இந்த தொகுப்பு ஒரு விமர்சனப் போட்டிக்கான பரிசாக எனக்கு வந்தது. அச்சமயத்தில் அதை வாசித்திருந்த போதும் வாசிப்பு மராத்தானுக்காக மீள் வாசிப்பு செய்து கொண்டிருந்தேன். அதைக் கவனித்த நண்பர் எந்த மகாமகத்துல வந்த புத்தகம் இது. இப்ப வாசிச்சிக்கிட்டு இருக்க? என்றார். அவர் சொன்னதன் உண்மையான உள்ளர்த்தம் என்ன? எனத் தெரியாத போதும் இத்தனை காலமாகியும் இந்த தொகுப்பை வாசிக்காமலா இருந்தாய்? என்றே அவரின் கேள்வியை நான் புரிந்து கொண்டேன். அதை அவருக்கு விளக்க அவசியம் ஏற்படவில்லை.
இப்படியான தொகுப்பு நூல்கள் எப்பொழுதும் வாசிப்புக்கு சுவராசியமானவை என்பேன். வேறுபட்ட கதைக்களம், பலதரப்பட்ட வட்டார வழக்கு, மாறுபட்ட கதைமாந்தர்கள் என தனிப்பட்ட கதாசிரியரின் தொகுப்பு நூலில் சாத்தியமாகாத விசயங்கள் இப்படியான தொகுப்பில் கிடைப்பது அதற்கு ஒரு முக்கிய காரணம். ”ரோஷாக்னி” என்ற இத்தொகுப்பு 1998 ம் ஆண்டு இலக்கிய சிந்தனை பரிசுபெற்ற 12 கதைகளின் தொகுப்பு. வானதி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
பத்திரக்கோட்டைக்கு பஸ் வந்த விபரம், அதன்பின் அவ்வூரும், அம்மக்களும் தங்கள் வாழ்வியலை மாற்றிக் கொண்ட விதம், மீண்டும் வழக்க நிலைக்கு அவ்வூரைக் கொண்டு வந்த சூழல் என்ற மூன்றையும் பிசிறு தட்டாமல் சொல்லிச் செல்லும் கதை கவுரவம். உன்னிடம் நான் சமாதானமாகிப் போவதை விட பழைய வாழ்வையே வாழ்ப் பழகிக் கொள்கிறேன் என இரண்டு கிராம மக்கள் ஏற்கும் வெட்டி கவுரவத்தின் மைய இழையில் கதை நகர்கிறது.