Monday, 26 November 2012

துளிப்பாக்கள்

தோல் உரித்து
உயிர் பெறுகிறது.
பென்சில்.
---------------------------------
உயிரற்ற பொம்மை
கதை கேட்டு தூங்குகிறது.
குழந்தை விளையாட்டு.
---------------------------------
கூடவே வருகிறது
கருப்பு வெள்ளை நகல்.
நிழல்
------------------------------------
விசேஷ வீடுகளில்
அழையா விருந்தாளிகள்.
செருப்புகள்.
--------------------------------------
கடலின் அழைப்பை
மீற முடியவில்லை.
திரும்பி ஓடும் அலைகள்.
----------------------------------------

நன்றி : தமிழ் ஆதர்ஸ்

Sunday, 25 November 2012

வன்மம்


இடறி விழும்
உன் ஆசைகளுக்கான
காரண ஈறுகளை
பேனாய்
பெருமாளாய் பருமனாக்கி
எப்பொழுதும்
என் மீது
உமிழ்ந்து செல்ல
உனக்கு கிடைத்து விடுகிறது

நீ ராசியில்லாதவள்
என்ற ஒற்றை வரி.

நன்றி : கீற்று

Saturday, 24 November 2012

நோபல் சிகரம் தொட்ட இந்தியர்கள்


உலகின் உன்னத விருதுகளுள் ஒன்றாக மதிக்கப்படும் விருது நோபல்! அவ்விருதை உருவாக்கியவர் மற்றும் அது உருவானதன் பிண்ணனியோடு ஆசியா கண்டத்திலேயே இவ்விருதை முதலில் பெற்றவரான தாகூரில் தொடங்கி இதுவரை அவ்விருதை வென்றுள்ள இந்தியர்கள், அவர்களின் சிறப்புகள் மற்றும் அவ்விருதினை அவர்கள் வெல்வதர்கு காரணமான விசயங்கள், கண்டுபிடிப்புகள் ஆகிய அனைத்து தகவல்களும் மிக, மிக எளிய நடையில் அனைவருக்கும் புரியும் வகையில் சொல்லப்பட்டுள்ளது. தவிர, வருடந்தோறும் வழங்கப்பட்டு வரும் இவ்விருது பற்றிய சுவராஸ்யமான தகவல்களோடு இவ்விருது வழங்குவதில் புரியாத புதிராக இருந்து வரும் சில தகவல்களையும் கொண்டுள்ள நூல்.

Monday, 19 November 2012

பரஸ்பரம்

சுமந்தவர்களின்
சந்தோசத்திற்காக
சுற்றம் சூழ
வாக்கப்பட்டோம்.
தாம்பத்தியம்
நடப்பதாய் சொல்ல
வாரிசுகளையும்
பெற்றுக் கொடுத்தோம்.
பெற்றதில்
அவர்களுக்கு சந்தோஷம்
கொடுத்ததில்
நமக்கு சந்தோஷமா?
குருதிகளின்
கூட்டல்களுக்காக
குற்றச்சாட்டுகளை ஏன்
பரிசளித்துக் கொள்வானேன்?
ஊருக்கும், உறவுக்குமான
வேசத்தைக் கலைக்காமலே
கணவன் ,மனைவியாய்
கட்டிலுக்கு இருப்பதை விட…..
நீ…….நீயாகவும்
நான்……நானாகவும்
தோள் தூங்கும் நம் குழந்தைகளுக்கு
தோழமையாய் இருப்போம்!

நன்றி : வல்லமை

Friday, 16 November 2012

இசைப்பயணம்

மூங்கிலாய்
முளைத்து எழுந்ததில்
முடங்கியது என் விதி

முறித்து விறகாக்காது
புல்லாங்குழலாக்கியதில்
புலர்கிறது உன் மதி

என் விதியை
உன் மதியால் வெல்ல முடியும்
என நம்புகிறேன் நான்

நீயும் நம்பினால்
உன்னோடு நானும்
என்னோடு நீயுமாய்
இணைந்து பயணிப்போம்
இசைப் பிரவாகமாய்

நன்றி : அதீதம்

Thursday, 15 November 2012

திருப்பலி


அவன்
அவள்
அவர்கள்ஆனது.

போடா
போடி
போங்கள்ஆனது.

நான்
நீ
நீங்கள்ஆனது.

திருவளர் செல்வன்
திருவளர் செல்வி
திருவாளர்ஆனது.

