அடுத்து என்ன செய்யப் போகிறாய்? என்பதற்கான பதில் உன்னிடம் இல்லாது போனதற்காக வருத்தப் படாதே. எதுவும் செய்யாமல் இருக்கப் போவதில்லை என்பதில் திடமாய் இரு. அது போதும்.
நேரத்தின் அருமை தெரியாதவனிடம் வழிகாட்டலைப் பெறக் காத்திருப்பதற்குப் பதி்லாக அதை வேறு வழிகளில் பெறுவதற்கு முயற்சி செய்.
உண்மையற்ற ஒன்றை வெகு இயல்பாய் சொல்ல ஆரம்பிப்பவனிடம் கவனமாய் இரு. அவனுடைய தந்திரங்கள் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் உன்னையவும் கூர் பார்க்கக் கூடும்.
உன்னைக் கடந்து போவதற்கும், நீ கடந்து போவதற்குமான வித்தியாசத்தை உணர்ந்து கொள். முன்னது அறிவுரை. பின்னது அனுபவம்.
எந்த வித அக்கறையுமின்றி இருப்பவர்களுடன் இணைந்து வேலைகள் செய்ய நேரும்போது கவனமாய் இரு. அப்படிப்பட்டவர்களால் உன்னுடைய திறன் மீது உனக்கே அவநம்பிக்கை உருவாகலாம்.
செய்கின்ற வேலையில் இருக்கும் கவனம் மீட்டெடுக்க முடியாத வகையில் சிதறுகிறது என எப்பொழுது நினைக்கிறாயோ அப்பொழுதே அந்த வேலையைச் செய்வதிலிருந்து நீயாகவே விலகி விடு,
நிறைகுடம் என்பது சுவராசியமல்ல. குறைகுடத்தைத் தொடர்ந்து நிறைகுடமாக்கும் முயற்சியே சுவராசியம்.
காரணமின்றி எவருக்காகவும் காத்திருக்காதே. அதற்காகச் செலவிடும் ஒவ்வொரு நாளும் பனிக்கட்டியின் மீது நின்று கொண்டிருப்பதற்குச் சமம்.
"துயரங்களால் ஆன வாழ்க்கை" - "துயரங்களைத் தூக்கிச் சுமக்கும் வாழ்க்கை" - இவைகள் இரண்டும் வெவ்வேறானவை. இதில் எந்த வாழ்க்கையை நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய் என்பதை முதலில் அடையாளம் கண்டு கொள்.
உனக்கான வேலையை இன்னொருத்தர் செய்ய சம்மதிக்கும் அதே நேரம் அந்த வேலைக்கான முடிவுக்கு நீயே பொறுப்பு என்பதையும் நினைவில் வைத்துக் கொள்.