
மகனைப் பற்றி பேசும் போதெல்லாம் மனைவியும், மகளும் அவனைப் பற்றிய குறையோடு தான் முடிப்பார்கள். எதிலும் அக்கறையில்லை. மெனக்கெடல் இல்லை. ஏனோதானோவென்று எதையும் செய்வதால் நல்ல ரிசல்ட்டை அவனால் தர முடியவில்லை எனச் சொல்லிச் சொல்லி அவர்களுக்கு அழுத்ததோ இல்லையோ எனக்குக் கேட்டு, கேட்டு அழுத்துப் போயிருந்த நிலையில் அவன் செவன்த் ரேங்க் வந்ததைப் பார்த்து எனக்கே அதிர்ச்சியாகி விட்டது என அவனுடைய கிளாஸ் மிஸ் மகளிடம் சொல்ல அது தான் ஹாட் டாப்பிக்காக சில நாட்களாய் ஓடிக் கொண்டிருந்தது. மூன்றாவது படிக்கிற பையன் தானேம்மா. இப்போதைக்கு எழுத்துக்களை அறிந்து சேர்த்து வாசிக்கக் கற்றுக் கொண்டால் போதும். ரேங்க் எடுக்க வைப்பதற்கெல்லாம் அப்புறமா அவனைத் தயார் செய்துக்கலாம் எனச் சொல்லி சமாளித்து வந்தேன்.