ரமா சுரேஷ் தமிழகத்தைப் பிறப்பிடமாகவும், சிங்கப்பூரை வசிப்பிடமாகவும் கொண்டவர். அவரின் முதல் சிறுகதைத் தொகுப்பு “உட்லண்ட்ஸ் ஸ்ட்ரீட் 81”. க.சீ. சிவக்குமார் நினைவுப் பரிசை வென்ற இச்சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் பதிமூன்று கதைகள் உள்ளன. லஷ்மி சரவணக்குமாரின் மோக்லி பதிப்பகம் இத்தொகுப்பைக் கொண்டு வந்திருக்கிறது.
படைப்பாளி நிகழ்வுகளை உருவாக்குவதில்லை. அவன் சந்திக்கும், பார்க்கும் மனிதர்களிடமிருந்து பெறும் நிகழ்வுகளைச் சித்திரமாக்கும் வேலையை மட்டுமே செய்கின்றான். அதற்குள் படைப்பாளி இட்டு நிரப்பும் கதாபாத்திரங்கள் வாசகனுக்குள் பாய்ச்சலையும், புகைச்சலையும் தரும் போது அந்தச் சித்திரம் தானாகவே உயிர் பெற்று எழுந்து கொள்கிறது. அதை சக வாசிப்பாளனுக்கும், இன்னொரு படைப்பாளிக்கும் வாசகன் அறியத் தருகின்றான். அப்படி வாய்க்கும் சந்தர்ப்பங்களே நம்மைச் சுற்றியிருப்பவர்களிடமும், சக மனிதர்களிடமும் அதுவரை நாம் கண்டிராத, அமிழ்ந்து கிடக்கும் அன்பையும், வன்மங்களையும் கண்டடைய உதவுகின்றன. அதனால் தான் காலம் கடந்தும், மொழி கடந்தும் சிறுகதைகள் பீனிக்ஸாய் எழுந்து கொண்டே இருக்கின்றன. இத்தொகுப்பில் அப்படி உயிர்பித்து எழும் கதைகள் இருக்கின்றன.
தன்னைக் கடந்து போனவர்கள், தான் கடந்து போனவர்கள் நினைவுகளோடு, நித்தமும் தான் கடந்து போகும் சாலையோடு நிகழ்த்தும் மானசீகமான உரையாடலே தொகுப்பின் தலைப்பாய் இருக்கும் “உட்லண்ட்ஸ் ஸ்ட்ரீட் 81” கதை. மூன்று நபர்களின் வழி மனித மனங்களின் மாச்சர்யங்களைச் சில கேள்விகளின் வழி முன்வைக்கிறார். சக மனிதர்களிடம் அடையாளப்படும் நாம் அதைத் தெரிந்து கொள்ள முனைகிறோமா? என்ற வரிகளை வாசித்துக் கடக்கையில் அக்கம், பக்கத்தவர்களிடம் நம் அடையாளம் என்னவாக இருக்கும்? என்ற நினைப்பு வந்து போகிறது. “பூனைக்கிழவி” என்ற கதை “உட்லண்ட்ஸ் ஸ்ட்ரீட் 81” கதையில் வரும் பூனைப்பாட்டியின் நீட்சியாக அவளின் அகவாழ்வியலைப் பேசுகிறது.
திருமணம் முடிந்து மஞ்சள் கயிற்றின் நிறம் மாறும் முன் விமானம் ஏறி சிங்கப்பூர் கப்பல் பட்டறையின் சுடு வெயிலில் உழல்பவர்களின் இல்லற துயரத்தைப் பேசுகிறது “சொர்ண புஷ்பம்” கதை. தாம்பத்யத்தை தவணை முறையில் வாழும் கணவன், மனைவிக்கிடையே எழும் குழந்தைக்கான ஏக்கம் – அதன் பொருட்டு நிகழும் நிகழ்வுகள் - அந்த ஏக்கம் சந்தோசமாக மாறும் தருணம் – அதைக் கொண்டாடும் மனம் - என எல்லாம் கடந்து பிறந்த தன் குழந்தையை அவன் பார்த்தானா? என்பதை வேலையிட நிகழ்வு சார்ந்த முடிவோடு சொல்லி இருப்பது சிறப்பு. நுண்ணிய அவதானிப்புகள் கதையை நம்மோடு இன்னும் இணக்கமாக்குகிறது.
