இப்போது அது நிகழச் சாத்தியமற்ற நினைவு
ஒரு காலத்தில் அதுவே
நிஜத்தின் நகலாய் நடமாடிக் கொண்டிருந்தது
ஒரு மழைக்கால இரவில்
மையல் கொண்டிருந்த அமைதியை
சூழ் கொண்ட அந்த நினைவு
சர்ப்பத்தின் புனைவாய் மேல்நோக்கி
எழும்பி ஆட ஆரம்பித்தது
வரிசைக்கிரகமாய்
தேர்வு செய்து தேர்வு செய்து
தேர்வெழுதும் மாணவனாய்
எல்லாவற்றையும் செருகிக் கொண்டே வந்தேன்
பனிக்கட்டிகளோடு உள்ளிறங்கும் மதுவாய்
மனதையும் உடலையும் நனைத்துப் போன நினைவு
உள்ளிறங்கி லயிக்க ஆரம்பித்த கணம்
திடீரென முகத்தில் அறைந்த காற்றாய்
பால் கூப்பனுக்கு காசு என்று
அறைக்கதவை தட தடக்க வைத்தாள் மனைவி
அம்மாவுக்கு தெரியலையாம்
நீ சொல்லிக்கொடு என
கணக்கு நோட்டோடு பாய்ந்தாள் மகள்
புணர்நிலையில் நின்ற நினைவு
கழட்டி எறியப்பட்ட ஆடையாய்
மருண்டு உருண்டோடியது
அடுத்த முறையாவது
அந்த நினைவு ரசத்தை பருக
முழுதாய் ஓரிரவை
ஒதுக்க வேண்டும் என்ற சங்கல்பத்தோடு
மூடியிருந்த போர்வையை அகற்ற
விடியலின் புறம் பாய்ந்த நிஜ கதிர்கள்
வெளிச்சம் பாய்ச்சி போனது என் முகம் நோக்கி.
நன்றி : மலைகள்