Tuesday, 1 December 2015

மெளன அழுகை - 6

என் “மெளன அழுகை” கவிதைத் தொகுப்பு குறித்து மலேசியாவின் பன்முகப்படைப்பாளி ”வல்லினம்” ம. நவீன் எழுதியிருக்கும் விமர்சனக் கடிதம் - 
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ம. நவீன்

அன்புமிக்க மு. கோபி சரபோஜி, முதலில் தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். உங்கள்மௌன அழுகைதொகுப்பை வாசித்தேன். பொதுவாகக் கவிதைகள் குறித்த எனது அபிப்பிராயங்களை முதலில் சொல்லிவிடுகிறேன்.

நான் எனது தொடக்ககால கவிதை வாசிப்பை வைரமுத்து, மேத்தாவிலிருந்துதான் தொடங்கினேன். தமிழில் தீவிர இலக்கிய வாசிப்பு எனக்கு அறிமுகமாகும் முன் திருக்குறள்தான் நான் கவித்துவத்தை அறிய உதவியாக இருந்தது. அப்போதெல்லாம் வீட்டுக்கு வரும் எந்த அழைப்பிதழையும் பெரும்பாலும் கவனமாக வாசிப்பேன். அதில் அப்படி ஓர் ஆர்வம்.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.’ 
என்ற குறள் பெரும்பாலும் திருமண அழைப்பிதழ்களில் இருக்கும்.

ஒருமுறை
குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள் 
மழலைச்சொல் கேளா தவர் 
என்ற குறளை ஒரு பிறந்தநாள் அழைப்பிதழில் வாசித்தேன். பாடனூலில் வாசிக்கும் முன் நான் அக்குறளை முதலில் பொருள் புரியாமல் அறிந்த கணம் அற்புதமானது.

அன்றுமுழுவதும்குழலினிது யாழினிதுஎன சொல்லிக்கொண்டே இருந்தேன். எனக்கு அதன் பொருள் தெளிவாகப் புரியவில்லை. ஆனால் அக்குறள் குழந்தையின் மழலை மொழியுடன் இசைக்கருவியை ஒப்பிடுவதை மட்டும் உணர முடிந்தது. ‘குழலினிது யாழினிதுஎனச்சொல்லும்போதெல்லாம் அந்த இசைக்கருவியை மீட்டுவதாகவே உணர்ந்தேன். எனக்குத் தெரிந்த சொற்பமான குறளுடன் இந்தக்குறளை ஒப்பிட்டுக்கொண்டே இருந்தேன். ‘அன்பும் அறனும்எனும் குறள் கருத்தை வலியுறுத்துவதாக இருந்தது. ‘குழலினிது யாழினிதுதனக்கான இரகசியங்களைத் தேக்கி வைத்திருந்தது.

குழலையும் யாழையும் உச்சமாக எடுத்துச்சென்றுகுழந்தையின் மழலையைக் கேட்காத உனக்கு அவற்றின் இசை இன்பமாகத்தான் இருக்கும்என்ற அடங்கிய தொணி மிகப்பெரிய கவித்துவ வீச்சை எனக்குள் கொடுத்தது. நான் சிறுவனாக இருந்தபோது பார்த்த , கேட்ட குழந்தைகளின் மழலையிலெல்லாம் இக்குறள் ஒலித்தது. திருமணமாகி ஆறாண்டுகள் குழந்தை இல்லாமல் இருக்கும் கணங்களில் இக்குறள் மாபெரும் அழுத்தம் கொடுக்கிறது. குறளை வாசித்து நீங்கள் அழுதுள்ளீர்களா? இந்தக்குறள் என்னை அழ வைத்துள்ளது. இதை நான் எனக்கான கவிதையென்பேன்.

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்’  
என எத்தனைக் குறள்களின் அந்த உணர்வெழுச்சியைத் தேடிச்சென்றாலும்குழலும் யாழுமேமீண்டும் மீண்டும் அதை தருகிறது. இது என் வாழ்க்கை முழுவது வரும். இந்தக்குறள் மூலமே நான் கவிதை ரசனையை அறிந்தேன்.

கவிதை, குறிப்பிட்ட பொருளை வாசகனுக்கு அளிக்கும் வடிவம் இல்லை. அது மொழியின் சாத்தியங்கள் வழியாக அகத்தை முன்வைக்கும் முயற்சி. அகம் என்பது குறிப்பிட்ட ஒற்றைக் கருத்தால் ஆனதல்ல; உணர்வுகளால் ஆனது. உணர்வுகள் நேரடியானவை அல்ல. அவ்வாறு ஒரு ஒற்றைக்கருத்தைதான் சொல்லப்போவதாக முடிவெடுத்தால் அதற்கு கவிதை பொருத்தமான வடிவம் அல்ல. கடிதமும் கட்டுரையுமே அதற்கு ஏற்றது.

இது நான் என் வாசிப்பு மூலம் அடைந்த கவிதை ரசனை . இந்த நிலையில் இருந்தே நான் கவிதைகளை அணுகுகிறேன். இது சரியா தவறா என்பதெல்லாம் அவரவர் ரசனை சார்ந்து மாறலாம்; முரண்படலாம். ஆனால், நான் சங்கப்பாடல்களை வாசிக்கும்போதும் திருக்குறளை வாசிக்கும்போதும் இன்றைய நவீன கவிதை ஆளுமைகளின் தொகுப்புகளை வாசிக்கும்போது கிடைக்கும் வாசிப்பு அனுபவத்தின் ஒட்டுமொத்த திரட்சியிலேயே இதை அடைந்துள்ளேன். இந்த அனுபவத்தில்தான் உங்கள் தொகுப்பையும் அணுகுகிறேன்.

அவற்றின் பெரும்பாலும் முடிவுகளில் கருத்தைச் சொல்ல உருவாக்கப்பட்ட சொல் அடுக்குகளாகவே பட்டது. அவற்றில் பெரும்பாலானவற்றை நான் கவிதை என உணரவில்லை. ‘தடம்என்ற கவிதையை மட்டும் கொஞ்சம் செரிவு செய்தால் சிறப்பாக இருக்கும் எனத் தோன்றுகிறது. ஏற்கனவே சொல்லி சொல்லி அலுத்துப்போன விடயங்களை மீண்டும் சொற்களாக அடுக்கி கவிதையாக்குதல் என்பதை நாம் எப்போதும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மட்டும் தங்களுக்கு அக்கறையுடன் சொல்லத்தோன்றுகிறது. சொற்களை விரையமாக்காமல் அந்தச்சொல் இல்லாவிட்டாலும் கவிதை அதே உணர்வை தரும் என்றால் அதை ஈவிரகம் இன்று நீக்குதலை கவிதை எழுதி முடித்தப்பின் உள்ள அவசியமான வேலையாகச் செய்யுங்கள். கவிதைகளின் வரிகளை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்குவது ஒரு வடிவம் அல்ல; அது உணர்வுகளை அடுத்தடுத்து சுமந்துசெல்லும் முறை. அதில் இன்னும் கொஞ்சம் கூடுதலாக கவனம் தேவைப்படுகிறது என்றே இந்தத் தொகுப்பை வாசித்தபோது தோன்றியது.

உங்கள் தொகுப்பை வாசித்தப்பின்
மொக்கொன்று
அப்பொழுதுதான் பூத்த தருணம் போல
இரவு
என்ற வரி மட்டும் புதுமையாக மனதில் உலாவிக்கொண்டிருக்கிறது கோபி சரபோஜி.

- ம.நவீன்

நன்றி : ம. நவீன் வலைப்பக்கம்