Saturday, 19 December 2015

அப்பாவின் படகு

சிங்கப்பூரில் இயங்கும் தங்கமீன் பதிப்பகம் கடந்த வருட தனது வாசகர் வட்டச் சிறுகதைகளை “அப்பாவின் படகு” என்ற பெயரில் தொகுப்பாக மலரச் செய்திருக்கிறது. இத்தொகுப்பில் பத்துப் படைப்பாளிகளின் பதினைந்து கதைகள் உள்ளன,

ஒரு படைப்பை வாசிப்பிற்காகத் தேர்ந்தெடுக்கும் வாசகன் அதில் தொடர்ந்து பயணிக்க அப்படைப்பானது அவனைத் தன்னுள் இறுத்திக் கொள்ளும் தகவமைப்புகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் வலக்கையால் எடுத்ததை இடக்கையால் புறந்தள்ளிப் போய் விடுவான். வாசிப்பாளனின் இந்தப் புறந்தள்ளலை, புறக்கணித்தலை எப்பொழுது ஒரு படைப்பு புறந்தள்ள வைக்கிறதோ அப்பொழுது அந்தப் படைப்பு வெற்றியின் முகத்துவாரத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறது. இப்படி நிலை நிறுத்தல்களுக்கான கூறுகளைக் கொண்டிருக்கும் படைப்பாக இத்தொகுப்பின் கதைகள் சிங்கப்பூரின் வாழ்வியல் சார்ந்தும், சிங்கப்பூரைக் களமாகக் காட்டியும் விரிந்து நிற்கின்றன.

காற்றடைக்கப்பட்ட பலூன் மேலே கிளம்பக் கிளம்ப ஒரு குழந்தை அண்ணாந்து பார்த்த படி ஆர்வம் குன்றாமல் அதை எப்படிப் பின் தொடர்கிறதோ அதே ஆர்வத்தை ஒரு வாசிப்பாளனிடம் தருவதற்குக் கதைக்களங்கள், அது கட்டமைக்கப்படும் விதம், சொல்லும் முறை பயன்படுத்தப்படும் சொல்லாடல்கள் அவசியம். இந்த அவசியத்தின் பல அம்சங்களைத் தன்னுள் கொண்டு கடைசி வரி வரைக்கும் எதிர்பார்ப்போடு நகர்த்தி வரும் “ஒற்றைக் கண்”, அமானுஷ்யத்திற்கான வழக்க அனுமானங்களை உடைத்துக் கட்டமைக்கப்பட்ட “பச்சை பங்களா”, மன உணர்வுகள் சார்ந்தும், நம்பிக்கை சார்ந்தும் ஊடேறும் “அப்பாவின் படகு”, ”இது வேறு வீடு”, “ஒரு கிளினிக்கின் காத்திருப்பு அறை”, குழந்தை வளர்ப்பில் ஏற்படும் சிக்கலைப் பேசும் “பித்துக்குளி மாமா” ஆகிய கதைகள் தொகுப்பை நிறைவாக்குகின்றன.

கதை தனக்கான முடிவைத் தானாகவே நிரப்ப எத்தனிக்கும் போது மட்டுமே படைப்பாளியின் முடிவும் வாசகனின் முடிவும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன, அதுவே படைப்பாளியின் முடிவோடு தன்னுடைய முடிவைப் பொறுத்திப் பார்த்து விவாதங்களை நிகழ்த்த வாசகனுக்கு வாய்ப்பளிக்கிறது. இந்த நிலை முடிவிலிருந்து முன் நோக்கிப் பாயும் கதைகளில் நிகழ்வதில்லை. காரணம், கதையின் ஓட்டம் முன்னரே அறுதியிட்ட முடிவை நோக்கி ஆற்றொழுக்காய் சென்று கொண்டே இருக்கும், தொடர் வாசிப்பாளனால் இதை எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடியும். நீண்டு செல்லும் இருப்புப்பாதை எங்கோ தொலைவில் ஒரு புள்ளியில் மையலிடுவது போல் தெரிந்தாலும் அது சந்தித்துக் கொள்வதில்லை என்பதே உண்மையாக இருப்பது போல முடிவிலிருந்து முன் நோக்கிப் பாயும் கதைகள் தன் மீதான விவாதங்களை எழுப்பிக் கொள்வதில்லை, ”ஏமாற்று”, “இணையும் இணையம்”, “சந்திரன் கோப்பிக்கடை” ஆகிய கதைகள் இந்த வகைமையானவை..

நுட்பமான கதைக் கருவையோ, வாசகனுக்குள் ஊடாடும் நிகழ்வுகளையோ கொண்டிராத போதும் சொல்லப்பட்டிருக்கும் விதத்தால் ஒரு அழகியல் கதையாக ”பூனைக் கண்” கதையை வாசிக்க முடிகிறது. ”காய்ந்த காட்டுக் கொடியில் தீயேறுவது போல”, “மஞ்சள் நிற பாலித்தீன் தாள் போர்த்தியது போல மரங்கள்”, ”அகன்ற கால்வாயில் தேங்கியிருந்த நீர் வானைப் பார்த்து அமைதியாய் படுத்திருந்தது” என அறிந்த விசயங்களும், பார்த்துக் கடந்து போகின்ற காட்சிகளும் மொழி நடையால் அழகான உவமைகளாகி கதை முழுக்க விரவிக் கிடக்கிறது. இதற்கு நேர் மாறாக உவமைகளற்ற எதார்த்த மொழி நடையில் சுவராசியம் குன்றாத வாசிப்பனுபவத்தை நகைச்சுவையின் ஈரம் காயாமல் “வயிற்றுவலி வரவைப்பது எப்படி?” என்ற கதை வாசிக்கத் தருகிறது

