இந்த தொகுப்பு ஒரு விமர்சனப் போட்டிக்கான பரிசாக எனக்கு வந்தது. அச்சமயத்தில் அதை வாசித்திருந்த போதும் வாசிப்பு மராத்தானுக்காக மீள் வாசிப்பு செய்து கொண்டிருந்தேன். அதைக் கவனித்த நண்பர் எந்த மகாமகத்துல வந்த புத்தகம் இது. இப்ப வாசிச்சிக்கிட்டு இருக்க? என்றார். அவர் சொன்னதன் உண்மையான உள்ளர்த்தம் என்ன? எனத் தெரியாத போதும் இத்தனை காலமாகியும் இந்த தொகுப்பை வாசிக்காமலா இருந்தாய்? என்றே அவரின் கேள்வியை நான் புரிந்து கொண்டேன். அதை அவருக்கு விளக்க அவசியம் ஏற்படவில்லை.
இப்படியான தொகுப்பு நூல்கள் எப்பொழுதும் வாசிப்புக்கு சுவராசியமானவை என்பேன். வேறுபட்ட கதைக்களம், பலதரப்பட்ட வட்டார வழக்கு, மாறுபட்ட கதைமாந்தர்கள் என தனிப்பட்ட கதாசிரியரின் தொகுப்பு நூலில் சாத்தியமாகாத விசயங்கள் இப்படியான தொகுப்பில் கிடைப்பது அதற்கு ஒரு முக்கிய காரணம். ”ரோஷாக்னி” என்ற இத்தொகுப்பு 1998 ம் ஆண்டு இலக்கிய சிந்தனை பரிசுபெற்ற 12 கதைகளின் தொகுப்பு. வானதி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
பத்திரக்கோட்டைக்கு பஸ் வந்த விபரம், அதன்பின் அவ்வூரும், அம்மக்களும் தங்கள் வாழ்வியலை மாற்றிக் கொண்ட விதம், மீண்டும் வழக்க நிலைக்கு அவ்வூரைக் கொண்டு வந்த சூழல் என்ற மூன்றையும் பிசிறு தட்டாமல் சொல்லிச் செல்லும் கதை கவுரவம். உன்னிடம் நான் சமாதானமாகிப் போவதை விட பழைய வாழ்வையே வாழ்ப் பழகிக் கொள்கிறேன் என இரண்டு கிராம மக்கள் ஏற்கும் வெட்டி கவுரவத்தின் மைய இழையில் கதை நகர்கிறது.
கூலிக்கு ஏர் ஓட்டி ஜீவனம் நடத்தும் மக்கள் தங்கள் எதிர்ப்பை மொழியற்ற இயந்திரங்கள் மீது காட்டினால் அது அதிகாரவர்க்கத்தின் வழியாகப் பேசும் என்பதையும், மலைப்பகுதி நிலத்தை புல்டோசர், டிராக்டர் என இயந்திரங்கள் கொண்டு சமனும், சரியும் செய்து கூலி ஏர் ஓட்டுபவனின் கலப்பையை முடக்கிப் போடும் துயரத்தையும் சொல்லும் கதை ”டிராக்டர்”. மலைவாசியின் குரலாக ஒலிக்கும் இந்தத் துயரம் கதையின் பின்பகுதியில் வருகிறது. முன்பகுதி அந்த ஊருக்கு வரும் டிராக்டர் கடந்து போகக் காத்திருக்கும் செக்போஸ்டில் நிகழும் சம்பவங்களால் நிறைகிறது.
செடிகள், தோட்டம், இரயிலோசை, கிணற்றடி, அரசமரம் , காவிரி என வலம் வரும் ஒரு பெண் திருமணத்திற்குப் பின் சென்னைக்கு குடிபெயர்கிறாள். பிளாட் வாழ்வில் இருந்து கொண்டு தன் பழைய வாழ்வை நினைக்கும் அப்பெண் மீண்டும் அந்த வாசம் நுகர கிராமத்திற்கு வருகிறாள். ஆனால், அவளின் வீடோ அவளின் வருகைக்கான காரணம் என்னவாக இருக்கும்? என ஆராய்கிறது. தன் வீட்டாரின் உரையாடல் வழி நிகழ்கால எதார்த்தத்தை அப்பெண் உணர்கிறாள். ஓவ்வொருவரின் பார்வைகள் அவரவர் மனநிலைக்கேற்ப மாறும் என்பதை சொல்லும் கதை ”நினைவுகளே சுகமாக”.
