Thursday, 16 July 2015

மூத்த படைப்பாளிக்கு

தமிழ்கலை  மனமகிழ் மன்றம் தஃபர்ரஜ் (TAFAREG)  – ரியாத் - சவுதி அரேபியா என்ற  அமைப்பால் நடத்தப்பட்ட எழுதுகிறேன் ஒரு கடிதம் – முகநூல் கடிதப் போட்டிக்கு   எழுதிய கடிதம்
----------------------------------------------------------------------------------------------------------------------------

என் மண்ணின் மைந்தரும், மூத்த படைப்பாளியுமான திரு. ஹிமானா சையத் சார் அவர்களுக்கு. வணக்கம். 

இரமலான் நோன்பு வாழ்த்துகள்.

“அன்பு, நட்பு, உறவு எல்லாம் பூர்வ ஜென்மத் தொடர்பு” என கீதை கூறுவதைப் போல ஏறக்குறைய பதிமூன்று ஆண்டுகளுக்குப் பின் உங்களை முகநூல் வழி அறிந்து மீண்டும் தொடர்பு கொண்டேன். நேரில் சந்தித்து பேச வேண்டும் என நினைத்தாலும் வேலை நேரச் சூழலால் தங்களைச் சந்திக்க முடியாத நிலையில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

என்னுடைய புதிய தன்னம்பிக்கை நூல் ஒன்று இந்த வருடக் கடைசியில் வர இருக்கிறது. இருபத்தேழு நூல்களை எட்டி விட்ட நான் என் முதல் நூலை வெளியிடுவதற்கு முன் உங்களைச் சந்திக்க வந்தது நினைவிற்கு வருகிறது. அப்பொழுது நீங்கள் சித்தார் கோட்டையில் இருந்தீர்கள். பனைக்குளத்தில் இருந்த உங்கள் கிளினிக்கில் சந்திப்பதற்காக நண்பனுடன் வந்திருந்தேன். புத்தகம் பற்றிப் பேச வேண்டும் என்றதும் வீட்டிற்கு வாருங்கள். பேசலாம் என்றீர்கள். பதிப்பாளராய், பல நூல்களின் ஆசிரியராய், பல்கலைக்கழகப் பாடங்களைத் தன் படைப்புகளால் நிரப்பியவராய், பள்ளிக்கூட நிர்வாகியாய், மருத்துவராய், பத்திரிக்கை ஆசிரியராய், நாடு விட்டு நாடு போய் பேசும் பேச்சாளராய் பன்முகத்தன்மையில் செயல்பட்டுக் கொண்டிருந்த உங்களிடம் இவ்வளவு எளிதாக  பேச எனக்கு வாய்ப்பு அமையும் என நான் அப்போது நினைத்திருக்கவில்லை.

இரண்டு நாட்கள் கழித்து உங்கள் வீட்டிற்கு வந்த போது வீட்டின் நடுக் கூடத்தில் அமர வைத்து என்னோடு பேச ஆரம்பித்தீர்கள். சட்டை அணியாது பனியன், கைலி என மிகச் சாதாரண உடையில் உங்களுக்கு நிகராய் என்னை அமரவைத்து நீங்கள் என்னோடு பேசிக் கொண்டிருந்தது மனதில் இன்னும் காட்சிகளாக இருக்கிறது. கொஞ்சம் கவிதை எழுதி இருப்பதாகவும் அதை நூலாக வெளியிட ஆலோசனை வேண்டும் என்றும் சொன்னதோடு ஆர்வக்கோளாறில் நூலக ஆர்டர் பெறுவது உள்ளிட்ட பல கேள்விகளையும் கேட்டேன். எல்லாவற்றிற்கும் பொறுமையாகவும், புரிந்து கொள்ளும் படியாகவும் பதில் சொன்னீர்கள். அதன் பின்னர் ”எழுத்து என்பது நல்ல விசயம். அது யாருக்கும் அவ்வளவு எளிதாக வராது. உங்களுக்கு வருகிறது. அதை விடாமல் செய்யுங்கள். ஆனால் அதை மட்டும் வைத்துக் கொண்டு வாழ்க்கையை வாழ முடியாது. வாழ்க்கையை சிரமமின்றி வாழப் பொருளாதாரம் முக்கியம். அதைவிடவும் எழுத்தாளனுக்கு அந்தஸ்து முக்கியம். பாலகுமாரனாகவே இருந்தாலும் அவர் காரில் போனால் தான் மதிப்பு என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எதார்த்த வாழ்க்கைக்கு பணம் முக்கியம் என்பதால் நிரந்தர வருவாய்க்காக ஒரு வேலையைத் தேடிக் கொள்ளுங்கள். அதனோடு சேர்த்து எழுத்துப் பணியையும் செய்யுங்கள்” எனச் சொன்னீர்கள். அந்த வார்த்தைகள் தான் என்னை இன்று ஒரு உயர் நிலைக்கு கொண்டு வந்தது என்பதை இப்போது உணர்கிறேன். ஒருவேளை நீங்கள் அன்று இன்றைய எதார்த்தத்தை சொல்லாது போயிருந்தால் எழுத்தார்வத்தில் நிரந்தர வருவாய்க்கான வழிகளைக் கண்டடையாது போயிருப்பேன். அது எழுத்தின் மீதான என் ஆர்வத்தையே கூட நசிந்து போக வைத்திருந்தாலும் ஆச்சர்யமில்லை.

அதேபோல, சொந்தமாகப் புத்தகங்கள் கொண்டு வருவதில் இருக்கும் சிரமங்களைச் சொல்லி பதிப்பாளர்கள் மூலம் கொண்டு வர ஆலோசனை தந்தீர்கள். சொந்தக் காசைப் போட்டு எந்தக் காலத்திலும் புத்தகங்களை வெளியிட முனையாதீர்கள் என நீங்கள் சொன்னதை இன்று வரை பின்பற்றி வருகிறேன். என் எல்லா நூல்களையும் பதிப்பகங்கள் மூலமாகவே கொண்டு வந்தேன்.

உங்களுக்கு நினைவிருக்கிறதா? எனத் தெரியவில்லை என்னுடைய முதல் நாவலான துரத்தும் நிஜங்களுக்கு உங்களிடம் அணிந்துரை கேட்டிருந்தேன்.. ஆனால் அதை வந்து வாங்குவதற்கு நான் ஊரில் இல்லாத சூழலில் நீங்களே என் நண்பர் மூலமாக அணிந்துரையைப் பதிப்பகத்துக்கு  அனுப்பிக் கொடுத்தீர்கள். இத்தனை வருடமாகியும் அதற்கு நான் நன்றி சொல்லவில்லை. அதற்காக மன்னியுங்கள்.

விரைவில் நேரில் சந்திக்க வருகிறேன். உங்களைப் பற்றி பேசும்போதும், எழுதுபோதும் நீங்கள் என் நண்பர் என்று நான் சொல்லிக் கொள்வதில் எனக்குள் எப்பொழுதும் ஒரு திமிர் இருக்கும். அப்படியான திமிருடனும், தீரா அன்புடனும்…….

-     மு. கோபி சரபோஜி