அறிவுரைகள், போதனைகள் மூலம்  தன்னுடைய மையத்தை பிரதிநிலைப்படுத்தும் கதைகள் நூலளவு பிசகினாலும் போதனையாக மாறிவிடக் கூடிய அபாயங்கள் உடையவை. சொல்லும் முறையினாலும், சொற்களை இடைவெளியற்று கட்டமைக்கும் முறையாலும் நிரல் படுத்தப்படும் இப்படியான போதனைக் கதைகள் தன்னுடைய நிலைபாட்டைப் பொறுத்திப் பார்ப்பதற்கான வாய்ப்புகளை வாசகனுக்குத் தருவதில்லை. அல்லது அதற்கான இடம் அங்கு இல்லாமலே போய்விடுகிறது, தேர்ந்த ஒருவரின் வழியே வாழ்வின் தேடல் முனைகளைக் கண்டடையும்  யுக்தியைச் சொல்லும் ”ஒரு வானம் பல விண்மீன்கள்” கதையை இதற்கு உதாரணமாகச் சொல்ல முடியும்.

கதை அதன் முடிவு நிலையை எட்டிய பின்னர் பிரயோகிக்கப்படும் சொற்கள் வாசகனுடையதாக மட்டுமே இருக்க வேண்டும். படைப்பாளி அதைச் செய்ய வேண்டிய அவசியமில்லை. வாசகன் நிறைவு செய்ய வேண்டிய இடத்தைப் படைப்பாளி தன் சொற்களால் நிறைக்கும் போது அந்தக் கதை பலவீனமடைய ஆரம்பிக்கிறது. உதாரணமாக “அம்மாவென்ற நான்”, “மண் குதிரைகள்” ஆகிய கதைகளைச் சுட்டலாம், இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் இவ்விரு கதைகளும் அதற்கான நிலையை மிகச் சரியாகச் சென்றடைந்திருக்கும் சாத்தியங்களைக் கொண்டிருக்கிறது.

அனுமானிக்கக் கூடிய முடிவுகளைக் கொண்டிருத்தல், கூறியது கூறல், ஆர்வ மிகுதியால் சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லி விட முயலுதல், வாசகனுக்கான வெற்றிடங்களைத் தானே இட்டு நிரப்புதல், பட்டவர்த்தனமாக விரித்துச் சொல்லி  தன் எண்ணத்தை வாசிப்பாளனிடம் கடத்த எத்தனித்தல், தேய்வழக்குச் சொற்களைக் கையாளுதல் என எந்த ஒரு படைப்பும் சிக்கிக் கொள்ளும் பலவீனங்களுக்குள் இந்தத் தொகுப்பும் பயணித்தே மீண்டிருக்கிறது.

ஆரம்ப கால நிகழ் பரப்பை உதிர்த்து அடுத்தடுத்த தளங்களுக்குள் சிறுகதை தன்னை நுழைத்துக் கொண்ட நிலையில் பலரும் கையாண்டிருக்கும் கருக்களை தன் மொழியில் படைப்பாக்கிப் பார்க்கும் நிலையை நீக்கி இன்னும் சொல்லப்படாத பக்கங்களை படைப்பாளி கண்டடைந்து வாசகனுக்குத் தர வேண்டும். அந்தக் கண்டடைவிற்காகவே இன்னும் பல எழுதப்படாத கதைகள் காத்திருக்கின்றன, அதற்கான வாய்ப்புகள் சிங்கப்பூர் வாழ்வியல் சூழலில் நிறைய இருக்கின்றது, உதாரணமாக புலம் பெயர்ந்து வரும் பணிப்பெண்கள் குறித்து எழுதப்பட்ட கதைகள் அளவுக்கு மணிக்கு இத்தனை டாலர் ஊதியம் எனத் தன்னைச் சுருக்கிக் கொண்டு வாழும் புலம் பெயர்ந்த இளந்தலைமுறைகளின் துயரங்கள், அவர்கள் எதிர் கொள்ளும் வாழ்வியல் சிக்கல்கள் பேசப்படவில்லை.

அதேபோல, நிரந்தர குடியுரிமை பெற்றுப் புதிதாகக் குடியேறியவர்களின் வருகை சிங்கப்பூர்வாசிகளிடம் ஏற்படுத்திய மாற்றங்கள், தாக்கங்கள் பற்றியும், வளர்ந்து நிற்கும் சிங்கப்பூரைப் பேசப்பட்ட அளவுக்கு அது எழுந்து நிற்கப் பலியான  அன்றைய மக்களின் வாழ்வியல் முறைகள் பற்றியும் புனைவுகளில் அதிகம் பேசப்படவில்லை.  இவைகளையும் கவனத்தில் கொண்டு இந்தத் தொகுப்பின் படைப்பாளிகள் நகர்ந்தால் அது இன்னும் சிறப்பான படைப்புகளைப் பிரசவிக்கும்,

”அப்பாவின் படகு” ஆரம்பம் மட்டுமே! அது பயணிக்க வேண்டிய தூரத்தை இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் படைப்பாளிகள் தங்களின் தொடர் இயக்கத்தின் வாயிலாகக் கண்டடைவார்கள் என நம்பலாம். 

நன்றி : மலைகள்.காம்