சேரி மீது உயர்ஜாதி வர்க்கம் நிகழ்த்திய சதை வெறிக்கும், இரத்த வாடைக்கும் தன் தாயே சாட்சியாய் இருக்கும் நிலையில் புளுகாண்டி என்ற கதாபாத்திரம் அச்சமூகம் மீது அடிக்கும் சாட்டையடி ”ரோஷாக்னி”. ரோசம் அக்னியாய் திரண்டு ரோஷாக்னியாய் மிளிர்கிறது. சேரியில் கூறு போடும் பன்றியை ருசிக்க ஆசைப்படும் பெரிய வீட்டு சாமி எல்லோரும் போல் வரிசையில் வந்து வாங்கிச் செல்லட்டும். ஏன் கொண்டு போய் கொடுக்க வேண்டும்? என்ற புளுகாண்டியின் கேள்வியில் உக்கிரம் இல்லாத எரிச்சலும், இளக்கார உயரடுக்கின் சாடலும் அழகாய் மின்னுகிறது.
பிணத்தை எடுக்கப் பணம் இல்லாததால் உதவி கேட்டு வந்திருப்பதாக வாசலில் தட்டைக் கையில் ஏந்தியபடி நிற்கும் ஒருவன் சொல்லும் உண்மைத்தன்மை மீது கணவன், மனைவிக்கிடையே நிகழும் உரையாடல் ”நிஜத்தைத்தேடி” கதை. கல்யாணமாகி ஒன்பது வருசத்திற்குப் பின் எதிரெதிரே அமர்ந்திருக்கும் கணவன், மனைவிக்கிடையே இருக்கும் ”பழக்கப்பட்ட மெளனம்” என்ற ஆரம்ப வரிகள் நகர வாழ்வின் நிஜத்தைச் சொல்லி விடுகிறது. ஆண்களின் மனநிலையையும், பெண்களின் மனநிலையையும் காட்டி கணவன், மனைவிக்கிடையேயான உரையாடல் வழி மனித மனவோட்டத்தை கதை வெளிச்சமிடுகிறது.
மரங்கள் சூழ இரண்டரை கிரவுண்டில் இருக்கும் வீடு மகனின் பிடிவாதத்தால் பிளாட்டாக மாறிப் போகும் துயரை வீடு என்பது நமக்கான வாழ்விடமாக இன்றில்லை. அது இன்று பொட்டி, பொட்டி கான்கிரீட் கூடுகளாகி விட்டது என்ற எதார்த்தத்தின் தெளிவில் சொல்லும் கதை ”வீடென்று எதைச் சொல்வீர்”. பெற்றோரின் பலகீனத்தால் தன் எண்ணத்தில் ஜெயிக்கும் மகன், தன்னுடைய உழைப்பில் கட்டிய வீடு பிளாட் கட்டுவதற்காக இடிபடுவது அறிந்து மனதிற்குள் புழுங்கும் தந்தை என இருவருக்குமான உரையாடல்கள் தலைமுறை இடைவெளியின் அகலத்தை அழகாய் வெளிப்படுத்துகிறது.
வயது வந்த பெண் எதிர்கொள்ளும் சிக்கலைப் பற்றி பேசும் கதை ”பட்டுப்பூச்சிகளை தொலைத்த ஒரு பொழுதில்”. தீட்டு என தனித்து படுத்துக் கிடப்பதில் தொடங்கி பயன்படுத்திய நாப்கினை ஒழித்தொழிக்கும் வரை ஒரு பருவ வயது எய்திய பெண் எத்தகைய சிக்கல்களை உளரீதியாக எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை பெண்ணின் உணர்வோட்டத்தோடு கதை சொல்லிச் செல்கிறது.
எதிர்வீட்டில் வசிக்கும் தன் மகனொத்தவனின் வார்த்தைகள் அந்த முதியவரை மனதளவில் பாதிக்க மாரடைப்பால் அவர் மரணமடைகிறார். அவரின் இறப்பு அந்த இளைஞனுக்கு வாழ்நாள் முழுமைக்குமான குற்றவுணர்வாக மாறிப் போகிறது. அந்த குற்றவுணர்வை அவனுக்குத் தந்த முதியவர் தன் இறப்பிற்குப் பிறகு செய்து வைத்துவிட்டுப் போன செயல் நன் கண்களில் இருந்து அகலாமல் நிற்கிறது. தன் கண்கள் மூலம் நம் மனங்களை அளக்கும் கதை ”இரவல்”.
