Saturday 23 April 2016

நினைவுகளை ஏந்திச் செல்லும் மனது!

 

தன் வேரடியின் மீது
தடம் பதித்த பேருந்தின் கூரையில்
கிளை உதறிய மலராய்
இன்னொரு வேரடி தேடி நீள்கிறது பயணம்.

முன்பு நான் எழுதிய ஒரு கவிதையின் அடுக்கக வரிகளுக்குப் பொருத்தமாய் பொருளாதாரத்திற்காக வேலை செய்ய வந்தடைந்த சிங்கப்பூரை விட்டு நாளை (24-04-2016) கிளம்புகிறேன். இப்படிக் கிளம்புவது இரண்டாவது முறை. புலம் பெயர் வாழ்வில் ஊர் எல்லைகள் தாண்டிய நட்பு வாய்க்கும். கொடுப்பினை இருந்தால் அது தொடரும். எனக்கு அப்படியான கொடுப்பினை அதிகம். அதனாலயே தேசம் கடந்து திரியும் நண்பர்களிடம் நேரடித் தொடர்புகள் இல்லாத போதும் நண்பர்கள் சூழ் உலகில் ஒரு ஒளிக்கற்றையாய் இன்றளவும் என்னால் பயணித்துக் கொண்டிருக்க முடிகிறது.

பொருளாதாரம் தேடி முதன் முதலில் அமீரகத்திற்குச் சென்றேன். தடுக்கி விழுந்தால் யாரோ ஒரு சொந்தக்காரரின் மீது விழ வேண்டியிருக்கும் என்று சொல்லும் படியாக உறவுகள் சூழ்ந்திருந்தாலும் நண்பர்கள் சூழவே அந்த வாழ்க்கையைக் கட்டமைத்துக் கொண்டேன். அங்கிருந்து தான் என் எழுத்து தன் கிளைகளை மெல்ல விரிக்கத் தொடங்கியது, முதல் நான்கு புத்தகங்களை அந்த மண்ணிலிருந்து கொடுத்தேன். வாழ்வியல் சிக்கல்கள் அங்கிருந்து வெளியேற வைத்த போது அது இன்னொரு புலம் பெயர்வுக்கான தொடக்கமாக இருக்கும் என நினைக்கவில்லை. ஆனால் விதி வலியது என்பதைப் போல அப்படித்தான் இருந்தது!

பிழைப்பிற்காகச் சிங்கப்பூரை நோக்கி நகர்ந்தவன் இங்கும் நண்பர்கள் சூழ் உலகையே எனக்காகக் கட்டமைத்தேன். இங்கு அமைந்த நண்பர்கள் எழுத்து சார்ந்து இயங்குபவர்களாக அமைந்ததும், தமிழ் ஒரு மொழியாக இருந்ததும், களமாட களங்கள் விரிந்து கிடந்ததும் உறங்கிக் கிடந்த எழுத்தாசைக்குத் தீனி போட ஆரம்பித்தது. வேலையிடத்தில் எனக்கு உயரதிகாரிகளாக இருந்தவர்கள், என்னோடு இணைந்து பணி செய்ய வேண்டியவர்கள், சக பணியாளர்களாய் இருந்த நண்பர்கள் அனைவருமே எனக்கான நேரத்தை என்னிடமே இருக்கும் படியாகப் பார்த்துக் கொண்டனர். நிர்வாகத்தின் உயர் பொறுப்பில் இருந்தவர்கள் எனக்குத் தந்த முழுச் சுதந்திரம் நேரம் வாய்க்கும் போதெல்லாம் எழுதிப் பார்க்க வைத்தது. அதன் விளைவு படைப்புகளின் எண்ணிக்கையும், நூல்களின் எண்ணிக்கையும் பெருகியது, இந்தக் காலகட்டத்தில் மட்டுமே ஏறக்குறைய இருபத்தைந்து நூல்களை எழுத முடிந்திருந்தது.

தமிழ் அமைப்புகளில் பங்கெடுப்பதைக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் துவங்கி இருந்தேன். ஒரு புதியவனாய் ஒவ்வொரு அமைப்பிற்குள்ளும் நுழையும் போதெல்லாம் அங்கு கிடைத்த நண்பர்கள் கொடுத்த உரிமையும், உற்சாகமும் தொடர்ந்து எழுத்தின் வழிச் செயல்பட உதவியது. பத்திரிக்கைகள், ஊடகங்கள் சார்ந்து இயங்கிய நண்பர்கள் என் படைப்புகளைப் பிரசுரித்து நான் அறியாத நண்பர்களுக்கும் என்னைக் கொண்டு சேர்த்தார்கள். சிங்கப்பூரில் தமிழ் சார்ந்து இயங்கும் எல்லா அமைப்புகளிலும், வெளிவரும் எல்லா அச்சு இதழ்களிலும் என் படைப்புகளால் பங்களித்திருக்கிறேன் என்றால் அதற்கு முழுக்க, முழுக்க நண்பர்கள் மட்டுமே காரணமாக இருந்தார்கள்.

அந்நிய மண்ணில் வேலை செய்பவர்கள் தங்களின் வேலை அனுமதியை நீட்டிக்காமல் தாயகம் செல்லும் போதெல்லாம்அடுத்து என்ன?” என்ற கேள்வியை எதிர் கொள்ள வேண்டி இருக்கும். அமீரகத்தை விட்டுத் தாய் மண்ணை நோக்கி நான்  கிளம்பிய போதும் இந்தக் கேள்வியை எதிர் கொண்டேன், அப்பொழுது இருந்த தெளிவின்மை இப்பொழுது இல்லை என்றாலும் நினைத்தது நடப்பதில்லை. நடப்பதற்காக நினைக்கவும் முடியாது!

வாழ்க்கை அதன் போக்கில் மட்டுமே நம்மைத் தீர்மானிக்க வைக்கிறதுஎன்று என் கல்லூரிப் பேராசிரியர் சொன்னதை நினைவூட்டும் விதமாக இந்தப் புலம் பெயர் முடிவு இன்னொரு புலம் பெயரலுக்கான ஆரம்பமா? எனத் தெரியவில்லை. எழுத்து ஒன்றை மட்டுமே விசிட்டிங் கார்டாக வைத்துக் கொண்டு அறிமுகமாகி இன்று உரிமையோடு எதையும் விவாதிக்கும் நண்பர்களாக மாறிப் போனவர்களிடமிருந்து இப்போதைக்கு நினைவுகளை ஏந்திச் செல்லும் மனதோடு எனக்கான நிறுத்தத்தில் இறங்குகிறேன்