நவீனத்தின் உச்சத்தில் எழும்பி நிற்கும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இளம் குற்றவாளிகள் உருவாவது தவிர்க்க முடியாத பிரச்சனையாகும். அவர்கள் தன் தண்டனை காலத்திற்குப் பின் எப்படி தன்னைப் பதியம் செய்து கொள்கிறார்கள்? என்பதே இவர்களைப் பற்றிய படைப்புகளுக்கான தளத்தைத் தருகின்றன. இத்தொகுப்பில் இருக்கும் “ஓர் இளங்குற்றவாளியின் சரித்திரம்” அப்படியான கதை. டீன் ஏஜ் வயதிற்குரிய சேர்க்கையால் திசை மாறுகிறான் மாறன். அப்படி மாறியவனின் வாழ்க்கையில் அப்பா, அண்ணன் இருவரின் இழப்பும், சிறைவாசம் தந்த விழிப்பும் தூண்டலாகவும், திறப்பாகவும் மாறுகிறது. வெறும் மாறன் வெற்றி மாறனாக மாறுகிறான். இக்கதையை வாசிக்கும் போது ஒரு தன்னம்பிக்கை கட்டுரையைக் கதையாக மாற்றி வாசிக்கும் உணர்வே மேலிடுகிறது.
சிங்கப்பூர் படைப்பிலக்கியத்தில் இளங்குற்றவாளிகள் கதைகளுக்கு ஓரிடம் எப்படியோ அதுபோல பணிப்பெண்கள் கதைக்கும் நீங்காத நிரந்தர இடம் உண்டு. இந்தத் தொகுப்பும் அதற்குத் தப்பவில்லை. .ஒவ்வொரு மனிதரிடமும் ஒரு குணம் இருப்பதைப் போல ஒவ்வொரு பணிப்பெண்னிடமும் ஒரு கதை இருக்கவே செய்கிறது. ராஜா என்ற நாயை கவனித்துக் கொள்ள வரும் ஒரு பணிப்பெண் எதிர்கொள்ளும் பிரச்சனையை முதலாளி – நாய் – பணிப்பெண் ஆகியோரின் உளவியலில் சொல்கிறது “ஆசோவின் கதை”
மாயா என்ற பெண்ணிடம் காதலனாய் ஒருவன் மயங்கி வருகிறான். ஒரு கட்டத்தில் அவளுடைய இயல்பும், ரசனையும் அவனை ஆச்சர்யமும், அச்சமும் கொள்ளச் செய்கிறது. ஆயினும் அவளோடு உடல் சார்ந்து இணைகிறான். அந்த நிகழ்வு நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே முன்பு ஒருமுறை தாயின் காதலனால் வன்புணர்வுக்கு உள்ளானதை மாயா நினைத்துப் பார்க்கிறாள். அப்படி நினைத்துப் பார்க்க என்ன காரணம்? அவளுடனான உடலுறவை முடித்த காதலன் அதன் பின் என்ன முடிவெடுத்தான்? என்ற இரண்டும் தான் ”மாயா” கதையின் நதிமூலம். ஆனால் அது நகர்ந்து செல்லும் பாங்கில் காதலனின் முடிவுக்குத் தரும் தீர்க்கத்தை, மாயாவின் நினைப்பிற்கும், அந்த நினைப்பு வரக் காரணமான முடிவுக்கும் வாகாய் தரவில்லை. கதையின் முடிவு கொஞ்சம் மிகையோ? என்ற நினைப்பு வராதவரை வாசித்துக் கடக்க முடியும்.
“ராட்சசி”, ”ரகசியம்” என்ற இரு கதைகளும் விளிம்புநிலை பெண்களின் கதைகளைப் பேசுகிறது. ஒரு தேநீர் கடையில் வேலை பார்க்கும் பெண்ணின் வாழ்நாளில் வந்து போனவர்களை “ரகசியம்” கதையும், பல ஆண்களுக்கு மத்தியில் ஒரு போகப் பொருளாய் வந்து போகின்ற ஒரு பெண்னின் கதையை “ராட்சசி” கதையும் அவர்களின் புற வாழ்வியல் வழியாகப் பேசுகிறது.
சிங்கப்பூர் இரயில் நிலைய நுழைவாயிலில் டிஷ்யூ பேப்பர் கட்டு விற்கும் ஒரு வயதான முதியவருக்கு தன்னை நோக்கி வரும் குழந்தைகளில் ஒன்றைக் கடத்தி தன் வறுமையைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. அந்த எண்ணம் தீவிரமடைந்திருந்த நாளில் அது எப்படி மடைமாறுகிறது? அவனை மடைமாற்றியது எது? என்பது பற்றி பேசும் கதை “டிஷ்யூ சூ ப்வூ”. தன் நண்பர்கள், மனைவியின் தோழி செய்யும் உதவிகளை “அக்கறையின்” வெளிப்பாடாக பார்க்கும் டிஷ்யூ சூ ப்வூ – வின் மடை மாற்றத்திற்கான “அன்பின்” காரணத்தை இன்னும் அழுத்தமாய் காட்டியிருந்திருக்கலாம்.
