படைப்பாளி தரும் படைப்பை பட்டி, டிங்கரிங் பார்த்து செழுமைப்படுத்துவதற்கான அனுமதியை அவரிடம் வாங்கி நூலாக்குவது ஒரு வித அவஸ்தை என்றால் அதை விட பெரிய அவஸ்தை அதற்கான வெளியீட்டு விழாவை நடத்துவது! ஒரு புத்தக வெளியீட்டு விழாவுக்கே நாக்குத் தள்ளி விடும் சூழலில் நண்பரும், கவிஞருமான ஏகலைவன் பதினைந்து புத்தகங்களுக்கான வெளியீட்டு விழா ஏற்பாடுகளை முன்னெடுத்திருந்தார். அலைபேசியில் பேசுந்தோறும் அது பற்றிய முன்னெடுப்புகளைச் சொல்லிக் கொண்டிருந்தவர் தீபாவளித் திருநாளன்று மகனோடு மத்தாப்பு கொழுத்திக் கொண்டிருந்த சமயத்தில் அழைத்தார். மேடையில் வெளியீடு காணும் நூல்களில் ஒன்றின் முதல் பிரதியை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியுமா? எனக் கேட்டார். அந்த அளவுக்கு நம்ம ஒர்த்தா? என உச்சந்தலையில் ஒரு மத்தாப்பு எரிந்தது. பிகுவெல்லாம் பண்ண வேண்டாம் என மனசு எச்சரிக்க மறுதலிக்காது ஒப்புக் கொண்டேன்.
விழா நாள் நெருங்க, நெருங்க தனியே பயணிக்க வேண்டிய துயரம் ஆட்கொண்டது. அதற்காகத் துணைக்கு அனுஷ்கா, நயன்தாராவை எல்லாம் அழைத்துக் கொண்டா போக முடியும்? அதற்கான வசதியும், வளமும் இல்லை. இந்த ஆதங்கம் இருக்கட்டும். துயரத்துக்குக் காரணம் பயண தூரம்! விழா அரங்கில் உட்கார்ந்திருக்கப் போகும் நேரம் மட்டுமே இடைநிறுத்தமாய் எனக்கு இருந்தது. மறுநாள் அலுவலகம் செல்ல வேண்டிய கட்டாயம். தனியே…………தன்னந்தனியே…………என்ற நிலையில் இருந்த பயண மனநிலையை, ”நீங்கள் மதுரையில் இருந்து லேனா சாரோடு சேலம் வருகிறீர்களா?” என்ற குறுஞ்செய்தியில் கொண்டாட்டமாக மாற்றினார் ஏகலைவன்.
”திண்ணையில் கிடந்தவனுக்கு திடுக்குனு மாப்பிள்ளை யோகம் வந்ததாம்” மாதிரி வந்த வாய்ப்பை பிடித்துக் கொண்டேன். விழாவிற்குச் செல்வதற்கு முதல் நாள் இரவில் புதிய நம்பரில் இருந்து வந்த அழைப்பில், ”நான் லேனா பேசுகிறேன். நாளை சரியாக பன்னிரெண்டு மணிக்கு வந்து விடுங்கள். என்னோடு மதிய உணவுக்கு இருக்கப் பாருங்கள். இருவரும் சேர்ந்து சேலம் செல்வோம்” என லேனா சார் சொல்ல அனுஷ்கா, நயன்தாரா துணையெல்லாம் நமத்துப் போக மனம் கொண்டாட்டத்தோடு பயனத்துக்கு ஆயத்தமானது.
மதுரையில் நேரமேலாண்மை பயிற்சி வகுப்பை லேனா சார் முடித்திருந்த நேரத்தில் நானும் அந்த அரங்கிற்குள் என்னை நுழைத்துக் கொண்டேன். பயிற்சியில் கலந்து கொண்டவர்கள் அவரைச் சூழ நின்றிருந்தவரின் அருகில் சென்று ஒரு வணக்கத்தை வைத்தேன். கடந்த வருடம் சிங்கப்பூருக்கு வந்திருந்தவரை விமானநிலையத்தில் வரவேற்கச் சென்றிருந்த போது சந்தித்திருந்தேன். சட்டென அடையாளம் கண்டு ”சரபோஜி தானே” என்றார். கட்டணம் செலுத்தி பயிற்சி வகுப்பை முடித்திருந்தவர்களோடு ”ஓசி”யில் நான் மதியச் சாப்பட்டை முடித்துக் கொண்டேன்.
லேனாவுக்கு நானே சாரதியாய் வருகிறேன் என ஓய்வு பெற்ற தாசில்தார் ஒருவர் வர லேனா சாரோடு நானும் இணைந்து கொண்டேன். பயணத்தின் இடையில், “சார்…….…நீங்கள் சொன்ன படி மூன்றை முப்பதாக்கும் இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறேன்” என்றேன். ”வாழ்த்துகள்” என கைகுலுக்குயவரிடம் என் நூல்கள் சிலவற்றை அவர் பார்வைக்குத் தந்தேன். ஆதாரம் முக்கியமில்லையா?
