மிக வாசிப்பு பயணம் ஆரம்பமானது. நூலகங்களில் ஆன்மிக கதை நூல்கள் பஞ்சமின்றி வாசிக்கக் கிடைத்தன. பெரியபுராண, இராமயண, இதிகாசக் கதைகள் என அவரவர் பார்வையில் எழுதிய புத்தகங்கள் நாமும் எழுதலாமே என்ற எண்ணத்தை தந்தது. ராயல்டி தந்து புத்தகத்தை பதிப்பாளர் வாங்கிக் கொண்டார். எழுதிய ஐந்து நூல்களும் ராயல்டியும், ஆசிரியர் நூலுமாய் சேர்ந்து வந்தது. வரலாற்று நூல்களின் மீது குறையாது இருந்து வந்த காதல் அந்த தளத்திலும் சில நூல்களை கொண்டு வர வைத்தது.
கண்ணதாசன் நூல்களை வாசிக்க ஆரம்பித்ததில் அவருடைய வரலாற்று புதினங்கள் தந்த விருப்பம் கல்கி, சாண்டில்யன், அகிலன் என நீண்டது. புத்தகங்களின் எடை தான் சுமையாய் இருக்கும். ஆயினும், சாப்பாட்டுக் கூடையோடு அதையும் தூக்கி செருகிக் கொண்டு வேலையிடங்களில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசித்து விடுவதுண்டு. பேருந்து நிலையக் கடைகளின் வழியாக ராஜேஷ் குமார் அறிமுகமானார். அங்கிருந்து பாக்கெட் நாவல் வாசிக்கும் பழக்கம் ஆரம்பமானது. பட்டுக்கோட்டை பிரபாகரையும் அப்படியான அறிமுகத்தில் தான் வாசித்தேன். அந்த நேரத்தில் கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டிருந்த ஆல்பர்ட் கிச்சாக் எழுதிய கிரைம் புத்தகத்தை நண்பர் வாசிக்கத் தந்தார். ஒரு அறையில் தனியாக இருந்து வாசித்த போது ஏற்பட்ட மெல்லிய அச்ச உணர்வு இன்னும் அப்படியே இருக்கிறது. அது தந்த தாக்கத்தில் ஒரு க்ரைம் நாவலை எழுதி வெளியிட்டேன். நூலகங்களுக்குத் தேர்வாகியதோடு, நண்பர்கள் மூலமும் நல்ல விற்பனையைத் தந்தது.
ஒவ்வொரு காலகட்டத்திலும் நான் வாசித்த நூல்களே தொடர்ந்து என்னையும் பதியம் போட்டுக் கொள்வதற்கான முயற்சிகளை செய்து பார்க்க வைத்தது. கவிதை, கட்டுரை, கதை, நாவல், விமர்சனம், வாழ்க்கை வரலாறு, தன்னம்பிக்கை என பல தளங்களிலும் இயங்குவதற்கான செயல் திறனை இன்று வரை தந்து கொண்டிருக்கிறது. உனக்கு வாசிப்பு எதைத் தந்தது எனக்கேட்பவர்களுக்கு இந்தக் கட்டுரையவே என்னால் பதிலாகத் தர முடியும்.
தினசரிகள், சிற்றிதழ், பேரிதழ், இணைய இதழ், அரசியல் இதழ், சமுதாயங்களுக்கான இதழ் என எதையும் விடுவதில்லை. கிடைப்பதை வாசித்து விடும் பழக்கம் இருந்ததால் தினமும் எந்த வகையிலாவது வாசித்து விடுவேன். அதனால் விரைவான வாசிப்பு பழக்கம் கை கூடியது. கதைகள் பக்கம் கொஞ்சம் வாசிக்கலாம் என்ற நினைப்பில் அங்கொன்றும், இங்கொன்றுமாய் வாசித்தவர்களின் தொகுப்புகளை நூலகங்களில் தேடி வாசிக்க ஆரம்பித்தேன். காலம் கடந்தே அத்தகைய படைப்புகளை கண்டடைந்திருக்கிறேன் என்ற வருத்தம் இருந்தாலும் வாசிப்பின் வழியே களைந்து கொண்டிருக்கிறேன். என் மூத்த தலைமுறைகளோடு சுஜாதா, சுந்தரம் ராமசாமி, பா.ராகவன், எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சாரு நிவேதிதா, மாலன் ஆகியவர்களோடு இன்றைய என் சக படைப்பாளிகள் எழுதும் எல்லா வகைமையான நூல்களையும் வாசிக்கிறேன். இவர்களின் மொத்த நூல்களையும் எப்பொழுதும் என்னால் வாசிக்க முடியாது என்பது எனக்குத் தெரியும். 9 டூ 9 என்ற வேலை நேரத்தில் இதெல்லாம் சாத்தியமில்லை என்ற போதும் குறைந்த பட்சமேனும் சாத்தியமாக்கிக் கொள்வதன் மூலம் என்னை புதுப்பித்த படியே இருக்கிறேன்.
அனைவருக்கும் புத்தக தின நல்வாழ்த்துகள்.
No comments:
Post a Comment