நடந்தேறிவிட்ட ஒன்றை எப்படி மாற்றி அமைப்பது? என புரியாத ஒருவன் தன்னைச் சூழந்திருக்கும் இருளை மற்றவர்களுக்கு வெளிச்சமாக்கிக் காட்ட சில விசயங்களை வலிந்து செய்கின்றான். தன் இயலாமையை - இல்லாமையே கோபக்காரனாக, அந்தரங்க சினிமா பார்ப்பவனாக, விபச்சார விடுதிகளின் தெருக்களில் சுற்றி வருபவனாக காட்டிக் கொள்வதன் மூலம் மறைக்க முயல்கிறான். அந்தப் போலித் தனம் அவனுக்கு உதவியதா? என்பது தான் “சாரல்” கதை. பிந்தைய பாராவுக்கு முந்தைய சில வரிகளிலேயே கதை முடிந்து போய்விடுகிறது. அதற்குப் பிந்தைய வரிகள் இட்டு நிரப்பிய குமிழாக இருக்கிறது.
வாசிப்பவனுக்குள் அக எழுச்சியை எழுப்பிடாத எந்த ஒரு படைப்பும் படைப்பாளிக்கும், வாசகனுக்குமான சாலையை மிகச் சரியாக இணைப்பதில்லை. அந்தச் சாலைப் பயணத்தை வாசகனுக்குரியதாக்குவதில்லை. மாறாக, அந்தச் சாலை வழியாகப் பயணித்த ஒரு அனிச்சையை மட்டுமே தருகிறது. இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளில் பல வாசகனுக்குரியதாய் இருக்கும் நிலையில் “மயிலி”, ”தகவமை” போன்ற கதைகளைத் தவிர்த்திருக்கலாம். பக்க வரையறைகளுக்காகவும், வெறும் சொற்கட்டுகளுக்காகவும் பிரயாத்தனங்கள் தேவையில்லை.
புராணக் கதைகளுக்கு எப்பவுமே ஒரு மவுசு இருக்கத்தான் செய்கிறது. கதை சொல்லும் நேர்த்தி, கதாபாத்திரங்கள் நிகழ்த்தும் அற்புதம், சுவராசியம் குன்றாத நகர்வு இம்மூன்றைத் தவிர அதற்கென பிரத்யேக காரணங்கள் ஏதுமில்லை. அந்த வகையில் மகாபாரதக் களத்தில் இரண்டாம் தலைமுறை “அபிமன்யூ” – க்கு எப்பொழுதுமே ஒரு சிறப்பிடம் உண்டு. கதையில் தன் கூற்றாய் படைப்பாளி இட்டு நிரப்பியிருப்பவைகளை நீக்கி விட்டால் “அபிமன்யூ” கதை ஒரு மீட்டுருவாக்கம் மட்டுமே!
கதையைச் சொல்லி முடித்து விட வேண்டும் என்ற அவசரம், கதை நகரும் பாதையைக் கண்டடைவதில் நிகழும் சிறிய பதற்றம் உள்ளிட்ட தளிராய் நிற்கும் சில தடுமாற்றங்களைத் தவிர்த்து விட்டால் நாய், பூனைகள், விளிம்பு நிலை மனிதர்கள், கடைநிலை ஊழியர்கள், விதியை வென்றவர்கள், விதியால் வாழ்வை இழந்தவர்கள் ஆகியோரின் அக வாழ்வியலின் ஒப்புதல் வாக்குமூலமாக இத்தொகுப்பு சுடர் விடுகிறது. உவமை, ஒப்பீடு, வழமையான கதை சொல்லும் முறை என எந்தச் சட்டத்தையும் இட்டுக் கொள்ளாமல் கதாபாத்திரங்களின் உரையாடல்களே காத்திரமாய் கதைகளுக்குள் ஊடுபாய்கின்றன. “குறி”யீடாய் முன் அட்டையில் தொடங்கும் இந்தத் தொகுப்பின் கதைக்களங்களும், கதை சொல்லப்பட்டிருக்கும் முறையும் புதியதொரு வாசிப்பனுபவத்தை நிச்சயம் தரும்.
நன்றி : நடுகல்
//வாசிப்பவனுக்குள் அக எழுச்சியை எழுப்பிடாத எந்த ஒரு படைப்பும் படைப்பாளிக்கும், வாசகனுக்குமான சாலையை மிகச் சரியாக இணைப்பதில்லை.// - சிறப்பு
ReplyDeleteதமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக எட்டு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது அகச்சுடரின் ஆலாபனை! பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.
உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்
எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்
பொதுவாக வாசகனுடைய அனுபவங்களுடன் ஒரு வகையிலாவது ஒத்துப்போகும் படைப்புகள் அந்த வாசகனால் சிலாகிக்கப் படுகின்றன.
ReplyDelete