Monday 22 July 2019

படமும், பாடமும்!

நீண்ட நாள் கழிச்சு ஒரு டிராயிங் காம்படீசன் சொல்லியிருக்காங்க டாடி. பெயர் கொடுத்திருக்கிறேன் என்றான் மகன். கொடுத்திருந்த தலைப்புகளைச் சொன்னான்

எந்த தலைப்பு செலக்ட் செஞ்சிருக்க

"யோசிக்கனும்".

இது போன்ற விசயங்களில் படைப்பாளியின் முடிவு தான் முக்கியம் என்பதால் யோசனை ஏதும் நான் சொல்வதில்லை.

இரண்டு நாட்களுக்கு முன் நெட்டில் இருந்து சில படங்களை தரவிறக்கம் செய்து காட்டினான். அதோடு, தண்ணீர் இருந்தால் பூமி எப்படி இருக்கும்? இல்லாவிட்டால் எப்படி இருக்கும்? என ஒரே படத்தில் காட்ட நினைக்கிறேன் என்றான். அவன் சொன்ன விசயங்களோடு நானும் சில விசயங்களைச் சொன்னேன்

நேற்றிரவு அதை வரைந்து முடித்தவன் பார்டர் போடுவதற்காகவும், அவன் பெயரை எழுதுவதற்காகவும் என் டேபிளுக்குத் தந்திருந்தான். காலையில் பள்ளிக்குக் கிளம்பியவன் கையில் கொடுத்து BEST OF LUCK என்றேன்.

 "எப்படியிருக்கு டாடி"? "நிக்குமா?" என்றான்.

எங்கள் உரையாடலைக் கவனித்துக் கொண்டிருந்த மகள், "அதைப்பத்தி எல்லாம் கவலைப் படாதே. நம்முடைய பெஸ்ட்ட தரனும். அதை கொடுத்தாலே போதும். நிக்கும். அப்படியும் ஜெயிக்கலைன்னா உன்னைய விட இன்னொருத்தர் பெஸ்ட்டா யோசிச்சிருக்காங்கன்னு நினைச்சுக்க. That's all” என்றாள்

அவள் சொன்னதை ஆமோதிப்பதைப் போல சுற்றப்பட்டிருந்த படத்தை வாங்கி முழுமையாக விரித்து ஒரு முறை பார்த்தான். "நிக்கும்" எனச் சொல்லிக் கொண்டு மீண்டும் சுற்றி வைத்துக் கொண்டான்

அவள் அவனுக்குச் சொன்ன வார்த்தைகளை எனக்குமானதாய் பட்டது. அதை எனக்கு நானே சொல்லிக் கொள்ள வேண்டும் போல் இருந்ததால் மீண்டும் ஒருமுறை அவனிடம் அவள் சொன்னதை நானும் சொல்லி அனுப்பினேன்.

 


No comments:

Post a Comment