Thursday, 17 October 2013

தீராக் காதல்


தாயின் தாலாட்டுக்குப் பின்
எங்களின் துயிலுக்கு
இறவாப் பாடல்களால்
தாலாட்டு பாடியவனே.

உடல்கூடும் காமத்தோடு
மனம் கூடும் காதலையும்
கடலளவு கற்றுத் தந்தவனே.

பிறர் மதத்தை இடித்துரைக்காமல்
தன் மதம் குறித்து
அர்த்தமுள்ள இந்து மதம்தந்தவனே.

மாற்றான் தோட்டத்து
மல்லிகைக்கும் மணமுண்டு என
இயேசு காவியம்படைத்தவனே.

எங்கள் வாழ்வியல் தரிசனங்களுக்கு
உந்தன் வாழ்நாளிலேயே
தத்துவங்கள் தந்தவனே.

உண்மை சொல்ல அஞ்சாமல்
நாங்கள் ஆளாக உன் சுயசரிதையால்
அனுபவங்களை அளித்தவனே.

கவிகளுக்கெல்லாம் அரசனே
எங்கள் கண்ணதாசனே.

நீ வளர்ந்தும்
உன் நிழலில் வளரவைத்தும்
கவி உலகையும்
காப்பிய பரப்பையும் பலரால் நிரப்பினாய்.

உன்னால் உயர்ந்து
முகவரி பெற்றவர்கள்
உன்னை மறக்கலாம்.

நாங்களோ
சூனில் மட்டுமல்ல - ஒவ்வொரு
சூரிய உதயத்திலும் நினைக்கிறோம்.

உன்னையும் - உன்
கை” “ மைபட்டு
கன்னி கழிந்த
கவிதைகளையும்
காப்பியங்களையும்
தீராக் காதலோடு திசை எங்கும்!


நன்றி : தமிழ்முரசு நாளிதழ்