Sunday, 10 April 2016

தவறு நடக்க வாய்ப்பே இருக்காது ஆபிசர்!

கிராமத்தில் இருந்த ஒரு இடத்திற்கான அடங்கல் சரிபார்ப்பிற்காக கிராம நிர்வாக அலுவலரைச் சந்தித்து ஆலோசனை கேட்டேன். அவர் எல்லாவற்றையும் கணினி மயமாக்கி விட்டதால் பட்டா சிட்டாவைக் கணினியில் சரி பார்த்து அதைப் பிரதி எடுத்து தாசில்தாரிடம் ஒப்புதல் பெற்றுத் தாருங்கள், அடங்கலில் இருக்கும் தவறைச் சரி செய்து விடலாம் என்றார். என் நண்பரிடமிருந்த கணினியில் பட்டா சிட்டாவைச் சரி பார்த்து பிரதி எடுத்துக் கொண்டு போய் தாசில்தாரிடம் விபரம் கூறி ஒப்புதல் கேட்டேன். இந்தப் பிரதியை எங்கு எடுத்தீர்கள்? என்றார். சொந்தமாக கணினி இருக்கிறது. அதில் இருந்து எடுத்து வருகிறேன் என்றேன். அப்படி எடுத்து வந்தால் கையொப்பம் இட்டுத் தர முடியாது. இந்த அலுவலகத்தில் இருக்கும் கணினி மையத்தில் பணம் கட்டிப் பிரதி எடுத்து வந்தால் மட்டுமே கையொப்பம் இட்டுத் தர முடியும் என்றார். எங்கு எடுத்தாலும் இதில் உள்ளது போல் தானே வரப்போகிறது? என்றேன். அவரோநான் பிடித்த கழுதை உதைக்காதுஎனச் சொன்னதை மட்டுமே சொல்லிக் கொண்டு இருந்தார்.

கிராமநிர்வாக அலுவலரைச் சந்தித்து விபரம் சொன்னேன். அவரோ தாசில்தார் கையொப்பமும், அரசாங்க முத்திரையும் இல்லை என்றால் என்னால் அடங்கலில் மாற்ற்ம் செய்ய முடியாது எனக் கூறி விட்டார். தாசில்தாருக்கே சீல் வைத்தால் தான் உண்டு என நினைத்துக் கொண்டேன். மேற்கொண்டு வம்படிக்க வேண்டாம் என நினைத்து தாலுகா அலுவலகத்தில் பணம் கட்டி அதே பிரதியை மீண்டும் வாங்கி தாசில்தாரிடம் ஒப்புதல் பெற்றேன்.

நாம சும்மா இருந்தாலும் வாய் சும்மா இருக்காதுங்கிற கதையாய், ”சார் நான் எடுத்து வந்த பிரதியிலும் இதே தகவல்கள் தானே இருக்கிறது. அதில் ஏன் கையெழுத்து போட மறுத்தீர்கள்?” என்று கேட்டேன். நீங்க திருத்தி ஜெராக்ஸ் எடுத்து வந்துட்டீங்கன்னா? என்றார். கணினிப் பிரிவில் பிரதி எடுத்துத் தந்து தாசில்தாரிடம் நீங்களே போய் கையெழுத்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள், அதை வாங்கித் திருத்திக் கொண்டு வந்து தன்னிடம் ஒப்புதல் பெற்றுச் சென்று விட முடியும் என்ற ஞானம் கூட இல்லாத தாசில்தாரின் நம்பிக்கையைக் கண்டு நொந்து போய்விட்டேன்.

தாலுகா ஆபிசில் பணம் கட்டிப் பெறும் பட்டா சிட்டா பிரதியில் உங்களின் கையெழுத்தை வாங்கி அதன் பின்னர் உரியவர்களிடம் தருமாறு உங்களின் கீழ் பணிபுரியும் அலுவலர்களுக்கு நீங்கள் உத்தரவிட்டால் தவறு நடக்க வாய்ப்பே இருக்காது ஆபிசர்! நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும் பொய்க்காது!! என அவரிடம் சொல்வதற்கு ஒரு சாதாரணக் குடிமகனாய் தைரியம் போதாமல் போனதால் அமைதியாக வந்து விட்டேன்.