இராஜாராம் மோகன்ராயால் சமூகத்தில் இருந்து ஒழிக்கப்பட்ட சதி இன்று கூட்டுக் குடும்பத்தில் பகிரப்படாத உழைப்பு, அதிகாரத்துக்கு அடிபணியச் செய்தல், கணவர், மாமியார் கொடுமை, குறைகளைக் கண்டும் காணாமல் அனுசரித்துச் செல்லுதல், எதையும் சுட்டிக்காட்ட முடியாத துயரம் என வேறு முகமூடி தரித்து வீட்டிற்குள் நெருப்பில் ஏற்றாத வகையில் பெண்களை வதைத்து வருவதை செல்லும் கதை ”சதி”. உடன்கட்டை ஏறுதலின் எச்சம் இன்னும் மிச்சமாய் அங்கொன்றும், இங்கொன்றுமாய் இருக்கிறது என்பதற்கு சாட்சியாய் இருப்பவனில் தொடங்கும் கதை அதன் இன்றைய உருமாற்றத்தோடு நிறைவடைகிறது.
அறுப்புக்காலம் முடிந்த ஒரு கோடையில் அவ்வூருக்கு வரும் பயில்வான் ஒரு பனைமரத்தையே பிடுங்கி எறியும் அதிசயத்தை நிகழ்த்துகிறார். இந்த அதிசயத்தை அவர் நிகழ்த்துவதற்கான காரணத்தை அறியும் போது இதற்காகவா இத்தனை முயற்சியும் என கேட்க வைக்கும் கதை ”பனைமரம்”. பயில்வான் தன் பலத்தால் ஊரையே வியக்க வைக்கிறார். அந்த அதிசயத்தை ஊரே கொண்டாடுகிறது. தடபுடல் விருந்து அவருக்கு கொடுக்கப்படுகிறது. கடைசியில் பயில்வான் விரிக்கும் போர்வைக்கு முன் நின்ற மக்களுக்கு மட்டுமல்ல நமக்கும் அதிசயமாகவே இருக்கிறது அவரின் செயல்!
மகள் – மருமகன் – மாமனார் என முக்கோணத்தில் நிகழும் குடும்ப சிடுக்கை பிரிக்கும் கதை ”போதை மரம்”. கணவன் குடித்து விட்டு வந்ததையும், போதையில் அடித்ததையும் தன் அப்பாவிடம் சொல்லி மகள் நியாயம் கேட்கச் சொல்கிறாள். அவரோ மருமகனிடம் எதுவும் கேட்கவில்லை. அப்படிக் கேட்காமல் விட்டதாலயே குற்ற உணர்வு கொள்ளும் மருமகன் உங்கள் மகளை கை நீட்டி அடித்ததற்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்கிறான். மாமனாரோ நான் அந்நியன் என ஒதுங்கிக் கொள்கிறார். அதன்பின் தன் தந்தையிடம் மன்னிப்பு கேட்கனுமா? என கணவனிடம் மனைவி பரிவு கொள்கிறாள். அவன் குற்ற உணர்விலிருந்து விடுபடுகிறான்.
ஆங்கில இலக்கியம் படித்து விட்டு அதற்கான கனவுகளை நடத்துனர் வேலையில் நசுங்கக் கொடுத்த எரிச்சலில் இருக்கும் பட்டதாரி இளைஞன் எம்.எஸ்.சி. படித்து விட்டு பலசரக்குக் கடையில் வேலை செய்யும் இன்னொரு பட்டதாரி இளைஞனைச் சந்திக்கிறேன். அது அவனின் தன் உணர்வை – சுபாவத்தை - தன்னையே பார்த்துக் கொள்ள வைப்பதோடு தன்னியல்பிலேயே இயங்க வைக்கிறது. டவுன்பஸ் பயணக் காட்சிகள் நுண்ணிய அவதானிப்புகளால் பட்டதாரிகளின் வாழ்வியல் பார்வையோடு விரியும் கதை “பட்டம்”.
தொகுப்பில் இருக்கும் கதைகள் அனைத்தும் வணிக இதழ்களில் வெளிவந்தவைகள் என்பதால் அதற்கே உரிய மொழிநடையையும், சாயலையும் அத்தனை கதைகளும் தரித்திருக்கின்றன. ஒவ்வொரு கதையும் சிறுகதைகளின் தளத்தில் வேகப் பாய்ச்சலை நிகழ்த்துபவர்களால் எழுதப்பட்டவைகள் என்பதால் தேர்ந்த நெசவால் நெய்யப்பட்ட ஆடையின் பளபளப்பாய் ரோஷாக்னி மிளிர்கிறது.
No comments:
Post a Comment