திருமணம் தந்த
இந்த திருத்தங்களுக்கு
திருப்பலியானது
இரு மனங்களின்
உணர்வுகளும், விருப்பங்களும்.

நன்றி : கீற்று

வின்ஸ்டன் சர்ச்சில் 100

      
    
வின்ஸ்டன் சர்ச்சிலைப்பற்றி தனிப்பட்ட சுவராஸ்யமான தகவல்கள் தொடர்பாக வெளிவந்துள்ள நூல்கள் தமிழில் மிகவும் அரிது. ஏற்கனவே வெளியாகியுள்ள ஒன்றிரண்டு நூல்கள் கூட இரண்டாம் உலகப்போரின் ஊடாகவே அவரை அடையாளப்படுத்துகின்றன. இந்நிலையிலிருந்து விலகி தனிப்பட்ட, சுவராஸ்யமான நிகழ்வுகளை உள்ளடக்கிய வாழ்க்கை வரலாற்றை  “வின்ஸ்டன் சர்ச்சில்100” எனும் இந்நூலில் சர்ச்சிலைப் பற்றி  விரிவாகவும், நேர்த்தியாகவும் தொகுத்திருக்கிறார் இந்நூலசிரியர்.
 - நக்கீரன்


   

காதல் கவசம்

இடையில் கோர்த்து
நெருக்கத்தில் அமர்ந்து
இடைவெளியற்ற இருத்தலில்
கடந்து போகும் இரு சக்கரவாகனத்தில்
பகடியாடித் திரிகிறது காதல்
தலைக் கவசம் 
கட்டாயமான பின்!

நன்றி : முத்துக்கமலம்

Monday, 12 November 2012

உள்ளங்கையில் உலகநாடுகள்




ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள நாடுகளின் பெயரில் தொடங்கி அந்தந்த நாடுகளின் சிறப்புகள் வரையில் உலக நாடுகளைப் பற்றிய அனைத்து தகவல்களையும் கொண்டுள்ள இத் தொகுப்பு பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கும், அனைத்து போட்டித்தேர்வு எழுதுபவர்களுக்கும், வினாடி-வினா, குவிஸ் போட்டிகள் நடத்துவதற்கும் உதவும் பயனுள்ளநூல்.




Friday, 9 November 2012

ஊனமான ஆண்மை

கூந்தல் கருமேகம்
நெற்றி நிலா
புருவம் பிறை
விழி மீன்
நாசி கிளி
வாய் கோவைப்பழம்
பல் முத்து
கழுத்து சங்கு
தனம் கவிழ்ந்த மலை
இடை கொடி
தொடை வாழை

இப்படியான உருவகங்களால்
ஊனமாகிப்போனது
உன்னையும்
தன்னைப் போன்றதொரு
சக மனுசியாய் மதிக்காத
என் ஆண்மை தனம்.

நன்றி : வல்லமை



Wednesday, 7 November 2012

ஜன்னலைத்திற ஜெயிப்பது நிஜம்



வாழ்க்கையை எவ்வளவு சிக்கல்களுக்கிடையிலும் நம்மால் நகர்த்திக் கொண்டு போக முடிவதற்கு காரணம் நம்பிக்கை. அதை நம் வாழ்வின் அன்றாட நிகழ்வுகள் கற்றுத்தந்து கொண்டிருப்பதைப் போலவே நம்மைச் சுற்றி இருக்கின்ற சிலருடைய வாழ்க்கையும் கற்றுக் கொடுக்கின்றன. அப்படியான பல நம்பிக்கை நிகழ்வுகளை உள்ளடக்கி வாழ்க்கையில் வெற்றி பெறத் துடிப்பவர்களுக்கு தேவையான வழிமுறைகளைச் சொல்லும் இந்நூல் சுய முயற்சி இல்லாதவர்களைக் கூட துள்ளியெழச் செய்யும்.

- பதிப்பகத்தார்



Monday, 5 November 2012

நிம்மதி தேடி

செருப்பை
எங்கு மறைவாய் வைப்பது?

அர்ச்சனையை
யார் பெயருக்கு செய்வது?

உடைக்க வாங்கிய தேங்காய்
எப்படி இருக்கப் போகிறது?

தட்டோடு நிற்பவர்களுக்கு தர
எவ்வளவு சில்லரை இருக்கிறது?

இப்படியான குழப்பங்களோடு
நிம்மதி தேடி
சந்நிதி நுழைந்ததும்
அர்ச்சகரின் குரல் ஒலித்தது

நடை சாத்தி
நாழியாயிற்று.

நன்றி : திண்ணை