Monday, 26 April 2021

இஸ்லாம் கற்றுத்தரும் வாழ்வியல்

2003 ம் ஆண்டு முதல் பதிப்பு வெளிவந்தது. தமிழக நூலகங்களுக்குத் தேர்வானதாலும், ஒரு இஸ்லாமிய நண்பர் அவருடைய திருமணத்திற்குத் தர மொத்தமாக 500 பிரதிகளை வாங்கிக் கொண்டதாலும் பொது விற்பனைக்கு இந்நூலை கொண்டுவர முடியாமல் போனது. அதன் பின்னர் நூலுக்கான தேவை இருந்த போதும் பதிப்பு சார்ந்த விபரங்கள் அப்போதைக்கு தெரியாமல் இருந்ததால் சுய முயற்சி செய்து பார்ப்பதில் தயக்கம் இருந்தது. ஒரு பதிப்பகம் அச்சு வடிவில் மீண்டும் கொண்டு வருவதற்கான விருப்பத்தைச் சொல்லி இருக்கிறது. கொரானா காலகட்டத்தில் சாத்தியமா? என்பது தெரியாத நிலையில் கிண்டிலில் 18 ஆண்டுகளுக்குப் பின் அதை மறு பிரசுரம் செய்வதற்கான வாய்ப்பு அமைந்தது. நூலினை இங்கே சென்று வாங்க முடியும். கிண்டில் பதிப்பிற்காக எழுதப்பட்ட முன்னுரை அந்நூல் சார்ந்த புரிதலை உருவாக்கும் என நினைக்கிறேன்.

இஸ்லாம் மதம் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்பு வரை “ஒவ்வொரு இஸ்லாமியனும் ஏ.கே.47 – உடன் தான் இருப்பான்என எண்ணிக் கொண்டிருந்ததாக அந்த மதத்தைத் தழுவிய வெளிநாட்டவர் கொடுத்திருந்த பத்திரிக்கை பேட்டி ஒன்றை சில வருடங்களுக்கு முன் படிக்க நேர்ந்தது. அப்படிச் சொல்லுமளவுக்கு அந்த மதம் பற்றி தவறான கணிப்பு ஏற்பட என்ன காரணம்?  இஸ்லாம் மதத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது?  என்ற கேள்வி என்னுள் எழுந்த போது “இந்துஎன்கிற என் மத அடையாளத்திற்குள் நின்று கொண்டு விடை தேட முயன்றேன். இந்த முயற்சியை அறிந்த என் இஸ்லாமிய நண்பர்கள் இத்தொகுப்பிற்குத் தேவையான புத்தகங்களையும், ஹதீஸ் தொகுப்புகளையும், அல் – குர் – ஆனின் தமிழாக்கங்களையும் சேகரித்து தந்து உதவினர்.

என் சிற்றறிவிற்கு எட்டும் அளவிற்கு நான் இஸ்லாம் தரும் வாழ்க்கை நெறிகளைப் பற்றி படித்த பின்பு, மாற்று மதத்திற்கான நூல் என்ற ஒரே காரணத்திற்காக தூக்கி எறிந்து விடக்கூடாது. அதில் சொல்லப்பட்டுள்ள விசயங்களை அறிவியலும், நடைமுறையும் கலந்து, குழப்பமற்ற நிலையில், எந்த மதத்தவரும் வாசித்துப் புரிந்து கொள்ளும் வகையில் தர வேண்டும் என எண்ணியதன் விளைவே இப்பொழுது உங்கள் கைகளில் தவழும் “இஸ்லாம் கற்றுத்தரும் வாழ்வியல்என்ற நூல்.

ஒரு ஜென் கதையை வாழ்க்கை உதாரணமாக ஒருவர் எடுத்துக் கொண்டு விடுவதால் அவர் ஜென் மதத்தவராகி விட முடியாது என்பதைப் போல இஸ்லாம் கற்றுத்தரும் வாழ்க்கை முறைகளை அந்த மதத்தைச் சாராதவர்கள் பின்பற்றுவதால் தனக்கே உரிய பிறவி மத அடையாளத்தை இழந்து விடப்போவதில்லை. ஏற்றம் தரும் வாழ்க்கைக்குரிய விசயங்களை மனிதன் என்ற நிலையில் நின்று தன் அடையாளங்களைத் துறக்காத தன்மையில் கடைப்பிடிக்க வைப்பதே இந்த நூலின் நோக்கம்.

பிறப்பிலிருந்து தொடங்கி இறப்பில் முடிவடையும் வரையில் முழுமையான வாழ்க்கை என்பது ஒவ்வொரு நிலையிலும்,  ஒவ்வொரு சம்பவத்தையும் கடந்து வருவதில் மட்டுமே இருக்கிறது.  எதையும் சந்திக்காமல் வாழ்க்கையை வெல்ல முடியாது. அந்த வெற்றிக்கான சூட்சும வழிகாட்டலையும், ஆலோசனைகளையும் அல் – குர் – ஆன் தருகிறது.  ஆலமரம் போன்ற அத்தகைய பரந்த விசயத் தொகுப்பிலிருந்து விழுது என்ற ஒரு சிறு பகுதியை மட்டும் இதில் தொகுத்துள்ளேன்.

இக்கட்டுரைகளைப் படிப்பவர்கள் இளைஞர்களாயின் உங்களிடம் தேவையான மாற்றத்தைச் செய்து கொள்ள முனையுங்கள். பருவ வயதைக் கடந்து வந்தவர்களாயின் பின்பற்றுதலோடு உங்கள் பின் நிற்கும் இளைஞர்களுக்கும் அறிவுறுத்துங்கள்.

No comments:

Post a Comment