மதுரையிலிருந்து சேலம் வரைக்குமான பயணத்தில் அவர் கவனிக்கும் - கவனித்த விசயங்கள், உடைக்கும், உரைக்குமாய் நிகழ்வுக்கு முன் அவர் தயாராகும் விதம், தன்னோடு பயணிப்பவர்களின் வழி அவர் பெறும் தகவல்கள் என அங்குல அங்குலமாய் அவரின் செயல்பாடுகள் கற்றுத் தந்த பாடத்தை கிரகித்த படியே இருந்தேன். கறுப்புக் கண்ணாடி போடாத லேனா தமிழ்வாணனுடன்! அப்படியே ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா? எனக் கேட்கும் தைரியம் தான் வரவில்லை.
சேலத்திற்குள் நுழைந்ததும் நாங்கள் வந்த வாகனம் ஒத்துழையாமை இயக்கம் நடத்த லேனா சார் ஒரு ஆட்டோ பிடித்து நிகழ்வுக்குச் சென்றார். எங்களின் சாரதிக்கு ஒரு மெக்கானிக் கிடைக்கும் வரைக் காத்திருந்து விட்டு நானும் ஒரு ஆட்டோவைப் பிடித்தேன். அலைபேசி திரையில் அழைப்பிதழைக் காட்டினேன். போயிடலாம் என்றவர் போய்க் கொண்டே இருந்தார். விழா அரங்கிற்கிற்கான வழி தெரியாமல் ஆட்டோ டிரைவர் என்னை உட்கார வைத்து அழைந்து திரிந்தார். விழா அமைப்பாளர்களிடமும், ஏகலைவன் அவர்களிடமும் வழி கேட்டு வந்து சேர்ந்ததும் ஆட்டோ டிரைவர் கேட்ட வாடகை தான் விழி பிதுங்க வைத்து விட்டது. ”முந்நூற்றி ஐம்பது ரூபாய்” கொடுங்கள் என்றார்.
இராமநாதபுரத்தில் இருந்து சேலத்துக்கு பஸ்ஸிற்கே இவ்வளவு வராதே? ”சேலத்தில் இருந்து சேலத்திற்கு” முந்நூற்றி ஐம்பது அதிகமில்லையா? என்றேன். அதெல்லாம் இல்லை என்பதைப் போல ”முந்நூறாக் கொடுங்க” என்றார். கொடுத்துவிட்டு அரங்கிற்குள் நுழைந்தேன். அரங்கு நிறைந்த கூட்டம் இருந்தது. ”இருக்கைகள் விழாவைக் கண்டு இரசித்தன” என்ற துயரம் நிகழாமல் இருந்தது ஏகலைவனின் அன்பிற்கும், முயற்சிக்கும் கிடைத்த வெற்றியாகவே எனக்குப் பட்டது.
முகநூலில் மட்டுமே நண்பர்களாக அறிமுகமாகியும், அளவளாவியும் கொண்டிருந்த சேலம் தோழமைகளைச் சந்தித்துப் பேசிய பின் விடைபெறும் தருணத்தில் வரலாறு முக்கியம் என்பதற்காக ஒரு புகைப்படப் பதிவை எடுத்துக் கொண்டேன். லேனாசாரிடம் “உங்க அச்சு எழுத்துகள் எனக்கிட்ட இருக்கு. உங்க கையெழுத்து வேணும்” என அரங்கில் வாங்கிய ”வீழ்வதற்கல்ல வாழ்க்கை” என்ற அவரது நூலை நீட்டினேன். அவர் கையொப்பம் இட்டுக் கொண்டிருந்த போது அருகில் நின்ற ஒருவர் லேமினேசன் செய்த ஒரு சிறு துண்டுச்சீட்டை எடுத்து நீட்டினார். லேனா சாரோடு நானும் அசந்து போனேன். முன்னெப்போதோ இது மாதிரியான ஒரு நிகழ்வில் அவர் கையொப்பமிட்டுக் கொடுத்த சிறு காகிதம் அது! இப்படியான மனிதர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். நமக்கெல்லாம் அப்படியான மனிதர்கள் அமைவதில்லை. நாமும் அப்படி இருப்பதில்லை!
இன்னொரு முறை ஆட்டோ எடுத்து சேலத்தில் இருந்து சேலத்திற்கு முந்நூறு தர வசதி இல்லை என்பதாலும் மூன்று நாளாய் முதுகு வலிக்க வங்கி வாசலில் நின்று வாங்கிய நூறு ரூபாய் தாள்களை இழக்க மனமில்லாததாலும் தெளிவாக பஸ் ரூட் கேட்டுக் கொண்டதில் சேலத்தில் இருந்து சேலம் ஏழு ரூபாயில் முடிய குளிரை துணைக்கு வைத்துக் கொண்டு பிறந்த ஊர் வந்து சேர்ந்தேன்.